2050 வரைதான் நமக்கு நேரமிருக்கிறது. அதற்குள் பருவநிலை மாற்றம் காரணமாக மனித இனம் 90% அழியும் என ஆஸ்திரேலியாவின் காலநிலை மீட்புக்கான தேசிய மையம் (Breakthrough National Centre for Climate Restoration ) தெரிவித்துள்ளது. BNCCR என்பது ஒரு சுயாதீனமான அமைப்பு, ஆஸ்திரேலியாவில் காலநிலையின் அவசர சூழ்நிலை குறித்து எச்சரிக்கை தெரிவிப்பதே இதன் நோக்கமாகும். அவர்களுடைய சமீபத்திய அறிக்கை இந்த மோசமான செய்தியைச் சொல்கிறது.
இந்த அறிக்கையை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா?
இந்த கண்டுபிடிப்புகள் பீதியடைய வைக்கலாம் ஆனால் எச்சரிக்கைக்கான காரணம் உண்மையானது என என இந்த அறிக்கை கூறுகிறது. இந்த தகவல்களை எல்லோருடைய பார்வைக்குமே வைத்திருக்கிறோம். உலகின் எந்த அமைப்பும் பரிசோதிக்கலாம். ஆனால் ஐ.நாவின் காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழு Intergovernmental Panel on Climate Change (IPCC) போன்றோர் உலகின் முடிவு பற்றிய உண்மையான தகவல்களைத் தருவதில்லை.
நாம் இப்போது ஒரு எந்த வித வரலாற்று நிகழ்வோடும் ஒப்பிடமுடியாத ஒரு புதிய ஆபத்தைச் சந்திக்கவிருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. வளிமண்டலத்திலுள்ள பசுமை இல்ல வாயுக்கள் இப்போது அதிகமாக உள்ளது. பூமி, மனித இனம் இதுவரை கண்டிராத அளவுக்கு வெப்பமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது இந்த உலகத்தில் 800 கோடி மக்கள் உள்ளனர்.
ஆய்வின் படி, நாம் முன்னர் நினைத்ததை விட மிக வேகமாக இருத்தலியல் நெருக்கடியை நோக்கிப் போகிறோம். இது பாரிஸ் ஒப்பந்தத்தின் செயல்திறனையே கேள்விக்குறியாக்குகிறது. அதில் உலகின் வெப்பநிலையை 3-5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அது பேரழிவிற்கு போதுமானது என BNCCR கூறுகிறது. ஏனெனில் 3 டிகிரி வெப்பமடைதலே நம் வாழத் தகுதியற்ற சூழலை உருவாக்கும் என ஆய்வு கூறுகிறது.
மும்பை ஷாங்காய் போன்ற நகரங்களுக்கு ஆபத்து.
உலகின் வெப்பநிலை 3 டிகிரி அதிகமானால் கடலின் மட்டம் 0.5 மீட்டர் உயர்ந்து உலகெங்கிலும் உள்ள கடலோர பகுதிகள் பாதிக்கப்படும். பருவநிலை மாற்றம் 3 டிகிரி அதிகமானால் பங்களாதேஷ் மற்றும் புளோரிடாவின் பெரும்பான்மையான பகுதிகள் மூழ்கிவிடும். பெரும் கடற்கரை நகரங்களான மும்பை, ஷாங்காய், லகோஸ் போன்றவை அழிந்து எண்ணற்ற மக்கள் அகதிகளாக்கப்படுவார். என அந்த ஆய்வு கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல் வெப்பநிலை 3 டிகிரிக்கு மேல் அதிகமானால் இந்த பூமியில் ஏற்படும் தொடர் விளைவுகளை நம்மால் சரி செய்யவே முடியாது. சூரியனின் கதிர்கள் மற்றும் வெப்பத்தை பிரதிபலிப்பதற்கு துருவ பனி மூடிகள் இல்லை. ஆர்டிக் பிரதேசங்களிலுள்ள உறைபனி உருகுவதால் நமது வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் பல பயங்கரமான வாயுக்கள் கலக்கிறது. இது பூமியை இன்னும் வெப்பமடையச் செய்யும். இது தொடர்ந்து 4 டிகிரிக்குச் சென்றால் உலக மக்கள்தொகையில் 80-90% சதவீதம் பேர் அழிந்து போவார்கள் என அதிர வைக்கிறது அந்த ஆய்வு முடிவுகள்.
நாம் இதற்கு உடனேயே எதிர்வினை ஆற்றவில்லையெனில் 2050 இல் மேற்கு ஆப்ரிக்காவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் உள்ள 100 கோடி பேர் இடமாற்றம் செய்யவேண்டி வரும். ஏனெனில் அவ்விடங்கள் வாழ தகுதியற்றதாகிவிடும். உலகின் மற்ற பகுதிகளில் 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கடுமையான வெப்ப அலைகளும், காட்டுத் தீயும் பரவும், மேலும் தீவிர வெள்ளம் மற்றும் கடுமையான சூறாவளி வீசும். இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் என அறிஞர்கள் குழு கவலை தெரிவிக்கிறது.
பருவநிலை மாற்றம் அதன் இறுதிக் கட்டதிற்கு வந்துள்ளது. வெகு விரைவிலேயே மனித இனம் தனது சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் அல்லது அது காலத்தை வீணடித்து விட்டது என்று ஏற்றுக்கொண்டு அந்த கொடூர மாற்றங்களைச் சந்திக்க வேண்டும். உலக சுற்றுச்சூழல் தினமான இன்று இது ஒரு நடுங்க வைக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது.