இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், தமிழகத்தின் மாபெரும் பெண்ணியப் போராளியும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிறுவியவருமான டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்ததினம் இன்று (ஜூலை 30).
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நாராயணசாமி, பிரபல பாடகி சந்திரமாள் ஆகிய தம்பதியினருக்கு 1886ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி மூத்த மகளாகப் பிறந்தவர்தான் முத்துலட்சுமி ரெட்டி.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்ற பழைய பஞ்சாகம் பேசிக்கொண்டு பெண் அடிமைத்தனம் கோலாங்கி இருந்த காலகட்டத்தில் அவைகளை உடைத்தெறிந்து துணிந்து பள்ளிக்கு சென்றவர் முத்துலட்சுமி ரெட்டி. பருவமடைந்த பெண்கள் வெளியே போகக் கூடாது என்ற கட்டுபாடுகளினால் அவரால் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியமால் போனாலும், தந்தையின் உதவியுடன் தனிப்பட்ட முறையில் மெட்ரிக்குலேஷன் தேர்வு எழுதி மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர் முத்துலட்சுமி.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கல்வி பயின்ற முத்துலட்சுமி, சென்னை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். சென்னை மாகான சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் உறுப்பினராகவும், சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையும் உடையவர் முத்துலட்சுமி ரெட்டி.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், சென்னை மாகாணத்தின் சமூக நல வாரியத்தின் முதல் பெண் தலைவர் எனப் பல பதவிகளில் முதல் பெண்மணியாக தன்னை அலங்கரித்தவர் முத்துலட்சுமி ரெட்டி.
பெண்கள் கல்வியே கற்கக் கூடாது என்ற காலத்தில், மிகப்பெரிய எதிர்ப்புகளைத் தாண்டி மருத்துவம் பயின்று மருத்துவரானார். தான் மட்டுமல்லாது பெண்கள் அனைவருமே கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தை நாடெங்கும் விதைத்தவர்.
ஆதரவற்ற குழந்தைகளுக்காக அடையாறில் அவ்வை இல்லம் தொடங்கினார். புற்றுநோய் கண்ட தன் தங்கை இளம் வயதில் இறந்ததும், ஒரு டாக்டராக இருந்தும் தங்கையைக் காப்பாற்ற முடியாமல் போனதும் இவரை மிகவும் பாதித்தது. இந்தத் துயரம் மற்றவர்களுக்கும் ஏற்படக் கூடாது என்பதால், 1925இல் லண்டன் சென்ற இவர், செல்சியா மருத்துவமனையில் தாய், சேய் மருத்துவ ஆராய்ச்சியும், ராயல் புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.
பின்னர் இந்தியா திரும்பிய முத்துலட்சுமி ரெட்டி, சென்னை அடையாறில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப் பலவிதங்களிலும் முயன்று 2 லட்சம் ரூபாய் நிதி திரட்டி, நிறுவினார். இன்று புற்றுநோயளிகளுக்கு புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்காக அவர் இன்றளவும் நினைவு கூறப்படுகிறார். இந்த நிறுவனம் தற்போது உலக அளவில் குறிப்பிடத்தக்க சிறந்த புற்றுநோய் மருத்துவ மையமாக விளங்குகிறது. இந்த மருத்துவமனையில் ஆண்டுக்கு 80,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 1926ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பெண்கள் மாநாட்டில், இந்தியாவின் சார்பாகப் பங்கேற்று, பெண்ணடிமை தனத்திற்கு எதிராக வழுவான குரல் கொடுத்தவர். இவரின் சமூக பணிகளைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கிக் கவுரவித்தது. தமிழக அரசும் இவரது பேரில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
காந்தி மற்றும் பெரியாருடன் இணைந்து பெண்கள் முன்னேற்றத்திற்காகப் போராடியவர். முக்கியமாக, தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்கள் தடைச்சட்டம், ஏழை பெண்களுக்கு இலவச கல்வி ஆகிய புரட்சிகரமான சட்டங்களைக் கொண்டு வந்து அவற்றை நிறைவேற்றினார். ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கான இல்லங்களை அமைத்தார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, இன்றைய பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர் முத்துலட்சுமி ரெட்டி.
மகத்தான சமூக சேவகியும், தலைசிறந்த மருத்துவரும், பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, 1968ஆம் ஆண்டு 82ஆவது வயதில் மறைந்தார்.
நடப்பாண்டு முதல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளான ஜூலை 30ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் “மருத்துவமனை தினம்” கொண்டாடப்படும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தகைய பெருமைக்குரிய முத்துலட்சுமி அம்மையாரின் தியாகத்தையும், சமூக தொண்டுகளையும் அவரது 133ஆவது பிறந்த நாளான இன்று நினைவுகூர்வதில் பெருமிதம் கொள்கிறோம்.