மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என ஐந்து தேயிலை தோட்டங்களில் தினக்கூலி வேலைபார்த்து வரும் தொழிலாளர்களுக்கு இடையே, விளையாட்டு போட்டிகள் நடத்தலாம் என அந்த எஸ்டேடுகளை நடத்திவரும் பிபிடிசி (தி பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேசன்) எஸ்டேட் நிர்வாகம் முடிவெடுத்தது. அந்த விளையாட்டுப் போட்டிகளை, உலகத் தொழிலாளர்கள் தினமான மே 1 ம் நாள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

1985ஆம் ஆண்டு, முதன் முதலில் எல்லா எஸ்டேடுகளுக்கும் சேர்த்து, காக்காச்சி எஸ்டேட்டில் உள்ள, இயற்கையாக உருவான மைதானத்தில் வைத்து விளையாட்டுகள் நடத்தப்பட்டது. மாஞ்சோலையும் காக்காச்சியும் ஒரு அணி. ஊத்தும் குதிரைவெட்டியும் ஒரு அணி. நாலுமுக்கு மட்டும் ஒரு அணி. இப்படியாக மொத்தம் மூன்று அணிகள் விளையாடின.

விளையாடுவதற்கு ஏற்றவாறு காக்காச்சி மைதானத்தை ஏப்ரல் கடைசி வாரத்தில் எஸ்டேட் தொழிலாளர்கள் சீரமைப்பார்கள். ஏப்ரல் 30 ஆம் தேதியே, மைதானத்துக்கு உள்ளாக விளையாட்டு வீரர்கள் ஓடுவதற்காக நேராகவும், வட்டமாகவும் சுண்ணாம்பு வைத்து கோடு போட்டு விடுவார்கள். கிரவுண்டைச் சுற்றிலும் கம்புகள் நட்டு அதில் கயிறுகளை கட்டி விடுவார்கள்.

ஏப்ரல் முப்பதாம் தேதி,  நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டி நடந்துவிடும். தடகள விளையாட்டு போட்டிகள் நடக்கும் மே ஒன்றாம் தேதி காலை 6 மணி முதல், அந்தத்த எஸ்டேட்டில் இருந்து, லாரிகள் மூலம் காக்காச்சிக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்வார்கள்.

ஒவ்வொரு எஸ்டேட்டுக்கும் ஒவ்வொரு வண்ணம் கொடுக்கப்பட்டது. நாலுமுக்குக்கு  சிவப்பும்,  ஊத்து எஸ்டேட்டுக்கு மஞ்சளும், மாஞ்சோலைக்கு பச்சையும் வழங்கப்பட்டது. விளையாடும் வீரர்கள் தங்கள் எஸ்டேட்டுக்கு ஒதுக்கப்பட்ட வண்ணத்தில், சட்டையோ, பாவாடையோ, கால்சட்டையோ அல்லது பனியனோ அணிந்து மைதானத்திற்கு வருவார்கள்.

போட்டிகளில் முதலில் வருபவர்களுக்கு ஐந்து பாயிண்டுகளும், இரண்டாவது வருபவர்களுக்கு மூன்று பாயிண்டுகளும், மூன்றாவது வருபவர்களுக்கு ஒரு பாயிண்டும் வழங்கப்படும். அறிவிப்புகளைத் தொடர்ந்து வெற்றியாளர்கள், அதற்கென வடிவமைக்கப்பட்டு 1, 2 3 என எண்ணிடப்பட்டிருக்கும் மேடையில் தாங்கள் பெற்ற இடத்திற்கு நேரே ஏறி நின்று, பார்வையாளர்களின் வாழ்த்துகளைப் பெற்றுச் செல்வார்கள்.

பெண் தொழிலாளர்களுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம்,  100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் தூரம் ஓடக்கூடிய தொடர் ஓட்டம் (ரிலே ரேஸ்), பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், ஸ்பூனில் எலுமிச்சம் பழத்தை வைத்துக் கொண்டு  கீழே விழாமல் ஓடுதல் ஆகிய விளையாட்டுகள் நடத்துவார்கள். கடைசியில் எல்லா விளையாட்டு போட்டிகளும் முடிந்த பிறகு, ஓபன் டு ஆல் என்ற வகையில் அன்று அங்கு வந்திருக்கும் எல்லா பெண்களும் கலந்து கொள்ளும் வகையில் எல்லோரையும் சேர்த்து தொலைதூர ஓட்டப்பந்தயமும் நடத்தப்படும்.

ஆண் தொழிலாளர்களுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், ரிலே ரேஸ்,  நீளம் தாண்டுதல்,  உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். 50 வயதிற்கு அதிகமான தொழிலாளர்களுக்கு வேகமாக நடக்கும் போட்டி நடத்தப்படும். அதுபோல திறன்படைத்த (ஸ்கில்ட்) தொழிலாளர்களுக்கும் எஸ்டேட்டில் வேலை பார்க்கும் (ஐயாமார்கள்) அதிகாரிகளுக்கும் அதுபோலவே தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.

இந்தப் போட்டிகள் தவிர ஆண்களுக்கு மட்டும் கைப்பந்தாட்ட போட்டி  நடத்தப்படும். அதில் ஆண் தொழிலாளர்கள், ஸ்கில்டு தொழிலாளர்கள் மற்றும் எஸ்டேட் ஐயாமார்கள் என எல்லோரும் சேர்ந்து ஒரே அணியில் விளையாடுவார்கள். ஏப்ரல் கடைசி வாரத்தில் கைப்பந்தாட்ட போட்டிகள் நடந்துவிடும்.

“எட்டடி” சசி, இஸ்மாயில், கருப்பையா டிரைவர் போன்றவர்கள் நாலுமுக்கு எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்த துவக்க காலங்களில், நாலுமுக்கு எஸ்டேட் தொழிலாளர்கள், கைப்பந்தாட்ட போட்டியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தாலும், 1990களுக்குப் பிறகு, மாஞ்சோலை எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் கைப்பந்தாட்டத்தில் தொடர்ச்சியாக வெற்றிபெற ஆரம்பித்தார்கள்.

பெண் தொழிலாளர்களில் இருதயமேரியும், ஆண் தொழிலாளர்களில் கணேசனும்,  ஸ்கில்ட் தொழிலாளர்களில் மைதீன் பிச்சையும், கடைசி வரையிலும் சாம்பியன்களாகவே இருந்தார்கள். இவர்கள் எல்லாரும் நாலுமுக்கு எஸ்டேட்டை சேர்ந்த தொழிலாளிகள் ஆவார்கள். அவர்கள் கலந்து கொள்ளும் அனைத்து விளையாட்டுகளிலும் வெற்றி பெறுவார்கள். விளையாட்டில் அவர்கள்  ஒவ்வொருவரும் தங்களுக்கென தனியே ஒரு ஸ்டைலை உருவாக்கியிருந்தார்கள். குறிப்பாக  மைதீன் பிச்சை, உயரம் தாண்டுதல் போட்டியில், மேடையை பார்த்து நேராக செல்லாமல், முதலில் வேறு இடம் பார்த்து ஓடி, பின்னர் மேடையைப் பார்த்து ஓடி வருவர். ஒரு முக்கோண திசையில் அமைந்திருக்கும் அவரது வருகை. அவர் மட்டுந்தான் எஸ்டேட்டில், முன் பகுதியில் ஆணி வைத்த ஷூ அணிந்து ஓடியவர்.

ஒரு சிலரைத்தவிர பெரும்பாலான தொழிலாளர்கள் வெறும் காலுடன் தான் விளையாடுவார்கள். தினமும் தேயிலைக் காடுகளில், வெறும் கால்களுடன் ஏறி, இறங்கும் தொழிலாளர்களுக்கு, தகுந்த காலணிகள் இல்லாமல் விளையாடுவதில் சிக்கல் இருந்ததாகத்  தெரியவில்லை. எஸ்டேட்டில் வறுமையின் உச்சத்தில் வாழ்ந்த பல தொழிலாளர்களுக்கு அன்றாட பயன்பாட்டுக்கே காலணிகள்  இல்லாமல் இருந்த நிலையில், ஆண்டில் ஒரு நாள் நடக்கும் விளையாட்டுப் போட்டிக்காக அவர்கள் அதற்கான காலணிகளை வாங்கிக் கொள்ளாமல் இருந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை.  .

ஐயாமார்களில், ஆரம்பத்தில் ஆதிமூலம் சாம்பியனாக இருந்தார். அவர் எஸ்டேட்டில் இருந்து போன பிறகு, அப்போது புதிதாக வந்திருந்த ஆனந்த ராஜசேகர் ஐயா சாம்பியனாக இருந்தார். அவர் மாஞ்சோலை எஸ்டேட் சார்பில் விளையாடியவர். ரிலே விளையாட்டில் 200 மீட்டர்கள் ஓட வேண்டும். ஒரு எஸ்டேட்டுக்கு 4 பேர் வீதம்,  ஆளுக்கு ஐம்பது மீட்டர் தூரம் ஓடுவார்கள். ஆதிமூலம் ஐயா ரிலே விளையாடும்போது, நாலாவது ஆளாக ஓடுவார். அவர் அதி வேகமாக ஓடக் கூடியவர். மூன்றாவது ஓடி வந்த ஆளின் கையில் இருக்கும் கம்பு, அவர் கைக்கு கடத்தப்பட்ட உடன், அதை வாங்கிக் கொண்டு சிறிது தூரம் ஓடிய பிறகு, திரும்பிப் பார்த்து தனக்குப் பின்னால் இரண்டாவதாக ஓடி வருபவரைப் பார்த்து வா, வா என்று கையை அசைத்துக் கொண்டே, பின்புறமாக ஓடுவார். அப்படியும் இரண்டாவதாக ஓடிவரும் ஆளால் அவரை நெருங்கக் கூட முடியாது. அவ்வாறு ஓடுவது அவரது தனி ஸ்டைலாக இருந்தது.

பொதுவாக ஆண்டு முழுவதும் ஆளரவமற்று காணப்படும் காக்காச்சி  மைதானத்தில், அன்றைய நாளில் கடைகள் தற்காலிகமாக முளைத்துவிடும். அதில் உணவு,  ஐஸ், தின்பண்டங்கள், விளையாட்டு சாமான்கள், பலூன்,  சர்பத், கலர் என பல்வேறு பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பார்கள். விளையாட்டு தினத்தன்று காக்காச்சி கிரவுண்ட் பகுதி ஒரு பெரிய திருவிழா இடம் போல காட்சியளிக்கும். சுமார் 1000 பேருக்கு மேல் அங்கே கூடி இருப்பார்கள். பேச்சும், சிரிப்பும், கும்மாளமுமாக இருக்கும் அந்த பகுதி.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், எஸ்டேட் காடுகளில் தாட்டுமுட்டான்  பழங்கள் அதிகமாக விளையும். சுவையான அந்த பழங்களைப் பறிப்பதற்கு, விளையாட்டு போட்டிக்காக, காக்காட்சி வந்திருக்கும் எஸ்டேட் மக்கள் பலர் காட்டுக்குள் செல்வார்கள்.

எஸ்டேட் தொழிலாளர்களுக்கு மட்டுமில்லாமல், எஸ்டேட் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியாக ஓட்டப்பந்தயம், ஸ்கிப்பிங், சாக்கு ஓட்டம் போன்ற போட்டிகளை அன்று நடத்துவார்கள்.

விளையாட்டு போட்டிகள் மதியத்துக்குள் முடிந்துவிடும் அதன் பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு மாஞ்சோலை சிங்கம்பட்டி குரூப் மேனேஜர் அல்லது ஏதாவது ஒரு எஸ்டேட் மேனேஜர் பரிசுகள் கொடுப்பார்கள். அதிக பாயிண்டுகள் எடுத்த சாம்பியன்களுக்கு, கூடுதலாக ஒரு வெள்ளி கோப்பையும், வெங்கல பதக்கமும் வழங்குவார்கள்.

ஒட்டுமொத்தமாக அதிகமாக பாயிண்ட்கள் பெற்ற எஸ்டேட்டுக்கு வெள்ளி கப்பு கொடுக்கப்படும். பொதுவாக நாலுமுக்கு எஸ்டேட் தான் அதிக புள்ளிகள் பெற்று, அந்த வெள்ளிகோப்பையை வெல்லும். பரிசளிப்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, விளையாட்டு வீரர்களுக்கும், அது தொடர்பானவர்களுக்கும் காக்காட்சியில் உள்ள எஸ்டேட் அலுவலகத்தில் வைத்து, எஸ்டேட் நிர்வாகம் மட்டன் பிரியாணி வழங்கும்.

பரிசுகளை வாங்கிக் கொண்டு தங்களது எஸ்டேட்டுக்கு லாரிகளில் திரும்புகையில், தங்களது எஸ்டேட் வீரர்கள் வெற்றி பெற்றதற்கான கோஷங்களை, மனிதர்கள் யாரும் வசிக்காத காட்டுக்குள், எழுப்பிக் கொண்டே வருவார்கள். விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்லாமல், மே ஒன்றாம் தேதி காக்காச்சி கிரவுண்டில் கூடும் எல்லோருக்குமே அது மிகவும் பிடித்தமான ஒரு திருவிழா. இந்த ஒரு விழாவில் மட்டுமே எல்லா எஸ்டேட் மக்களும் ஒரே இடத்தில் பரவலாக பங்கு எடுப்பார்கள்.

மே 1ஆம் தேதி தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் அமைதியான முறையில், பெரும் கொண்டாட்டமாக, காக்காச்சி எஸ்டேட்டில் நடந்து, எஸ்டேட் மக்களின் நினைவில் என்றும் பசுமையாய் இருக்கும் இப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான விளையாட்டு திருவிழாவானது, கடைசியாக 1998 மே மாதம் நடந்தது.  1998 ஆகஸ்ட் மாதம் புதிய தமிழகம் கட்சியின் சார்பில், எஸ்டேட்டில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, தொளிலாளர்களிடையே ஏற்பட்ட பிளவுகள் மற்றும் அதிகரித்து வந்த கசப்புணர்வு காரணமாக, பெரும் பிரச்சினைகள் உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டு, காக்காச்சி மைதானத்தில் வைத்து, எஸ்டேட் தொழிலாளர்களுக்கிடையே நடந்து வந்த விளையாட்டுத் திருவிழா, 1999 முதல் நடத்தாமல் கைவிடப்பட்டது.