அரசு அதிகாரிகளின் அலுவல் கூட்டங்களின்போது, இனி பிஸ்கட் மற்றும் நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக வால்நட்ஸ், பாதாம் பருப்பு வகைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்.

மத்திய சுகாதார அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இனி மத்திய அரசு அதிகாரிகள் கூட்டங்களின் போது, பிஸ்கட் மற்றும் நொறுக்குத் தீனிகள் வழங்குவதைத் தடை செய்துவிட்டு, உடலுக்கு ஆரோக்கியமான உலர் பழங்கள், கடலை, பாதாம், பேரீச்சம் பழம் போன்றவற்றை வழங்கவேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த உணவு கட்டுப்பாடானது அரசு அலுவலக கேன்டீன்களுக்கும் பொருந்தும் என்றும், பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்குக் கீழ் வரும் அனைத்து துறைகளிலும் இது உடனடியாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஸ்கட்களில் அதிக சர்க்கரை, மைதா, பதப்படுத்துவதற்கான உப்புகள் போன்றவை சேர்க்கப்படுவதால், அவை வயிற்றுக்கும், செரிமானத்திற்கும் ஏற்றதாக இல்லை. அனைவரின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு பாதாம், உலர் பழங்கள், பயிறு வகைகள் வழங்கப்படும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.