வாழ்வதைப் பற்றிப் பேசுவதை விட்டு இறந்து போவதைப் பற்றிப் பேசுவதின் அவசியம் என்ன ? இதுவும் வாழ்வதைப் பற்றித் தான் பேசுகிறது. ஒருவரின் மரணம் வெறும் இயற்கையின் நிகழ்வாக அல்லது அசம்பாவிதமாக  இல்லாமல் நமக்குப் பல தகவல்களை, வாழ்க்கைப் பாடங்களைக் கொடுத்துவிட்டே செல்கின்றன. சொல்லப்போனால் ஒவ்வொரு மரணமும் நாம் இன்னும் அதிக காலம் உயிர் வாழ்வதற்கான மேலும் ஒரு ரகசியத்தைச் சொல்லிவிட்டே போகின்றன. அதனால் இதை நாம் பேசியே ஆகவேண்டும்.

1950 இல் மக்களின் சராசரி ஆயுள் 46 வயது தான் ஆனால் அதுவே 2015 இல் 71 ஆக உயர்ந்தது.

சொல்லப்போனால் முன்னைவிட  நாம் இப்போது அதிக காலம் உயிரோடிருக்கிறோம். ஆனாலும் மக்கள் இறந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

சில நாடுகளில் இந்த நிலைமை எளிதாக இல்லை. அங்கே நோய்களாலும் தொற்று நோய்களாலும் எதிர்பாராத நிகழ்வுகளினாலும், உலகெங்கிலும் நிலவும்  இந்த நீண்ட ஆயுள் என்ற முன்னேற்றம் அங்கே இருப்பதில்லை. மக்கள் மிக இளவயதில் எளிதாகத் தவிர்க்கக்கூடிய நிகழ்வுகளில் இறந்துபோகிறார்கள்.

அதே நேரம் நம்மை எப்போதும் பதட்டப்பட வைத்தே நம் ஆயுளைக் குறைக்கும் செய்திகளான போர், தீவிரவாதம், இயற்கை பேரழிவுகளின் மூலம் மரணமடைபவர்களின் எண்ணிக்கை மொத்த உயிரிழப்பில் 0.5 சதவீதம் மட்டுமே.

மனிதர்கள் எப்போது இறக்கிறார்கள்? எப்படி இறக்கிறார்கள்? அது காலத்திற்கேற்றபடி எப்படி மாறி இருக்கிறது என்பதில் ஒரு சுவாரஸ்யமான கதை ஒளிந்திருக்கிறது.

ஐ.நா அமைப்பு உலகில் பல்வேறு பகுதிகளில் வாழ்பவர்களின் ஆயுட்கால அறிக்கையை 2015 இல் வெளியிட்டது. அதன் படி உலகில் மிக அதிக காலம் வாழ்பவர்கள்  வட அமெரிக்கர்கள் கிட்டத்தட்ட 80 வயது. அதே போலக் குறைவாக வாழ்பவர்கள் ஆப்பிரிக்கர்கள் 59 வயது . இந்தியர்கள் நாம் நம்மைச் சுற்றி இவ்வளவு தொல்லைகள் இருந்தும் 72 வயது வரை சராசரியாக வாழ்கிறோம்.

உலக மக்கள் என்னென்ன காரணங்களால் இறந்துபோகிறார்கள் என்ற தகவலைப் பார்த்தோமேயானால் 2017 இல் உலகில் மொத்தம் 57 மில்லியன் பேர் இறந்து போனார்கள். 1990 இல் எடுத்த கணக்கெடுப்பின் படி இது 10 மில்லியன் அதிகம். ஆனால் மக்கள் தொகை இதை விட அதிகமாகப் பெருகியதால் விகிதப்படி இது குறைவு தான்.

இதில் 70 சதவீதம் பேர்  நீண்டகால நோய்களால் இறந்தவர்கள். பரவும் நோய்களால் அல்ல. இதில் மிக முக்கியமாக இருதய நோயால் இறப்பவர்களே முதலிடம்.  மூன்றில் ஒருவர் இதில் இறக்கிறார்கள். இது பட்டியலில் இரண்டாம் இடத்திலிருக்கும் புற்று நோயை விட இரு மடங்கு அதிகம்.  புற்றுநோயால் 6 பேருக்கு ஒருவர் மரணமடைகிறார்.

பரவாத நோய்களான நீரிழிவு நோய் , சுவாச நோய் மற்றும் மறதி நோயால் இறப்பவர்களும் இந்த மரண பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்கள்.

இதில் அதிக அதிர்ச்சிக்குரியது தவிர்க்கக் கூடிய மரணங்கள் மூலம் இறப்பவர்கள் தான் . 16 இலட்சம் பேர் வயிற்றுப்போக்கு சம்பந்தமான நோய்களால் இறந்து போயிருக்கிறார்கள். இது டாப் 10 பட்டியலில்  இடம் பெரும் அளவிற்கு இருக்கிறது. சில நாடுகளில் பெரும் மனிதக் கொல்லியாக இந்த நோய் இருக்கிறது.

அதே போல் பிறந்த 28 நாட்களில் இறக்கும் குழந்தைகள் 18 இலட்சம் பேர். இது நாட்டிற்கு நாடு மாறுபடுகிறது. ஜப்பானில் 1000 குழந்தைகளுக்கு 1 குழந்தை இறக்கிறது. இதுவே ஏழை நாடுகளில் 20 குழந்தைகளுக்கு 1 குழந்தை இறக்கிறது.

சாலை விபத்துகளில் இறப்பவர்களில் பணக்கார ஏழை நாடுகள் என்ற பாகுபாடு இல்லாமல் 12 இலட்சம் பேர் இறந்துபோயிருக்கிறார்கள்.  ஆனால் அதிக வருமானம் பெரும் நாடுகளில் முன்னை விட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளால் இது பெருமளவு குறைந்துள்ளது.

அதே நேரம் உலகம் முழுவதும் தற்கொலையால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை கொலை செய்யப்பட்டு இறப்பவர்களை விட இரு மடங்கு அதிகம். குறிப்பாக இங்கிலாந்தில் 16 மடங்கு அதிகம். அதிலும் 20 இல் இருந்து 40 வயதிற்குள் இறப்பவர்கள் தான் பெரும்பாலோனோர்.

யாருமே எதிர்பார்க்காத குறிப்பிடத்தக்க மரணம் ஒன்று நிகழ்கிறது அது செல்ஃபி எடுக்கும்போது இறப்பது.  2017 வரை  259 பேர் அபாயகரமான செல்ஃபி எடுக்கும்போது நிகழும் விபத்துக்களால் இறக்கிறார்கள்.

ஒரு நாடு முன்னேற்றமடையும்போது அந்த நாட்டின் மக்கள் இறக்கும் விகிதம் மாறுகிறது. முற்காலத்தில் தொற்றுநோய்கள் முக்கிய பங்கு வகித்தது 1990 இல் 3 பேரில் ஒருவர் இறப்பது 2017 இல் 5 பேரில் ஒருவராகக் குறைந்தது.

குறிப்பாகக் குழந்தைகள் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். போன நூற்றாண்டில் 3 குழந்தைகளில் ஒரு குழந்தை 5 வயதை எட்டுவதற்குள் மரணமடைகிறது. ஆனால் தற்போது மருந்துகள், தடுப்பு ஊசிகள் , சத்தான உணவுகள், சுத்தமான குடிநீர், முறையான மருத்துவ உதவிகள் மூலம் உலகெங்கிலும் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துவிட்டது இது ஒரு மகத்தான வெற்றியாகும்.

சில எதிர்பாராத கடும் நோய்கள் மூலம் மக்கள் பெருமளவு இறந்தது உலகை அச்சுறுத்தின பின்னர் அதையும் கூட பல விதமான மருத்துவ முறைகள், அந்நோயைப் பற்றிய அறிவு மற்றும் அதை வருவதற்கு முன் தடுப்பதற்கான வழிமுறைகள் போன்றவற்றின் மூலம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எய்ட்ஸ் நோய் அதற்கு உதாரணம்.

இன்று ஒட்டுமொத்தமாக பார்த்தோமேயானால் நல்ல செய்திகளே நிறைந்துள்ளது. முன்னை விட இன்று நாம் அதிக காலம் வாழ்கிறோம். ஆனால் இது போதாது இன்னும் அதிக தூரம் செல்லவேண்டும். இன்னும் சுத்தம், சுகாதாரம், சத்துள்ள உணவுகள், நோய்த் தடுப்பு மருந்துகள், அடிப்படை மருத்துவம், எல்லாம் மிக முக்கியம். அதே போலச் சாலை பாதுகாப்பும், மனநல ரீதியான தீர்வுகளும் மிகவும் அவசியம்.

“இது விபத்துப் பகுதி மெதுவாகச் செல்லவும்” என்ற அபாயப் பலகையை ஒரு இடத்தில் வைப்பதற்கே பலர் அந்த இடத்தில் இறந்து போயிருக்கவேண்டும். ஒரு நோயால் இறப்பவர்கள் கூட அந்த நோயைப் பற்றிய ஒரு புரிதலைக் கொடுத்துவிட்டுத் தான் செல்கிறார்கள்.  வாழும்போது நாம் மற்றவர்களுக்குப் பயனுள்ளவர்களாக வாழ்கிறோமோ இல்லையோ ஆனால் நம் மரணம் நிச்சயம் பிறருக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது. இங்கு யாருடைய மரணமும் வீணானது அல்ல. மற்றவர்களின் மரணத்தின் மூலம் நாம் என்ன கற்றுக்கொண்டோம், நம்முடைய மரணத்தின் மூலம் நாம் என்ன சொல்லிவிட்டுப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது எல்லாம்.