ஆக்ராவின் பரபரப்பான கடைகளுக்கிடையில் அந்த குளம்பியகம் இருக்கிறது. மனிதர்கள் மீதான நம்பிக்கையை வன்முறை கண்ட மனங்களுக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறது இந்த குளம்பியகம், அதுவும் வன்முறையை உணர்ந்த மனிதர்கள் வழியே, அதற்கான மாறாத சாட்சியத்தை வெளிப்படையாக சுமக்கும் மனிதர்கள் வழியே! வலி உணர்ந்த மனிதர்கள் வழியே வன்முறைக்கு எதிரான குரல்கள் எழும்புவதும், கற்பிப்பதற்கான முயற்சிகள் எழும்புவதும்தான் அந்த குளம்பியகத்தை வாழ்தலுக்கான நம்பிக்கையைத் தரும், மனிதர்கள் மேல் நம்பிக்கையை விதைக்கும் இடமாக மாற்றியிருக்கிறது.

அந்த குளம்பியகத்தை நடத்துவது திராவக வீச்சிற்கு உள்ளாகி, மீண்ட ஐந்து பெண்கள். சிற்றுண்டிகள், பானங்கள் தாண்டி அருமையான சூழலில் ஒரு சிறிய நூலகம், வாய்ப்பபிருக்கும்போது அரசியல், பெண் சுதந்திரம் பேசும், கற்கும், கற்றுக்கொடுக்கும் பயிற்சிப் பட்டறைகள் என அந்த குளம்பியகம் மாற்றங்களுக்கான முதல் படியை எடுத்துவைக்க விரும்புபவர்களுக்கான இடமாக ஆகியிருக்கிறது. அலோக் தீக்ஷிதின் ஸ்டாப் ஆசிட் அட்டாக்ஸ் (Stop Acid Attacks) அமைப்பின் முன்னெடுப்புதான் இந்த குளம்பியகம், ஷீரோஸ் ஹேங்அவுட் (Sheroes Hangout)! இந்த குளம்பியகத்தின் பெயரைக் கவனியுங்களேன். She (அவள்) + Heroes (கதாநாயகர்கள் / சாதனையாளர்கள்) = Sheroes, Sheroes Hangout.

இந்த குளம்பியகத்தின் சுவர் ஓவியங்களால், பெண் சுதந்திரத்தைப் பேசும், திராவக வீச்சு, பெண்ணுடல் மீதுள்ள தடைகளை உடைத்துப் பேசும் ஓவியங்களால் உருவாகியிருக்கிறது. ஓவியங்கள், பயிற்சிப் பட்டறைகள், கலந்துரையாடல்கள், புத்தகங்களுடன் ரூபாவின் கைகளில் உருவான உடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ரூபா திராவக வீச்சிற்கு உள்ளானவர், இவருடன் இணைந்து சன்ச்சல், ரீத்து, நீத்து, கீதா இந்த குளம்பியகத்தை நடத்துகின்றனர். இந்த குளம்பியகத்தில் நீங்கள் உணவருந்திவிட்டு, விருப்பப்பட்ட அளவு பணம் தரலாம், குறிப்பான விலைப்பட்டியல் கிடையாது.

‘அழகுக்குப் பெரிதாக ஆயுள் கிடையாது இல்லையா, ஒரு நொடிப் பொழுதில் காணாமல் போய்விடக்கூடிய ஒன்று அது. நாங்கள் காயத்திலிருந்தும் வன்மத்திலிருந்தும் மீண்டு வந்திருக்கிறோம். மனதை எதனால் நிரப்புகிறோம் என்பதிலும் எந்த அழகு முக்கியம் என்பதிலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம், இந்த அழகு வாழ்நாள் முழுவதும் கூட வரும் என்பது எங்களுக்குத் தெரியும். வெளிப்புற அழகால் அப்படி என்ன தனிப்பட்ட விதத்தில் நிகழ்த்திக் காட்டிவிட முடியும்? எங்கள் மீது திராவகத்தை எறிந்தவர்கள் கூட பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தார்கள், இல்லையா?’

ஷீரோஸ் ஹேங்அவுட்டின் வலைதளத்தில் இந்த வாசகங்கள்தான், ரூபா, சன்ச்சல், ரீத்து, நீத்து, கீதா சிரிப்புடன் சேர்ந்து நிற்கும் புகைப்படத்துடன் நம்மை வரவேற்கின்றன. ஆக்ராவைத் தொடர்ந்து இன்னும் முக்கிய நகரங்களில் இதே ஐடியாவை செயல்படுத்த இருக்கிறது ஷீரோஸ் ஹேங்அவுட். இந்த முன்னெடுப்பில் தன்னார்வலராக இணைய விரும்புவர்கள் ஆன்லைனிலேயே படிவத்தை நிரப்பி அனுப்பலாம்.