‘பாஜககாரரான’ ராமசுப்பிரமணியனின் பேட்டி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் கடுமையாக பாஜகவின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து “நாட்டை குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள்” என சாடியிருந்தார். அது மட்டுமல்ல, “வேல் யாத்திரை என்பது வெறும் ஸ்டண்ட், உண்மையான பக்தி கொண்டவர்கள் இப்படி கடவுளை வைத்து பிரிவினைவாதம் வளர்க்க மாட்டார்கள்” என்று வேறு சொன்னார். இது போதாதென ஸ்டாலினை ஆதரித்து பல முறை பேசினார். அது கூடப் பரவாயில்லை, “ராகுல் வெள்ளாந்தியான மனிதர். மக்கள் ஆதரவு அவருக்கு உள்ளது.” என்றும் சொன்னார். அதாவது எதையெல்லாம் ஒரு பாஜககாரர் சொல்ல மாட்டாரோ அத்தனையையும் சொன்னார்.
அண்மையில் எஸ்.வி சேகரும் இப்படித்தான் “நான் கடந்த சில வருடங்களாக கட்சியில் இருந்து விலகி இருக்கிறேன். முருகனை இரண்டு முறை போனில் அழைத்தால் எடுக்கவில்லை. நீங்கள் பார்த்தால் சொல்லுங்கள்.” என பரிதாபமாகக் கூறினார். அத்துடன் அவரது பேச்சிலும் ஒருவிதமான காவி சாயம் பூசிய முற்போக்குத் தன்மை (வேறெப்படி சொல்வது) வந்திருப்பதை கவனித்தேன். சாதி, மத பிரிவினைகள் இன்றி சமத்துவமாக நிம்மதியாக போய் விடுவோமே என அமைதிக் கொடியை அசைத்தபடி அவர் பேசுவதை கோட்ஸே கேட்டால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு செத்துப் போய் விடுவார்.
இவர்களைப் போல வேறு பலரும் தமிழக பாஜகவில் இருக்கக் கூடும் – பதவி கிடைக்காத வெறுப்பில், தம் சமூகத்துக்கு அதிகாரப் பங்கீடு இல்லாத கசப்பில் பொருமுகிறவர்கள் இவர்கள். தாம் இதுவரை பேசி வந்த கருத்துக்களுக்கு, ஆதரித்து வந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக ஒரு திடீர் யு-டர்ன் எடுத்து டிராபிக்கை குழப்புகிறவர்கள் இவர்கள். எந்த கட்சியிலும் இருப்பார்கள் இவர்கள். ஆனால் கடுமையான சித்தாந்த கட்டுப்பாடு கொண்ட கட்சி என அறியப்படுகிற பாஜகவிலே இவர்கள் இருக்கிறார்கள் என்பதே சுவாரஸ்யம். தமிழகத்தில் பாஜக சற்று பலவீனமாக இருப்பதால் அவர்கள் வெளிப்படையாக பேசுகிறார்கள். ஆனால் பாஜக கோலோசுக்கும் மாநிலங்களில் போலியான ராணுவ ஒழுங்குடன் இவர்கள் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆட்சி மாறினால் “நான் வெறும் டம்மி பீசுப்பா” என வடிவேலுவைப் போல காலில் விழுந்து விடுவார்கள்.
இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பாஜக இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு திடீரென எங்கிருந்தோ ஏகப்பட்ட சங்கிகள் நம்மைச் சுற்றி தோன்றி விட்டனர். ஊடகங்களில், காவல் துறையில், நீதித்துறையில், எங்கெங்கும் இவர்கள் வெளிப்படையாகவே ஆளுங்கட்சியை ஆதரித்து அரசியல் செய்கிறார்கள். தனியார் வேலையிடங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் பேசினால் அவர்கள் நிர்வாகத்தால் எச்சரிக்கப்படுவதை, அல்லது வேலை நீக்கம் செய்யப்படுவதை பார்க்கிறோம். அரசியல் களத்திலும் வாராவாரம் யாராவது ஆளுங்கட்சிக்கு தாவிக் கொண்டிருக்கிற செய்திகளைப் பார்க்கிறோம். அரசு சிறுபான்மையினருக்கு எதிராக சட்டம் இயற்றும் போது அதை சிறுபான்மையினரே முதலில் இறங்கி ஆதரித்து பேசுவதையும் பார்க்கிறோம். தமிழகத்தில் இரண்டு சதவீதம் கூட வாக்குகள் இல்லாத பாஜகவுக்கு ஆதரவாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்த வாக்குசதவீதத்தை விட பல மடங்கு அதிகமானோர் கருத்து தெரிவிப்பதை, கூவி ஆர்ப்பரிப்பதைக் காண்கிறோம். தமிழில் முன்பு முற்போக்காக பேசி வந்தவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிப்படையாக பிற்போக்கு ‘அறிவுஜீவிகளாகி’ விட்டதை பார்க்கிறோம். இதைப் பார்க்கும் போது ஒட்டுமொத்த இந்தியாவும் இந்துத்துவாவுக்கு அடிபணிந்து விட்டதை போல ஒரு சித்திரம் ஏற்படுகிறது. ஆனால் ராமசுப்பிரமணியன் போன்றோரின் யு-டர்னைப் பார்க்கும் போது இது முழுக்க உண்மையல்ல எனத் தோன்றுகிறது. இந்துத்துவாவை ஏற்காமலே அதை வெளிமுகமாக ஆதரிக்கிறவர்கள் இன்று பலமடங்கு பெருகி விட்டார்கள்.
இதற்கான காரணங்களாக நான் கீழ்வரும் விசயங்களைப் பார்க்கிறேன்:
1) அதிகாரம், பணம் போன்ற நேரடியான அனுகூலங்கள், பிரதிபலன்களுக்காக கூடுவிட்டு கூடு தாவும் வித்தகர்கள் இவர்கள். பாஜக ஆட்சியை இழந்ததும் எந்த சித்தாந்தம் நிலுவையில் இருக்கிறதோ அதற்கு ஏற்ப தம்மை சுலபத்தில் மாற்றிக் கொள்வார்கள். பாஜக ஆட்சிக்கு வருமுன்பு வெளிப்படையாக இந்துத்துவாவை ஆதரிக்காத அத்தனை பேரையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
2) சமகால அரசியலில் எழுச்சி என்பது உண்மையானது அல்ல. ஜெர்மனியில் மக்கள் தீவிரமாக, தயங்காமல் ஹிட்லரின் பாசிசத்தை, இனவாத வெறுப்பரசியலை ஏற்றுக் கொண்டார்கள் என சிலர் வரலாற்றாசிரியர்கள் சொன்னார்கள். ஆனால் வேறு சில ஆய்வுகளோ அந்த காலத்திலே ஹிட்லர் மீது அதிருப்தியும், எதிர்ப்புணர்வும் கொண்ட மக்கள் இருந்தார்கள், அதே நேரம் அவர்கள் பொதுவெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் நாஜிக் கொள்கையின் ஆதரவாளர்களாக, “ஹெய்ல் ஹிட்லர்” என கூவுகிறவர்களாக இருந்தார்கள் எனக் கூறுகின்றன. ஏனென்றால் அவர்கள் தம் சக-குடிமக்களை நகலெடுக்கும்படி வற்புறுத்தப்பட்டனர். ஏனென்றால் தமக்கு வேறு தேர்வில்லை (choice) என அவர்கள் அப்போது நம்பினார்கள். இது உண்மையெனில், ஹிட்லரின் நாஜிக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் அவர்கள் எனில், ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு அங்கு அடுத்தடுத்து ஹிட்லர்கள் வந்திருக்க வேண்டுமே. ஏன் இறுதி வரை ஹிட்லரை எதிர்க்காத ஜெர்மானியர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் வெளிப்படையாக நாஜிக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கவில்லை? ஏன் மற்றொரு ஹிட்லரை அவர்கள் உருவாக்கவில்லை? அதை விட முக்கியமான கேள்வி உண்மையான சித்தாந்த மனமாற்றம் தானா நாஜிக் கட்சியின் வெற்றிக்கு காரணமாகியது என்பதே.
காங்கிரஸைப் போல் அல்லாத, பாஜக ஒரு சித்தாந்த ரீதியான கட்சி. அவர்கள் நம்புவதை நிறைவேற்றவே பிரதானமாக ஆட்சிக்கு வருகிறார்கள் (அதிகார, பண வெறியும் உண்டெனினும் அவர்களுடைய செயல்பாடுகளை அதிகம் தீர்மானிப்பது லட்சியம் தான்.) ஆனால் அவர்களுக்கு பெரும்பான்மையான இடங்களை நாம் அளித்து ஆட்சிக்கு கொண்டு வந்ததும் அத்தனை பேரும் இந்துத்துவர்கள் ஆகி விடுவதில்லை. இரண்டாம் முறை அவர்கள் ஆட்சிக்கு வந்து தம் அதிகாரப் பரவலை வெளிப்படையாகக் காட்டும் போது, சர்வாதிகாரத்தின் அக்டோபஸ் கரங்கள் பொதுமக்களின் வாசல் வரை நீளும் போது, மக்கள் ஒரு பிரதமரை ஒரு கடவுளைப் போல வழிபடுவதை ஊடகங்கள், நீதித்துறை உள்ளிட்ட அத்துணை நிறுவனங்களும் ஊக்குவிக்கும் போது மக்கள் ஒரு ஜெராக்ஸ் மெஷினைப் போல தம்மை தொடர்ந்து ஆள்பவரின் சாயலில் பிரதியெடுத்துக் கொள்கிறார்கள்.
இப்படியான அரசியல் அலையுடன் ஒப்பிடத்தக்க மற்றொன்று பக்தி. எனக்குத் தெரிந்த ஏகப்பட்ட பக்தர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நாத்திகம் பேசுகிறவர்கள் கூட குடும்பத்திலோ நண்பர் குழாமிலோ கோயிலுக்கு சென்றால் கூட செல்ல தயங்க மாட்டார்கள். குடும்பம் என்பது ஒரு அடிமை அமைப்பு என நினைகிற எத்தனையோ பெண்ணியவாதிகள் தயங்காமல் திருமணம் செய்வதில்லையா? அதனால் அவர்கள் அந்த அமைப்பை ஏற்பதாக அர்த்தமாகுமா?
ஒரு அலை என்பது ஒரே தாளை திரும்பத் திரும்ப நகலெடுத்து தள்ளுகிற ஓய்வற்ற ஒரு ஜெராக்ஸ் மெஷினைப் போன்றது தான். இது அரசியலில், சமூகத்தில், பண்பாட்டில் தோன்றும். அப்போது மனிதர்கள் செயல்படுவதை வைத்து அவர்களை நாம் மதிப்பிடலாகாது. இது முக்கியம். ஏனென்றால் ஒரு மாற்று, ஒரு சமமான தேர்வு இருக்கும் போதே மனிதன் முடிவெடுப்பான். இல்லாத போது அவன் பிரதியெடுப்பான். அலை என்பதே தேர்வுகள் இல்லாத ஒரு பாய்ச்சல் தானே.
யோசித்துப் பாருங்கள் இந்தியாவில் நீங்கள் இடதுபக்கமாய் வாகனம் ஓட்டுகிறீர்கள். ஐரோப்பாவுக்கு சென்றால் வலதுபக்கமாய் ஓட்ட வேண்டும். ஒரு வாகனத்தில் போய் அமர்ந்ததும் அடுத்தடுத்து நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அது தான் தீர்மானிக்கிறது, நீங்கள அல்ல. சமகால சமூகப்பொருளாதார, அரசியல் சூழல் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு நம்பிக்கை தரும் அம்சம் உண்டு:
இந்த நகலாக்கத்தின் பின்னால் நாம் பல விசயங்களில் நமது நகல்களுடன் முரண்படுகிறோம் என்பது தான் முக்கியம். அது வெளியே தெரியாவிட்டாலும். அண்மையில் பேஸ்புக்கில் மனுஷை கலாய்த்து, விமர்சித்து மீனம்மா கயல் எழுதிய பதிவில் மனுஷின் கவிதைகளுக்கு லைக் போடுகிறவர்களே வந்து லைக் போட்டு சென்றிருந்தார்கள். அதை மனுஷ் சுட்டிக் காட்டியதும் அவர்கள் வந்து ஒரு “லைக்” என்பதற்கு “ஆதரவு”, “உடன்பாடு” என மட்டும் அர்த்தமில்லை, “பார்த்து விட்டோம்”, “இருந்து விட்டுப் போகட்டும்”, “ஓ அப்படியா” என பல அர்த்தங்கள் இருப்பதாய் அந்த பதிவுக்குக் கீழ் பின்னூட்டம் இட்டனர். நமது அரசியல் களத்தில் பாசிசத்துக்கு, மதவாதத்துக்கு, சர்வாதிகாரத்துக்கு நாம் இடும் “லைக்குகளும்” இப்படியே இருக்கின்றன. இந்த நுட்பமான வேறுபாடுகளை (மனுஷ் விசயத்தில் அப்படி இருந்திருக்காது என்றாலும்) அரசியலில் நாம் பொருட்படுத்துவதில்லை என்பது வருந்தத்தக்கது.
மனிதனுக்கும் ஒரு ஜெராக்ஸ் எந்திரத்துக்குமான முக்கிய வித்தியாசம் அவன் நகலெடுக்கும் போது தனதான சின்னச்சின்ன வித்தியாசங்களை அதில் விட்டு வைக்கிறான், அதை மிக நுட்பமாய் பிழைபட்ட நகலாக மாற்றுகிறான் என்பது. (டெலூஸ் இதை difference and repetition என்கிறார்.) ஒட்டுமொத்தமாய் பார்க்கும் போது இது புலப்படாது என்பதே சுவாரஸ்யம். இந்த வித்தியாசங்கள் ஒருநாள் மாறி புதிய உருவை எடுக்கும். அவனது சின்னச் சின்ன பிறழ்வான நகலாக்கங்களால் தோன்றி மெல்ல மெல்ல வளர்ந்து பெரிதாக உருவெடுக்கும் ஒரு அழுத்தம் ஒரு புதிய தாளை அவனுக்கு நகலெடுக்கத் தரும். அல்லது சமூக அரசியல் பொருளாதார சூழல் முழுக்க மாறி அன்று நிஜமாகவே அவனுக்கு புதிய தேர்வுகள் (choices) கிடைக்கலாம். அந்த சூழல் ஏற்பட அவனது இன்றைய சின்ன சின்ன மாறுபட்ட “லைக்குகளே” காரணமாக இருக்கலாம். அசைக்கவே முடியாது எனத் தோன்றுகிற சர்வாதிகாரங்கள் வீழ்த்தப்படுவது இப்படித்தான்.
கௌரி லங்கேஷின் நினைவு நாளை ஒட்டி ஒன்று அருந்ததி ராய் மற்றும் தீஸ்தா சேதல்வாட்டுக்கு இடையிலான காணொலி உரையாடலைப் பார்த்தேன். அதில் இருவருமே பாஜகவின் எழுச்சியை, அசைக்க முடியாத அதிகாரத்தை கண்டு அவநம்பிக்கையுடன் இருப்பது தெரிந்தது. “பாசிசம் ஏன் பரவலாக மக்களால் ஏற்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை” என அருந்ததி ராய் வருத்தத்துடன் கூறினார். அவர் சொல்ல வருவது இந்தியாவில் இத்தனை போராட்டங்கள் பாஜக ஆட்சியின் முடிவுகளுக்கு எதிராக நடந்தும் நமது ஜிக்கு உள்ள அல்லது உள்ளதாய் தெரிகிற ‘வலுவான’ மக்கள் ஆதரவைத் தான்.
இப்போதுள்ள சூழலில் மக்களை சித்தாந்தரீதியாக பயிற்றுவித்து அரசியல் மாற்றம் கொண்டு வருவது நடக்காது எனத் தோன்றுகிறது. சித்தாந்த அரசியல் செத்து விட்டது. இன்று அதனிடத்தில் உள்ளது நகல் அரசியல். மக்களாட்சி இதனூடே உயிர்த்தாக வேண்டும். நாம் இவ்விசயத்தில் நம்பிக்கையுடன் இருப்பது முக்கியம். பாஜக தலைவர்களே ராகுல் காந்தி, ஸ்டாலினை வெளிப்படையாக போற்றும் போது பொதுமக்கள் ஏன் ஒரு தேர்தலில் மாற்றி வாக்களிக்க மாட்டார்கள்?
மனிதன் எந்திரம் தான், ஆனால் அவன் உயிருள்ள எந்திரம். அவன் ஒரு ‘மனித’ எந்திரம். மேலும் அரசியல் ஒரு இருவழிப் பாதை. உயிரற்ற எந்திரங்களை நாம் இன்று போலச் செய்தாலும் ஒரு நாள் அந்த எந்திரங்களும் நம்மை போலச் செய்யும் நிலை ஏற்படும். அதுவே ‘மனிதத்தின்’ வெற்றி. நமது ‘மனிதமே’ இன்று சர்வாதிகாரத்துக்கு, பாசித்துக்கு எதிராக நமக்குள் ஆயுதம். கண்ணுக்குப் புலப்படாத இந்த ஆயுதத்தினால் ஒருநாள் சர்வாதிகாரம் வீழும்!