சென்னையில் மாநாகர போக்குவரத்து ஊழியர்கள் திடீரென இன்று (ஜூலை 1) காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கொடுக்கவேண்டிய சம்பளப் பணம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஜூன் மாதத்திற்கான சம்பளம் பணம் 60% மட்டுமே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதால், அதிருப்தியடைந்த சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் திடீரென இன்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் சிஐடியு, திமுகவின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
36 பணிமனைகளிலிருந்து 3000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில், அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சேம நல பணியாளர்களைக் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்லும் பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
நடப்பு மாதத்திற்கான மீதம் 40 சதவீதம் சம்பளம் வழங்கப்பட்டால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களுக்கு இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும் எனவும் அதனால், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.