மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன். சாப்பாட்டில் விஷம் கலந்து கணவனை கொலை செய்த மனைவி என்று தினசரி இப்படியொரு செய்தி செய்தித்தாளில் இடம்பெற்றிருக்கும். நாம் அனைவரும் இந்தச் செய்தியை தினசரி செய்திபோன்று கடந்து சென்று கொண்டிருக்கிறோம். அது நம் கவனத்திற்கு எப்போது வரும் என்றால்? இதுபோன்ற நிகழ்வு நம் வீட்டின் அருகிலேயோ, நமக்குத் தெரிந்தவர்களுக்கோ நடக்கும் போதும், அல்லது பிரபலங்கள் கொல்லப்படும்போது இது அனைவரின் கவனத்தை பெறுகிறது.

 

அபிராமியும், சந்தியாவும்

கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தையே உலுக்கியது ஒரு செய்தி. தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த அபிராமியை பற்றியதுதான் அந்த செய்தி. சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் அபிராமி, அபிராமி என்றே வலம்வந்தன. அபிராமியின் நடத்தையைப் பற்றி அவரவர்களுக்கு தோன்றிய கருத்துகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஆனால், அதன்பின்னர் அந்த செய்தி குறித்து யாரும் பேசவில்லை. காரணம் தற்போது அது பேசுபொருள் இல்லை.

அந்தபாணியில் தற்போது வலம் வரும் செய்திதான் சந்தியா கொலை. ஒரு பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசியது போன்ற காட்சி நான் மகான் அல்ல திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். அதேபோன்று ஒரு சம்பவம் சென்னை பெருங்குடியில் நடந்துள்ளது.

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 21ஆம் தேதியன்று பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை கிடந்தது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில் துண்டிக்கப்பட்ட கை, கால்கள் நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தியாவின் உடல் பாகங்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரின் கணவரான தூத்துக்குடி, டூவிபுரத்தைச் சேர்ந்த சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணனை போலீசார் கைதுசெய்தனர்.

தான் பெற்றக் குழந்தையையே கொல்லும் அளவிற்கு அபிராமியின் உளவியலும், தனது மனைவியையே கொல்லும் அளவிற்கு பாலகிருஷ்ணனின் உளவியலும் எப்படி மாறியது. இதன் பின்னால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் எதிர்பார்த்திருப்பார்களா?

குடும்ப உறவில் தங்களை இணைத்துக்கொண்டு அன்பை பரிமாறிக்கொண்டு வாழும் கணவன் – மனைவி உறவு, தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் எப்படி இருக்கிறது?. கணவன் – மனைவி கொலை செய்யப்படும் சம்பவங்களால், இந்த உறவு முறையால் உருவான குழந்தைகளின் மனநிலையும், எதிர்காலமும் எப்படி அமையும் என்ற  கேள்வி எழலாம். அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள் பற்றிய செய்திகளை வெகு இயல்பாகக் கடந்து போகும் நம் சமுதாய மக்களின் மனநிலையும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

 

அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள், தலித் மற்றும் சிறுபான்மையினர், மாற்றுக்கருத்துகளை முன்வைப்பவர்கள் மீதான தாக்குதல்கள், கல்வி நிலையங்கள் மீதான ஒடுக்குமுறைகள் போன்று நாடு முழுவதும் வெறுப்புணர்வு குற்றங்கள் நிறைந்துஇருக்கின்றன. இந்த வரிசையில் குடும்ப வன்முறைகளும் அடங்கும்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 130 – 140 பெண்கள் கணவன்மார்களால் கொலை செய்யப்படுகின்றனர். பெண்கள் கொலைகளில் 15 சதவீதம் கணவன்மார்கள் செய்கின்ற கொலைகள். மது, சந்தேகம் போன்ற காரணங்களால்தான் அதிக கொலைகள் நடக்கின்றன எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவைகள் எல்லாம் குடும்ப வன்முறை கொலைகள் எனலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்தக் கொலைகள் குறித்து தேவையான விழிப்புணர்வோ, தீவிரமான விவாதங்களோ அதிக அளவு இங்கு நடைபெறவில்லை.

ஆணவ கொலைகளைவிட சாதிய கொலைகளைவிட முன்பகை கொலைகளைவிட அதிகமான கொலைகள் கணவன் செய்கின்ற கொலைகள். இதில் கொடுமை என்னவென்றால் நாம் அனைவரும் இது பத்தோடு பதினொன்றாவது செய்தி என்று கடந்து சென்றுவிடுகிறோம். குடும்ப ஆணவ கொலைகளுக்கு எதிரான பரப்புரை வலுவாகக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பாதிக்கப்படுவது பெண்களே!

இந்தியாவில் 70 சதவீத பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுகின்றனர். ஆண் ஆதிக்க மரபுடைய தமிழ்க் குடும்ப கட்டமைப்பில் பெரும்பாலும் ஆண்களே பெண்களை குடும்ப வன்முறைக்கு உட்படுத்துகின்றனர்.

2005ஆம் ஆண்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக குடும்ப வன்முறைச் சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி, ஒரு கணவன் தன் மனைவியை அடித்தாலோ, அவமானப்படுத்தினாலோ, துன்புறுத்தினாலோ குற்றமாக கருதப்படும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் அபராதமும், ஓராண்டு சிறை தண்டையும் வழங்கப்படும்.

 

 

சமூக நலத் துறையின் அறிக்கை

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி மத்திய அரசின் “நிர்பயா நிதி” யில் இருந்து பெண்களுக்கான 24 மணி நேர கட்டணமில்லா உதவி மையம்(எண்:181) தொடங்கப்பட்டது. மாநில சமூக நலத்துறையின் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது. இதில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14,400 அழைப்புகள் வந்ததாகவும், அதன் மூலம் 2,336 புகார்கள் பதியப்பட்டுள்ளதாகவும் கடந்த ஜனவரியில் சமூக நலத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில், அதிகபட்சமாக, குடும்ப வன்முறை குறித்து 366 புகார்களும், பெண்கள் சொத்துரிமை குறித்து 132 புகார்களும், குடித்துவிட்டுத் தாக்கும் கணவன்மார்கள் குறித்து 127 புகார்களும், வரதட்சணை கொடுமை குறித்து 100 புகார்களும், கள்ளத்தொடர்பு குறித்து 91 புகார்களும், பாலியல் சீண்டல்கள் குறித்து 77 புகார்களும்  பதியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும் காரணத்தை தெளிவுபடுத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒவ்வொரு மக்கள் மற்றும் அரசின் கடமையாகும்.