வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் சிறிது நேரம் முடங்கினாலே பதறிப்போகும் இன்றைய சூழ்நிலையில், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாடு (Chad) நாட்டு மக்கள் கடந்த ஒரு வருடமாக சமூக வலைதளங்களுக்கு அரசால் விதிக்கப்பட்டுள்ள தடையால் இவற்றைப் பயன்படுத்தாமலேயே வாழ்ந்துவருகிறார்கள்.
தேசம் முழுக்கவே எதிர்ப்பலை இருந்தாலும், அதையும் மீறி கடந்த 2016 ஆண்டிலிருந்து சாடு நாட்டின் அதிபராக இருந்துவருபவர் இட்ரிஸ் டெபி. இந்நிலையில் டெபி, 2033 வரை தொடர்ந்து அதிபராகவே தொடரலாம் என கடந்த ஆண்டு திடீரென அந்நாட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இவருக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி அதிகரித்தது. சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் ஒன்றுதிரண்டு போராடத் தொடங்கினர். இதனால் தன்னுடைய ஆட்சிக்கு பாதிப்பு வரும் என நினைத்த டெபி, தேசத்திலுள்ள ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள்,வாட்ஸ்ஆப், வைபர் போன்ற இன்டர்நெட் மெசேஞ்சர்கள் உட்பட அனைத்து இணைய தகவல்தொடர்பு சாதனங்களையும் முடக்க உத்தரவிட்டார். இது முதலில் மக்களிடையே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதியிலிருந்து இந்த சேவைகள் அனைத்தும் திடீரென முடங்கப்பட, அந்நாட்டு மக்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு கேள்வியெழுப்பினர். தொடக்கத்தில் இது வெறும் தொழில்நுட்பக் கோளாறு எனச் சமாளித்த நிறுவனங்கள், பின்னர் இது அதிபரின் உத்தரவு எனச்சொல்லி ஒதுங்கிக்கொண்டன. மக்களிடையே இது பெரும் சிரமங்களை விளைவித்தாலும், டெபி நினைத்ததுபோலவே மக்களின் போராட்டங்கள் பெருமளவு குறைய ஆரம்பித்தது.
இந்த முடக்கம் மக்களின் அன்றாட வாழ்வில் மட்டுமின்றி, தொழில்நிறுவனங்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. ஏற்கெனவே வேலைவாய்ப்பு, தொழிலாளர் போராட்டங்கள், வறுமை, பசி பட்டினி எனப் பல காரணங்களைக் குறிப்பிட்டுப் போராடிய மக்களையே கண்டுகொள்ளாத அதிபர், இதைமட்டும் எப்படி கண்டுக்கொள்வார் என மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப்பின்னர், இந்தத் தடையை நீக்கக்கோரி அந்நாட்டு நீதிமன்றத்தில் பலர் முறையிட்டனர் . ஆனால், நீதிமன்றமோ அதற்கு மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.