கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வி திரும்பத் திரும்ப இங்கு எழுகிறது. கொரோனா மட்டுமல்ல பெரும்பாலான வைரஸ் தொற்றுகளுக்கு நம்மிடம் மருந்து இல்லை. அதற்குக் காரணம் மருத்துவத்தின் இயலாமை அல்ல. வைரஸ்களின் பண்பு தான் அதற்கு காரணம். வைரஸின்இரண்டு முக்கியமான பண்புகளை நாம் தெரிந்து கொண்டால் அதற்கு எதிரான மருத்துவத்தில் உள்ள சவால்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

  1. வைரஸ்கள் ஒரு உயிரினம் அல்ல, அது ஒரு முழுமையடாத செல். அவை உயிர்வாழ இன்னொரு முழுமையடைந்த செல் மிக அவசியம் அதனால் அதனுடைய வளர்ச்சிக்கு அவை எப்போதும் இன்னொரு உயிரினத்தைதான்சார்ந்திருக்கிறது. இன்னொரு உயிரின் செல்களில் அவை தங்கிக்கொண்டு அங்கிருந்துதான் மிக வேகமாக வளரவும், பெருகவும் செய்கின்றன.
  2. முழுமையற்ற செல்லாக இருப்பதனால் அவை மிக வேகமாக தனது வடிவத்தை மாற்றிக்கொள்கின்றன (MUTATION)

பொதுவாக வைரஸ் ஒட்டுண்ணி போன்ற தன்மையை கொண்டிருப்பதால் அவை இன்னொரு உயிரினத்திற்கு வந்ததற்கு பிறகு உதாரணமாக மனித உடலுக்குள் புகுந்ததற்கு பிறகு நமது உடலின் செல்களுக்குள் வேகமாக பரவுகின்றன பிறகு அழிக்கின்றன.

நமது உடலை பொறுத்தவரை இயல்பாகவே நமக்குள் இது போன்ற கிருமிகளுக்கு எதிராக சண்டை செய்யக்கூடிய போர்வீரர்களான வெள்ளை அணுக்கள் உள்ளன. எந்த ஒரு கிருமி வந்தாலும் உடனடியாக பொதுவான நோய் எதிர்ப்புச் சக்தி நமக்குள் உண்டாகி அந்த கிருமிக்கு எதிரான போரை தொடங்கும். பொதுவான நோய் எதிர்ப்பு செல்கள் கிருமியை சமாளித்துக்கொண்டிருக்கும் அவகாசத்தில் அந்தக் கிருமியின் புரத அமைப்பை நமது உடல் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற பிரத்யேக நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்கிக்கொண்டிருக்கும், அந்த பிரத்யோக செல்கள் அந்த குறிப்பிட்ட வைரஸின் உயிரியல் அமைப்பை கச்சிதமாக உள்வாங்கி தயாரிக்கப்பட்டதால் அது உருவான சில நாட்களிலேயே அந்த வைரஸை முற்றிலுமாக ஒழித்து விடும். இந்தப் பிரத்யோக நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகும் நேரம் தான் மிக முக்கியம். அந்த செல்கள் உருவாகும் வரையில் நமது பொதுவான நோய் எதிர்ப்பு செல்கள் அந்த வைரஸை சமாளிக்க வேண்டும். வைரஸ் மிக வீரியமாக இருந்தாலோ அல்லது நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலோ வைரஸ் அதற்குள் நமது உடலில் எல்லாச் சேதாரங்களையும் செய்து விடும். ஒருமுறை ஒரு வைரஸ் நமது உடலுக்குள் வந்து சென்றால் அதற்காக நமது உடல் உருவாக்கும் இந்த பிரத்யோக நோய் எதிர்ப்பு செல்கள் நமது இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா என்னும் திரவத்தில் எப்போதும் இருக்கும், அதற்கு பிறகு எப்போது அந்த வைரஸ் நமது உடலுக்குள் வந்தாலும் உடனடியாக அந்த வைரஸ் இந்த பிரத்யோக செல்களால் அழிக்கப்படும். ஒரு முறை நமக்கு அம்மை வந்தால் அதற்கு பிறகு எப்போதும் வராததற்கு காரணம் இந்த பிரத்யோக நோய் எதிர்ப்பு செல்கள் தான். (ஆனால் வைரஸ் மியுட்டேட் ஆகி தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு வந்தால் இந்த பிரத்யோக செல்கள் குழம்பிவிடும் அல்லது தாக்காமல் விட்டு விடும்).

இந்த சூழ்நிலையில் வைரஸ்க்கு மருந்து என்பது இரண்டு விதமாக உருவாக்கப்படுகிறது.

ஒன்று தடுப்பு மருந்து. அது தான் தடுப்பூசி. ஒரு குறிப்பிட்ட வைரஸை அதன் வீரியத்தை குறைத்து அல்லது கொன்று நமது உடலுக்குள் செலுத்தும் முறை தான் தடுப்பூசி. அப்படி வீரியம் குறைக்கப்பட்ட வைரஸ் நமது உடலுக்குள் பெருகாது மற்றும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. ஆனால் அந்த வைரஸ்க்கு எதிரான பிரத்யோக செல்கள் நமது உடலில் உண்டாகிவிடும். அது எப்போதும் நமது உடலுக்குள் இருப்பதால் அந்த வைரஸ் நமது உடலுக்குள் புகுந்த உடனேயே அவை முற்றிலுமாக அழிக்கப்படும்.

இரண்டாவது முறை, ஒருவருக்குள் இப்படி உருவான பிரத்யோக நோயெதிர்ப்பு செல்கள் அடங்கிய பிளாஸ்மாவை வைரஸ் தொற்று வந்த இன்னொரு நபருக்கு உடனடியாக கொடுக்கும்போது அதில் உள்ள இந்த பிரத்யோக செல்கள் வைரஸை முழுமையாக தாக்கி அழித்துவிடும் இந்த முறை தான் பிளாஸ்மா சிகிச்சை என அழைக்கப்படுகிறது.

இப்போது கொரோனாவையே எடுத்துக்கொள்வோம் கொரோனா தொற்று நல்ல நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு வரும்போது அதற்கு எதிரான பிரத்யோக நோயெதிர்ப்பு செல்கள் அவருக்குள் மிக விரைவாக உருவாகிவிடும் அதனால் அவருக்கு பெரும்பாலும் நோயிற்கான அறிகுறிகள் இருக்காது அல்லது மிக குறைவான அறிகுறிகளே இருக்கும். அவர் மிக விரைவாக இதில் இருந்து குணமாகிவிடுவார் அப்படி ஒருவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மைவை பிரித்தெடுத்து கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கொடுக்கும்போது கொடுக்கப்பட்ட பிளாஸ்மாவில் உள்ள நோயெதிர்ப்பு செல்கள் அந்த நபரின் கொரோனா வைரஸை துரிதமாக செயல்பட்டு அழித்து விடும்.  இந்த முறை ஏற்கனவே சார்ஸ், எபோலா போன்ற வைரஸ் தொற்றுகளின் போதும் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவிலும், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனாவிற்கு எதிராக இந்த பிளாஸ்மா சிகிச்சை முயற்சிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சிகிச்சைக்கு முக்கியமான தேவை கொரோனா தொற்றுதலுக்கு உள்ளாகி ஆனால் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும். இவர்களை நாம் பொதுவாக Asymptomatic carrier என சொல்லிவோம். சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட  இடத்தில் நோய் தொற்று வந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் நோய் அறிகுறிகள் எதுவும் இலலாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுகிறது. இந்தியாவில் ஏராளமானவர்கள் இப்படி நோய் தொற்றுகுக்கு உள்ளாகி நோய் அறிகுறிகள் இல்லாமல் அல்லது மிக குறைவான அறிகுறிகளுடன் இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. நமது பரிசோதனை முறைகளை இன்னும் தீவிரப்படுத்தி இவர்களை கண்டறிய வேண்டும். நமது அரசு மருத்துவமனைகளிலேயே கூட ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரிக்கக்கூடிய வசதிகள் இருக்கின்றன. ரத்த தானம் பெறுவது மாதிரி மிக சாதாரணமாக செய்யக்கூடிய இந்த சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு செயல்பாட்டு குழுவின் உதவியுடன் உருவாக்கி வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த சிகிச்சை தமிழ் நாட்டில் தொடங்கப்படும் என நாம் எதிர்பார்க்கலாம்.