சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அமர்வை கலைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழக கோவில் சிலைகள், கோவில் நகைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு 2018ஆம் ஆண்டு ஜூலை 20இல் அமைக்கப்பட்டது. தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு அமர்வை நியமித்ததற்கான அறிவிப்பாணையை உயர் நீதிமன்ற பதிவுத்துறை மாற்றியமைத்துள்ளது.
இனிமேல் சிலைக்கடத்தல் தொடர்பான பொது நல வழக்குகளை, பொது நல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிலைக்கடத்தல் வழக்கில் கைதாகும் நபர்களின் ஜாமீன் மனுக்களை, பிற வழக்குகளின் ஜாமீன் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே விசாரிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.