இந்திய ஜனநாயகத்தில், காலம் காலமாக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமமான வாய்ப்புகள் என்பது அவர்களின் அடிப்படை உரிமை என்ற உண்மையை செயல்வடிவில் ஆதிக்கம் புரையோடிய நமது சமூகத்திற்குப் புரிய வைத்துக் காட்டியவரின் பிறந்தநாள் இன்று, விஸ்வநாத் பிரதாப் சிங்! வி.பி.சிங்கின் பிறந்தநாள். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி அல்லாத இரண்டாவது பிரதமர் வி.பி சிங். மண்டல் கமிஷன், எல்.கே.அத்வானி கைது, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது, ஊழலை முன்னிட்டு காங்கரசிலிருந்து விலகியது என வி.பி.சிங் தான் நம்பும் விழுமியங்களை எதன் பொருட்டும் கைவிடாத அரசியல் தலைவராக இருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பின் பின், பதவி விலகுவதற்கு முன்பு எதிர்க்கட்சிகளை நோக்கி ‘எந்த மாதிரியான இந்தியாவை நீங்கள் உருவாக்க விரும்புகிறார்கள்?’ என்று அவர் கேட்ட கேள்விக்கான அவசியமும், ஆயுளும் இன்றும் தேயவில்லை.

மிஸ்டர் கிளீன், நேர்மையாளர், பிடிவாதக்காரர் என்றே அழைக்கப்பட்ட வி.பி.சிங் 1931-ஆம் ஆண்டு ஜூன் 25 அலகாபாத்தில் ஜமீன்தார் வம்சத்தில் பிறந்தவர். அலகாபாத், புனே பல்கலைகழகங்களில் சட்டம், இயற்பியல் கற்ற இவருக்கு ஆரம்ப காலத்தில் அணு விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதுதான் கனவு. பின்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்து மக்களவையிலும், சட்டமன்றத்திலும் பங்கு வகித்தார். அதன் பின்புதான், இந்திரா காந்தி இவருக்கு உத்தரப் பிரதேச முதல்வர் பதவியைத் தர முன்வந்தார். முதல்வராகப் பணியாற்றிய வி.பி.சிங் அவரது ஆட்சிக்காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த கொள்ளை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார், ஆனால் கொள்ளை கும்பலை அவர் நினைத்ததுபோல் அடக்க முடியாத காரணத்தால் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார், பதவியும் விலகினார். மிஸ்டர் கிளீன் என்ற பெயரின் மீது அப்போதுதான் நம்பிக்கை உருவாக ஆரம்பித்தது.

அதன்பிறகு காங்கிரஸ் ஆட்சியில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்தவர், ராஜீவ் காந்தியின் ஆட்சியில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது இவர் முன்னெடுத்த வருமான வரி சோதனைகள் பெருமளவு பேசப்பட்டன. திருபாய் அம்பானி, அமிதாப் பச்சனின் சகோதரர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளால் இவருக்கு அழுத்தங்கள் அதிகரித்தன, நிதித்துறை பிடுங்கப்பட்டு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற இவர் போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் நடந்ததாக சொல்லப்பட்ட  ஊழலைக் குறித்து கேள்வி எழுப்பினார். அதனால், ராஜீவ் காந்தியுடன் உருவான முரண்பாடு அவரைக் கட்சியை விட்டே நீக்கப்பட வைத்தது. காங்கிரசை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் இவர் உருவாக்கியதுதான் ஜனதா தளம்! ஜனதா தளத்தின் மூலம் அவர் செய்துவிட்டுப் போன மாபெரும் மாற்றம் மண்டல் கமிசன்!

இந்திய தேர்தல் வரலாற்றில் கூட்டணிக்கான இலக்கணங்களை புதிதாகக் கற்பித்த பெருமை இவரையே சாரும். ஜனதா கட்சி, லோக் தளம், இந்திய தேசிய காங்கிரஸ் (ஜெகஜீவன்), பிற மாநிலக் கட்சிகள் என காங்கிரசுக்கு எதிராக தேசிய முன்னணியை உருவாக்கினார். பாஜக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்றார். பத்து ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைபடுத்தினார். எதிர்பார்த்தபடியே, நாட்டில் அங்கங்கே கலவரங்கள் வெடித்தன. ஆனாலும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக, அரசியல், பொருளாதார விடுதலையை அடைய வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் இருந்தார். அந்த நேரத்தில் தான், பாஜக அயோத்தி விவகாரத்தைத் தீவிரமாகக் கையில் எடுத்திருந்தது. எல்.கே.அத்வானி ரதயாத்திரை தொடங்கியது, பாபர் மசூதி என நாட்டில் மதவாத சக்திகள் தங்களின் திட்டங்களை அரங்கேற்ற முனைந்தபோது அதை முறியடிக்க முயன்றவர் விபி சிங்.

பிரிவினையைத் தூண்டுகிறார் என அத்வானி அப்போதுதான் கைது செய்யப்பட்டார். மண்டல் கமிஷனுக்காகவே அதிருப்தியில் இருந்த பாஜக, விபி சிங் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரின் அரசு கவிழ்ந்த பிற்பாடு, அவர் எதிர்கட்சிகளை நோக்கிக் கேட்ட கேள்விதான் இது ‘எந்தமாதிரியான இந்தியா வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?’ ஓராண்டு பிரதமர் காலத்தை நிறைவு செய்வதற்கு 16 நாட்கள் முன்னதாக நவம்பர் ஏழு 1990இல் அவர் பதவி விலகினார். தேசிய முன்னணி கலைந்தது. அதன் பின்பு பல முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன.

வரலாற்றில் அழியாத கறையாக பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியது. அதன்பிறகு, 1996இல் தேவகௌடா, பின்னர் குஜ்ரால் பிரதமராகப் பதவியேற்க முக்கியப் பங்காற்றியவர் வி.பி.சிங். அப்போதுதான், ரத்தப் புற்றுநோயால் தான், பாதிக்கப்பட்டிருப்பது அவருக்குத் தெரியவந்தது, சில வருடங்கள் பொது வாழ்க்கையிலிருந்து அவர் விலகியிருந்தார். அதன்பிறகு தான், உருவாக்கிய ஜன மோர்ச்சாவை மீள் உருவாக்கம் செய்தார். அந்த நேரத்தில், உத்தரப் பிரதேச விவசாயிகளின் நிலங்களை ரிலையன்ஸ் நிறுவனம் ஆக்கிரமித்த சம்பவத்தில் இடதுசாரி கட்சிகள், விவசாயிகளுடன் போராட்டக் களத்தில் நின்றார் கைதானார். புற்றுநோயுடன், சிறுநீரகப் பாதிப்பும் சேர்ந்துகொள்ள 2008 நவம்பர் 27 அன்று காலமானார்.

தமிழகத்திற்கும் வி.பி.சிங்குக்கும் நல்ல உறவு இருந்தது. காவிரி நடுவர் மன்றம் அமைத்திட துணையாக நின்றவர் வி.பி.சிங். கலைஞர், வி.பி.சிங் இறந்த பிற்பாடு அவரை அரசியல் நாகரிகத்தின் சின்னம் என்று குறிப்பிட்டுப் பேசினார். தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்லாத நிலையில், மத்திய அமைச்சரவையில் திமுகவிற்கு வாய்ப்பளித்து மாறனை அமைச்சராக்கினார் இவர்.

லட்சியவாதங்களும் கொள்கைமீதான பிடிப்புகளும் மறைந்துவரும் நிலையில் இந்திய ஜனநாயகத்தின் மாண்பை ஒருநாளும் தரம்தாழவிடாத, சமரசமின்றி போராடக்கூடிய தலைவராக வரலாற்றில் நினைவு கூறப்படுகிறார் விபி சிங்.