மோடி பிரதமர் வேட்பாளராக 2014இல் வாரணாசியில் போட்டியிட்டபோது அவருடைய முக்கியமான வாக்குறுதியும் முழக்கமும் என்னவென்றால் “நான் பிரதமரானால் கங்கை நதியை முற்றிலும் சுத்தப்படுத்துவேன்”.
இதோ இன்று 2019இல் அவரும் பாஜகவும் பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியமைத்து 5 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஆனால் மோடி தலைமையிலான தேசிய கங்கா சபை (NGC) ஒரு முறைகூட கூடவில்லை. இந்த தகவலை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ‘தி வயர்’ பத்திரிக்கை பெற்றுள்ளது.
நதிநீர் அமைச்சகம் 2016இல் தேசிய கங்கா சபையை அமைத்தது. இதன் நோக்கம் கங்கை நதியைப் பாதுகாக்கவும் சேமிக்கவும் அதை மேம்படுத்தவும்தான். இதன் முக்கிய விதி இந்த சபை ஆண்டுக்குக் குறைந்தது ஒரு முறையாவது கூடவேண்டும் என்பதே. ஆனால் தேசிய கங்கை சுத்தப்படுத்தும் திட்ட அமைப்பிடம் இருந்து பெற்ற தகவலின்படி இந்த மூன்று வருடங்களில் ஒரு முறைகூட இந்த சபை கூடவில்லை.
முந்தைய UPA அரசால் நியமிக்கப்பட்ட NGRBA யினுடைய செயல்பாடும் நோக்கமும் கங்கையைச் சுத்தப்படுத்துவதும் மேம்படுத்துவதும்தான். NGRBAக்கு தலைவராக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இருந்தார். 2009இல் இருந்து 2012 வரை மூன்று முறை மன்மோகன் சிங் தலைமையில் சபை கூடியது.
அதன் பின் 2014இல் இருந்து 2016 வரை மூன்று முறை பாஜக அரசின் அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் சபை கூடியது. அதன் பின்னர் NGRBA எனப்படும் சபை கலைக்கப்பட்டு மோடி தலைமையிலான NGC (தேசிய கங்கா சபை) உருவாக்கப்பட்டது.
கங்கையைச் சுத்தப்படுத்தும் பணியில் பலகாலம் ஈடுபட்ட சூழலியாளர் ரவி சோப்ரா கூறுகிறார், “இந்தச் சபைதான் இதில் இறுதி முடிவெடுக்கும் சபை. இவர்கள் ஆண்டுக்கு இரு முறையாவது கூடவேண்டும். ஆனால் இவர்களின் அலட்சியப்போக்கு இந்த சபையின் நோக்கத்தையே சந்தேகிக்க வைக்கிறது. பிரதமர் கங்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.”
இத்தனைக்கும் CAG எனப்படும் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கையும் தேசிய கங்கை சுத்தப்படுத்தும் திட்டஅமைப்பும் NMCGயும் அரசை 2017இல் எந்த முன்னேற்றமும் இல்லாததுக்குக் கண்டனம் தெரிவித்தன. அந்த அறிக்கையில் நதியைச் சுத்தப்படுத்தத் தாமதம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், வீடுகளுக்குக் கழிப்பறை கட்டுவது போன்றவற்றைப் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன.
அதுமட்டுமல்லாமல் பாராளுமன்ற நடவடிக்கை குழுவின் தலைவரான பாஜகவைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி, “இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இவர்களால் கங்கையைச் சுத்தப்படுத்த முடியாது”” என்று தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்தார்.
அவர் தலைமையிலான பாராளுமன்ற நடவடிக்கைக் குழு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது. அதில் இது மிகவும் கவலையளிக்கக்கூடிய நிலைமை. உலகின் மிக மோசமான மாசுபட்ட நதியாக கங்கை இருக்கிறது. முறைப்படுத்தப்படாத நகரமயமாக்கல், மிக ஆபத்தான ரசாயனக் கழிவுகள், உள்நாட்டுக் கழிவு நீர் கலத்தல் போன்றவற்றால் கங்கையின் தூய்மை அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகள் மற்றும் துறைகளின் சரியான திட்டமின்மையும் ஒத்துழைப்பின்மையும் அலட்சியமும்தான் காரணம். இதை முறைப்படுத்தவே தேசிய கங்கா சபை அமைக்கப்பட்டது. ஆனால் அதுவே ஒரு முறைகூட கூடவில்லை என்பது அரசின் கடும் மெத்தனத்தையே காட்டுகிறது என்றது.
கலைக்கப்பட்ட NGRBA அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜேந்திர சிங், “கங்கைக்கு வந்திருப்பது இருதய நோய். ஆனால் அதற்கு பல் மருத்துவர் வைத்தியம் பார்ப்பதுபோல இருக்கிறது இவர்களது நடவடிக்கை” என்றார்.
இதற்காக 254 திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டு இது வரை 24,672 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வெறும் 31 திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன.
மறைந்த சூழலியாளர் ஜி.டி.அகர்வால், “இந்த திட்டங்களால் கங்கைக்கு எந்த பயனும் இல்லை இந்தத் திட்டங்களை எடுத்த தனியார் நிறுவனங்களுக்கே எல்லா பயனும்” என்றார். இதையெல்லாம் எதிர்த்து அவர் 112 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் இறப்பதற்கு முன் பிரதமர் மோடிக்கு இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி மூன்று முறை கடிதம் எழுதினார். ஆனால் ஒன்றுக்குக்கூட பதிலில்லை.
பல இடங்களில் 2013க்குப் பிறகு 2018 வரை கங்கை இன்னும் படுமோசமாகவே பாதிக்கப்பட்டுள்ளதாகப் பல பத்திரிகைகள் நேரடியாகவே ஆய்வு செய்து வெளியிட்டன.
தேசிய மாசுக்கட்டுப்பாடு வாரியமும் தனது அறிக்கையில் “2018ஆம் ஆண்டு வரை கங்கை பாயும் 39 இடங்களில் ஒரே ஒரு இடம் மட்டுமே சுத்தப்படுத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடுகிறது.
தேசிய மாசுக்கட்டுப்பாடு வாரியம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கைக்கு அரசுக்கும் இதில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் தனது கண்டனத்தையும், திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
நாட்டிலுள்ள எல்லா அரசு அமைப்புகள், நீதிமன்றங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இந்த துறை சார்ந்த உலகெங்கும் உள்ள அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், சூழலியாளர்கள், இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற நம்பிக்கை கொண்ட மக்கள் என அனைவரையும் மோடி தொடர்ந்து அவமதித்தே வருகிறார்.
மனிதர்களையும் அவர்களின் மனங்களையும் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சுத்தப்படுத்தும் கங்கை ஒரு நாள் தூய்மையாகிவிடாதா, புனித கங்கை என்ற அதன் இயல்பை அது மீண்டும் அடைந்துவிடாதா என்கிற ஏக்கம் நிரந்தரமாகவே இருக்கிறது.
உலகின் முக்கியமான நதியை மீட்டெடுக்கும் ஒரு அரிய வாய்ப்பை வரலாறு மோடிக்கு அளித்தது. அதை அலட்சியப்படுத்திய அவர் என்றாவது மீண்டும் கங்கையில் குளிக்கும்போது கங்கை அவரது பாவங்களை நீக்கும் என்று நம்புவாரா?