இந்திய ஒன்றியம் என்பதே நாடுகளின் கூட்டமைப்பு என்பது தான் பன்முகத் தன்மையுள்ள நிலப்பரப்பின் இணக்கமும், நம்பிக்கையும். ஆனால் பாஜக பதவியேற்ற 2014 முதல் இன்று வரை, அந்த பன்முகத்தன்மை என்பதை ஹிந்துத்துவ ஒற்றைத் தன்மை என்பதாக கொண்டு வருவதில் பெருமளவு வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. அது இப்போது சமூக, பொருளாதார ஒற்றைத் தன்மையை நோக்கி நகர துவங்கி இருக்கிறது. அதற்கு தடையாக இருப்பது கூட்டாட்சி எனும் மாநிலங்களோடு இணைந்து எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டிய தத்துவம். கூட்டுறவு கூட்டாட்சியில் தான் தன்னுடைய அரசு இயங்கும் என்று சொன்ன பிரதமர், உள்ளிருந்தே அதை சிதைக்கும் பணியை செவ்வனே செய்ய ஆரம்பித்து விட்டார்.

“ஒரே நாடு, ஒரே வரி” என்கிற முழக்கத்தோடு தான் ஜி.எஸ்.டி உள் நுழைக்கப்பட்டது. ஒரே நாடு என்பதிலேயே நிறைய கருத்துமுரண்கள் உண்டு. தமிழ்நாட்டையும், ஜார்கண்டையும் ஒரே அளவுகோலில் வைக்க முடியுமா ? சின்ன மாநிலங்கள் என்றாலுமே கூட கோவாவும், திரிபுராவும் ஒன்றாகுமா ? நாற்புறமும் நில எல்லைகள் உள்ள தெலுங்கானாவும், இமாசல பிரதேசமும் ஒரே அளவில் தான் உயர்ந்திருக்கிறதா ? எல்லா கேள்விகளுக்குமான பதில் இல்லை என்பதுதான். இந்த சூழலில் ஒரே நாடு என்பதே ஒற்றைத்தன்மையை முன்னிறுத்தி, பன்முகத்தன்மையை சிதைத்து, மாநிலங்களை டெல்லிக்கான காலனிகளாக மாற்றும் முயற்சி தான் இது.

ஜி.எஸ்.டி முறையில் ஆரம்பத்திலிருந்தே சிக்கல்களும், தாமதங்களும் இருந்தது. அதில் குறிப்பாக பெருந்தொற்றுக்கு பிறகான சூழலில் முக்கியமாக எழுந்து நிற்பது மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகை. முதலில் ஜி.எஸ்.டி இழப்பீட்டிற்கான தொகையை ஒன்றிய அரசு ஏற்காது என சொல்லப்பட்டது.  நிதியமைச்சர் மாநிலங்களே நேரடியாக கடன் வாங்கிக் கொள்ள ரிசர்வ் வங்கியோடு பேசி வைத்திருக்கிறோம் என்றார். ஜி.எஸ்.டி கவுன்சிலில் கருத்தொற்றுமை ஏற்படாமல் போனதால் இப்போது மொத்த இழப்பீடான 2.35 இலட்சம் கோடியில் 1.1 இலட்சம் கோடிகள் வரைக்கும் ஒன்றியமே நேரடியாக மாநிலங்களுக்கு தரும் என்று வாக்குறுதி வந்திருக்கிறது. இதிலுமே கூட அது ஒன்றியத்தின் கடனாக இல்லாமல், மாநிலங்களின் கடனாக தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கும் பாஜக ஆளாத மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

ஜி.எஸ்.டி இழப்பீடு என்பதே ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தந்த வாக்குறுதி. பெருந்தொற்றுக்கு முன்பிருந்தே ஜி.எஸ்.டி சார்ந்த பங்கீடுகளில் நிறைய தாமதங்கள் இருந்தன. நாடு தழுவிய  ஊரடங்கிற்கு பிறகு கடுமையான தொழில் முடக்கங்களும், வீட்டங்கினால் தேவை குறைபாடும் உருவாகின. அதனால் பெருமளவு மாநிலங்களின் ஜி.எஸ்.டி வருவாய் கீழிறங்கியது. குறைவான வருவாய், ஊரடங்கு, பெருந் தொற்றுக்கான பணிகள் என மாநிலங்கள் ஏற்கனவே கடும் சுமையில் இருக்கும் போது, இழப்பீட்டிற்கான கடன் சுமையையும் மாநிலங்களே சுமக்க வேண்டும் என்பது ஒன்றியம் தன்னுடைய கடமையிலிருந்து விலகுகிறது என்று மட்டுமே பார்க்க வேண்டியதிருக்கிறது. ஒரு தனிநபர் தான் கொடுத்த வாக்கிலிருந்து மீறினால் அவர் பொய்யர் என்று பார்க்கப்படுவார். ஆனால் ஒரு ஒன்றியம் மாநிலங்களுக்கு கொடுத்த வாக்கிலிருந்து முழுமையாக யூ டர்ன் அடிக்கிறது. ஆனால், அது ஒன்றியத்தின் அதிகாரமாக பார்க்கப்படுவது தான் சீரழிவு.

இலாபம் வந்தால் அதில் தங்களுடைய பங்கினை சரியாக எடுத்து கொள்ளும் ஒன்றியம், ஒரு தேக்க நிலை வரும் போது மாநிலங்களின் பால் நில்லாமல், அவர்களின் மீதே கடனை ஏற்றுவது சர்வாதிகார நாடுகளில் கூட நடந்ததில்லை. ஆனால், ஜனநாயக கூட்டுறவு கூட்டாட்சி என்று பறை சாற்றி கொள்ளும் ஒன்றிய அரசு, அதை எவ்வித தயக்கங்களுமின்றி, மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல், நேரடியாக அவர்களின் மீது திணிக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்தினை முழுமையாக நிராகரித்து, ஒற்றையாட்சி அதிகாரத்தை நிறுவுவதற்கான முதற்படியே.

புதிய வேளாண் சட்டங்கள் என்று மூன்று சட்டங்களையும், திருத்தங்களையும் கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய அரசு. பஞ்சாப், அரியானா மாதிரியான விவசாயம் சார்ந்து இயங்கும் மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். வேளாண்மையையும், மாநில அரசையும் பிரிக்க முடியாது.

பெரும்பாலான மாநில அரசுகள் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும், கொள்முதல் நிலையங்களையும் உருவாக்கி இருக்கின்றன. ஆனால் இந்த புதிய சட்டங்கள் விவசாயிகள் எங்கு வேண்டுமென்றாலும் விற்கலாம் என்கிற மாயவலையை வீசி பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காலப் போக்கில் அடிமையாவார்கள். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும்பாலும் டெல்லியிலோ, மும்பையிலோ தலைமை அலுவலகங்களை வைத்து இருப்பார்கள். எனவே எல்லா கொள்முதல்களும் அங்கிருந்து தான் நடக்கும். ஒன்றிய அரசு கொஞ்சம் கொஞ்சமாக மாநில வருவாய் ஆதாரங்களை நீக்கி விட்டு, 2 – 3 மாநிலங்களில் இயங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே முன்னால் வைத்து தங்களுக்கான நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

குறைவான வருவாயோ, நிதியாதாரங்களோ இருக்கும் மாநிலங்கள் ஒன்றியத்தை நம்பி மட்டுமே இயங்க வேண்டிய சூழலை இது உருவாக்கக் கூடும். ஆக, இதுவும் கூட்டாட்சியிலிருந்து மாநிலங்களை அகற்றும் ஒரு முயற்சி.

ஒன்றியத்தின் முதல் முழு ஊரடங்கு உத்தரவு மார்ச் 25, 2020லிருந்து அமுலுக்கு வந்தது. அந்த ஊரடங்கு உத்தரவே பேரிடர் மேலாண்மை சட்டத்தின் (Disaster Management Act) கீழ் பிறப்பிக்கப்பட்டது. டி.எம்.ஏ-வின் கீழ் மாநிலங்களின் அதிகாரங்கள் முழுமையாக பறிக்கப்படும். ஒன்றியம் கட்டளையிடும், அதை மாநிலங்கள் நிறைவேற்ற மட்டுமே செய்ய முடியும். எதிர்க் கேள்வி கேட்பதோ, ஆலோசனைகள் சொல்வதோ முடியாது. அதற்கான முக்கிய உதாரணம் – ஐ.சி.எம்.ஆர்

இன்று வரை தினசரி கோவிட்19 தொற்று எண்ணிக்கை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, இறப்புகள் என அத்தனையும் ஒன்றியத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஐ.சி.எம்.ஆரிலிருந்து தான் வருகின்றன. கடந்த 6 மாதங்களில் சர்வதேச திட்ட முறைமைகளுக்கும், ஐ.சி.எம்.ஆரின் முறைமைகளுக்குமான இடைவெளி அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஐ.சி.எம்.ஆரின் பல்வேறு நடைமுறைகள் சர்வதேச மருத்துவ அறிவியல் சமூகத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றன. உண்மையில், ஐ.சி.எம்.ஆர் சொல்லும் எந்த தரவுகளையும் உள்ளபடியே ஏற்றுக் கொள்ள உலக சுகாதார நிறுவனமோ, மருத்துவ சஞ்சிகைகளோ தயாராக இல்லை என்பது தான் கசப்பான நிதர்சனம்.

டி.எம்.ஏ-வின் கீழ், ஐ.சி.எம்.ஆர் வழியாக அனைத்து மாநில அரசு மருத்துவமனைகளின் கொள்முதல்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டன. மாநில அரசு கொரோனா கட்டுப்பாட்டு மையம் தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் ஐ.சி.எம்.ஆருக்கு தான் தர முடியும். மாநிலங்களால் நேரடியாக ஐ.சி.எம்.ஆரின் ஒப்புதல் இன்றி எதையும் கையாள முடியாது. முதலில் சரியாக கையாண்டதாக சொல்லப்பட்ட கேரளா இப்போது திணறிக் கொண்டு இருப்பதற்கு காரணம், ஒன்றியம் சரியான வழி காட்டுதல் நெறிகளோடு பாஜக-இல்லாத மாநிலங்களோடு இயங்குவது தான்.

இதே டி.எம்.ஏ இப்போதிருக்கும் சீன அச்சுறுத்தலை காட்டி நீட்டிக்கப்படலாம். டி.எம்.ஏ அமுலில் இருக்கும் வரை, ஒன்றியம் சொல்வது மட்டுமே மாநிலங்களால் செயல் படுத்த முடியும். மாநிலங்களால் சுயமாய் பல விஷயங்களை செய்ய முடியாது. சில காலத்திற்கு பிறகு, அதுவே “இயல்பாக” மாற்றப்படும் சாத்தியங்களும் உண்டு. எப்படி கஷ்மீரின் மீதான அடக்குமுறையையும், ஆர்ட்டிக்கிள் 370யின் நீக்கத்தையும் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் நியாயப்படுத்தியதோ அதுவே ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் நீட்டிக்கப்படலாம்.

இப்போதே சமூகவலைத் தளங்களை “கண்காணிப்பின்” கீழ் கொண்டு வர வேண்டும் என்கிற அழுத்தம் அதிகரித்து வருகிறது. வாட்ஸாப், டெலிகிராம் முதலான உரையாடல் செயலிகள் இருபுறமும் பாதுகாப்பாக இருப்பது என்பது ஒன்றியத்தின் கண்களை உருத்துகிறது. ஒன்றிய அரசு “பாதுகாப்பு காரணங்கள் மற்றும் தேசத்தின் இறையாண்மை” காரணங்களுக்காக ஒரு ‘புறவாசல் வழியை’ இந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று பேச ஆரம்பித்து இருக்கிறது. ஆக, டி.எம்.ஏ-வை காரணம் காட்டி மாநிலங்களை அடக்குவதும், இறையாண்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களை முன் வைத்து தனிநபர்களை ஒடுக்குவதுமாக எல்லா உரிமைகளையும் ஒன்றிய அரசு தெளிவாக பறிக்க ஆரம்பித்து விட்டது.

இதுவும் நடைமுறை படுத்தப் பட்டால், சாமான்யர்களுக்கே மாநிலங்களை விட ஒன்றியம் தான் நமக்கானது என்கிற மனநிலை உருவாகும். ஏற்கனவே உயர்கல்வி, நதி நீர் நிலைகள், பொது கட்டமைப்பு, பொது விநியோக முறை என அனைத்திலிருந்தும் மாநிலங்களின் உரிமைகளும், கடமைகளும் முழுமையாக நீக்கப்பட்டு, மாநிலங்கள் வெறுமனே மேலாண்மை செய்யும் பொறுப்போடு மட்டும் தான் விடப்பட்டு இருக்கின்றன.

இந்தியா மாதிரியான ஒரு பல மொழிகள், தேசிய இனங்கள், பண்பாடு, வரலாறு, கலாச்சாரம், இறைவழிபாடுகள் இருக்கும் ஒரு நிலப்பரப்பு ஒற்றை அடையாளத்துக்குள் அடை படுவது யாருக்குமே நல்லதில்லை. கூட்டாட்சியின் மீது எழுப்பப்படும் கேள்விகள், இந்தியா என்கிற ஒருங்கிணைப்பின் மீதே எழுப்பப்படும் கேள்விகள்.  அது உருவாக்கும் அடையாள சிக்கல்களையும், தன்னுரிமை கேள்விகளையும் அமைதிப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. சுதந்திரத்திற்கு பின்னான மிக முக்கியமான ஒரு பிரிவினையை இந்திய ஒன்றியம் எதிர்க்கொள்ளப் போகிறதோ என்கிற கேள்வி இனி எல்லார் மனதிலும் எழாமல் இருக்கப் போவதில்லை. இதை மாநிலங்களும், ஒன்றியமும் எப்படி கையாளப் போகின்றன என்பதில் இருக்கிறது கூட்டாட்சி எனும் சொல்லின் முழு பொருள்.