தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும் எனக் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, டாஸ்மாக் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைக்கு தடை
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தஞ்சாவூர் மாவட்டம், பள்ளியக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்றுவருகின்றன. சட்டப்படி, டாஸ்மாக் கடை அமையவுள்ள இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிற்க்கு கோயிலோ, கல்வி நிறுவனங்களோ இருக்கக் கூடாது. ஆனால், இங்கு விதிமுறைகளை மீறி கோயிலுக்கும், பள்ளிகளுக்கும் அருகில் டாஸ்மாக் கடை அமைக்கப்படவுள்ளது. இங்கு டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டால், அது பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும். அதனால், அந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று(பிப்ரவரி 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, தஞ்சை பள்ளியக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதைதொடர்ந்து, தமிழக உள்துறை செயலாளர், டாஸ்மார்க் நிறுவன இயக்குனர் மற்றும் தலைவர் ஆகியோரையும் எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
டாஸ்மாக்: வருவாய் எவ்வளவு?
தமிழகத்தில் 2016இல் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன? 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன?, அவை எத்தனை கட்டங்களாக மூடப்பட்டன? 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் எத்தனை டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டன?, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக மூடப்படும்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள், 2016ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளால் கிடைக்க பெற்ற வருவாய் எவ்வளவு? என்றும் மாவட்ட வாரியாக அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று டாஸ்மாக் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.