கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள கொரொனா வைரஸ் உலகமெங்கும் வேகமாகப் பரவிவருகிறது. மிக குறுகிய காலத்தில் சுமார் 38,000 மனித உயிர்களைக் காவு வாங்கி விட்டது.  அந்த வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன் பொருட்டு இந்தியாவிலும் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கடந்த 23ம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி அறிவிப்பு செய்ததுடன், அன்று நள்ளிரவிலிருந்தே ஊரடங்கு அமலுக்கு  வரும் என்றும் அறிவித்தது நாம் அறிந்ததே. அவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு ஏழு நாட்கள் ஆகிவிட்டது.

இந்தியாவில் சுமார் 130 கோடி மக்கள்தொகை உள்ளது. அதில் வாய்ப்பிருந்த மூன்றில் இரண்டு பங்கு மக்கள், ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டவுடன் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கொண்டார்கள். மீதமுள்ள ஒரு பங்கு மக்களில் பெருவாரியானவர்கள் தங்களது பணி நிமித்தமாக, தங்களது சொந்த மாநிலம் விட்டு வேறு மாநிலத்தில் பனி புரிந்து வருகிறார்கள். அவர்களது நிலை இன்று மிகப்பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பணிபுரியும் தமிழர்கள் அந்த மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரமுடியாத சூழல் நிலவுகிறது. மேலும், தமிழ்நாட்டிற்குள் வேறு மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத நிலை உள்ளது. இந்தியாவில், தலைநகர் டெல்லி மற்றும் உத்தர பிரதேசம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது வெளிமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் வீதிகளில் நின்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஆங்காங்கே இருக்கும் அந்த தொழிலாளர்களுக்கு அவர்களது அடுத்தவேளை உணவு மற்றும் உறைவிடம் மிகப்பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர், பிப்ரவரி மாதத்தின் துவக்கத்திலேயே, சீனா, இத்தாலி, இரான் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் வேலை பார்த்துவந்த மற்றும் படித்துக்கொண்டிருந்த 1031 இந்தியர்களை, சிறப்பு விமானங்கள் அனுப்பி இந்தியாவிற்கு பத்திரமாக அழைத்து வந்து உலக நாடுகள் மத்தியில் தனது மனிதநேயத்தை காட்டிகொண்டது நடுவண் அரசு. அவ்வாறு அழைத்துவந்ததில் 48 வெளிநாட்டினரும் அடங்குவர்.

ஆனால், இந்தியாவிற்குள்ளேயே வேறு வேறு மாநிலங்களில் பணியாற்றிவந்த அமைப்பு சாரா தொழிலாளர்களான சமூகத்தில் எவ்வித அழுத்தமும் தர முடியாத சாதாரண மக்களை, மாற்றான் தாய் மனபோக்குடன் பார்த்து வருகிறது நடுவண் அரசு. பல மாநில அரசுகளும் அது போலவே நடந்து கொள்கின்றன.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக அமைப்பு சாரா தொழிலாளர்கள்,  வேலை பார்த்து வந்த நிறுவனங்கள், திடீரென மூடப்பட்டு விட்டதால், பணி செய்து வந்த இடத்தில் தொடர்ந்து தங்க முடியாத நிர்பந்தம் நிலவுகிறது.  தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிட எவ்விதமான பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது வாகனங்கள் பயன்பாடும் இல்லாத நிலையில்,  அரசுகளும் அதற்கு சிறப்பு வாய்ப்பு எதுவும் செய்து கொடுக்காத காரணத்தால் கடந்த மூன்று நாட்களாக இவர்கள் நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அந்த பணியாளர்களில் சிலர், தங்களது குழந்தைகளையும், நடக்கமுடியாத மனைவி மற்றும் பெற்றோர்களையும் தங்களது தோள்களில் சுமந்துகொண்டு, சாலை ஓரமாக கொளுத்தும் வெயிலில் நடந்தே சென்று கொண்டிருக்கிறார்கள். சில பகுதிகளில் சுமார் 200 கிலோமீட்டர்கள் தொலைவையும் மற்றும் சில பகுதிகளில் 350 கிலோ மீட்டர் தொலைவையும் நடந்தே கடந்து செல்கிறார்கள். அவ்வாறு சரியான உணவு குடிநீர் இல்லாமல், கடும் வெயிலில் நடந்த காரணத்தால் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 22 பேர் இறந்து போய்விட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.

நாட்டில் ஆட்சியாளர்களுக்கு,  அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு சட்டம் அமலில் இருக்கிறது என்பது ஞாபகத்தில் உள்ளதா இல்லையா என்று தெரியவில்லை. 2008ம் ஆண்டில் இயற்றப்பட்ட அந்த சட்டம் நடைமுறைக்கு வந்து 12 ஆண்டு காலம் ஆகிவிட்டது.

அந்த சட்டமானது, விவசாய பணியாளர்கள், கட்டுமான தொழிலில்  ஈடுபட்டுள்ள பணியாளர்கள், பீடி சுற்றும் பணியாளர்கள், கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வாடகை கார் ஓட்டுனர்கள்,  துணி வெளுப்பவர்கள் மற்றும் அமைப்புசாரா பிரிவுகளில் பணியாற்றுவோர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை அமைப்புசாரா தொழிலாளர்கள் என்று வகைப்படுத்துகிறது.

மேலும், அச்சட்டத்தின் படி,  அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை ஒன்று வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதன் மூலம் நாடு முழுவதும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான எண்ணிக்கை மற்றும் அவர்களது தேவை போன்றவைகளை தொடர்புடைய அரசுகள் கவனத்தில் கொள்ள முடியும் என்பதே குறிக்கோள்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகப்பாதுகாப்பிற்காக தேசிய நல வாரியம் மற்றும் மாநில நல வாரியம் போன்றவைகளை உருவாக்க வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது. அவ்வாறான தேசிய நல வாரியமானது,  நடுவண் அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் அமைச்சரைத்  தலைவராகக் கொண்டு, 35 நபர்களை கொண்ட குழுவின் திட்டமிடுதலில் இயங்கும். தேசிய நல வாரியம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 4 முறையாவது கூட வேண்டும். இதுபோல மாநில நல வாரியமானது,  மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்டு, 28 நபர்களைக் கொண்ட குழுவின் திட்டமிடுதலில் இயங்கும். மாநில நல  வாரியம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு மூன்று முறையாவது கூடவேண்டும். அவ்வாறு நல வாரியங்களை உருவாக்கிய பிறகு, அந்த அமைப்புசாரா  தொழிலாளர்களுக்கு உயிரிழப்பு மற்றும் உடல் ஊனம், உடல் நலம், மகப்பேறு பலன்கள், மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் நடுவண் அரசு தீர்மானிக்கும் இதர பலன்கள் போன்றவைகளுக்காக தேவைக்கேற்ப அவ்வப்போது நலத்திட்டங்களை நடுவண்  அரசு உருவாக்க வேண்டும். ஏற்கனவே அமலில் உள்ள பல்வேறு நலத்திட்டங்கள் போக, கூடுதலாக புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.

அதுபோல மாநில அரசுகள்,  அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக தேவைக்கு ஏற்ப அவ்வப்போது நலத்திட்டங்களை உருவாக்கிட வேண்டும். அவ்வாறு உருவாக்கும் திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி, பணியில் ஏற்படும் காயங்களுக்கு இழப்பீடு, குடியிருப்பு வசதி செய்து தருதல், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி வசதி உருவாக்குதல், தொழிலாளர்களின் பணி சார்ந்த திறனை மேம்படுத்துதல், பணியின் போது இறந்து போக நேரிட்டால் இறுதிச் செலவுகளுக்கான உதவிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்டங்களையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

மேற்படி திட்டங்களுக்கான பணத்திற்கு நடுவண் அரசும்,  மாநில அரசுகளும் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் குறிப்பாக அறிவித்து,  அந்த குறிப்பிட்ட திட்டங்களுக்காக மட்டும் அதில் பயன் அடையப் போகும் தொழிலாளர்களிடமும் குறிப்பிட்ட அளவு தொகையினை பங்களிப்பாக பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சட்டத்தின் கீழான சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் பயன்களை, மாவட்ட நிர்வாகத்திடம்,  தான் ஒரு அமைப்புசாரா தொழிலாளர் என பதிவு செய்துகொண்ட  அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்களை அவ்விதம் பதிவு செய்துகொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்து கொண்டவுடன்,  அதற்காக அவர்களுக்கு அடையாள அட்டை ஒன்று வழங்கப்படும்.

நடுவண் அரசின் தொழிலாளர் நலத்துறையின் அறிக்கையின்படி,  தற்போது நாட்டில் சுமார் 45 கோடி மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்நாட்டுக்குள்ளாகவே, சொந்த மாநிலத்திலும் மற்றும் பிற மாநிலங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சுமார் ஐம்பது இலட்சம் முதல் ஒரு கோடி பேர் வரையிலும், அமைப்புசாரா தொழிலாளர்களாக தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.

உயிருக்கு பயந்து, நடு ரோட்டில், வெயிலில் சோறு தண்ணி இல்லாமல் நடந்து சென்று கொண்டிருக்கும் இவ்வெளிய மக்களை, காவல் துறையினர், விலங்குகள் போல நடந்து செல்ல நிர்பந்தம் செய்வது, கடுமையாக தாக்குவது, மொத்தமாக நிற்க வைத்து பயிர்கள் மீது தெளிப்பது போல, கிரிமி நாசினியை பீய்ச்சி அடிப்பது போன்றவைகளை செய்திகளில் பார்க்கும் போது, அரசுகள் மற்றும் அதிகாரிகளின் பார்வையில் அமைப்புசாரா தொழிலாளர்களும், நம் சக குடிமக்கள் தாம் என்ற எண்ணம் துளியும் இல்லாமல்,  அவர்கள் முக்கியமற்றவர்களாக பார்க்கப்படுகிறார்களோ என்ற எண்ணம் இயல்பாக எழுகிறது.

இந்த செய்திகள் தற்போது பொது சமூகத்தின் மனநிலையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது.  இவ்வளவுக்குப் பிறகும், நாட்டின் தொழிலாளர் துறை அமைச்சர் இம்மக்கள் குறித்து அறிவுப்பு எதுவும் கொடுத்தது போல தெரியவில்லை.   அரசுகளின் மீதான நம்பிக்கை இழப்பே அம்மக்களை இவ்வாறு விரக்திக்கு கொண்டு சென்றுள்ளது. அவர்களது அச்சத்தை போக்கவில்லை என்றால், அது  நாடு முழுவதும் நாம் எதிர்பார்க்காத பல்வேறு புதிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரும் பங்காற்றும் எளிய மக்களான, அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலம் பேணுதல் இன்றைய சூழலில் மட்டுமல்லாது எப்பொழுதுமே மிக அத்தியாவசியமானதாகும். அவர்களின் நலனுக்காக சமூகப் பாதுகாப்புச் சட்டங்களை எல்லாம் இயற்றிவிட்டு, நடைமுறையில் அதனை கண்டுகொள்ளாமல் விடுவது என்பது,  நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் பெரும் சிக்கலை உண்டுபண்ண போவது நிச்சயம்.

நடுவண் அரசும், சம்பந்தபட்ட மாநில அரசுகளும் பல்வேறு மாநிலங்களில், நிர்கதியாக சாலைகளில் நின்றுகொண்டிருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, மனிதனின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உறைவிடம் மற்றும் தேவையான பண உதவி உள்ளிட்டவைகளை உடனடியாக செய்து  தருவதுடன், அவர்களது நியாயமான அச்சத்தைப் போக்கி, தற்போது பணி செய்து வரும் இடத்திலேயே அவர்களுக்குத்  தகுந்த சமூக பாதுகாப்பு அளித்திட வேண்டியது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதோடு அவைகள் தொடர்ந்து கிடைக்கிறதா எனபதனை உறுதி படுத்திட, சமூக நல வாரியங்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். கேரளாவில் அம்மாநில அரசின் முன் முயற்சியில், சமூக சமையல் கூடங்கள் (Community  Kitchen) அமைத்து, வெளிமாநில மக்களுக்கும் அவர்களுக்கு பழக்கப்பட்ட உணவு உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளதை முன்மாதிரியாகக் கொண்டு அது போன்று முயற்சிக்கலாம். இது போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களில் நமது அரசுகள் ஈடுபட வேண்டியது காலத்தின் தேவை. தவறும் பட்சத்தில் கொரோனா வைரஸால் இறப்பவர்களை விடவும் கூடுதலான எண்ணிக்கையிலான மக்களை நாம், போதிய பராமரிப்பு வழங்காமை, அச்சம் மற்றும் பட்டினியால் நிகழும் சாவிலும் இழக்க நேரிடக்கூடும். ஒருவேளை அவ்வாறு நடக்கும் பட்சத்தில், சொந்த நாட்டு குடிமக்களையே காப்பாற்ற வக்கற்றவர்கள் நாம் என்ற பெருத்த அவமானத்துடன் நமது மிச்ச வாழ்நாட்களை கழிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம்.