சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று கூறியதாவது,

தென் தமிழகம் மற்றும் குமரி கடலோரப் பகுதியை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே சமயம் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு தமிழகம் ஆந்திராவுக்கு இடையே மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து உள்ளது. ஓரிரு இடங்களில் மிகக் கன மழை பெய்துள்ளது. கன்னியாகுமரியின் குழித்துறை – 14 செ.மி மழை பெய்து உள்ளதாகவும், கோவையின் பெரியநாயக்கன்பாளையம் – 12 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலாடி – 6 செ.மீ. நீலகிரியின் கெட்டியில் 6 செ.மீ. சென்னையில் மீனம்பாக்கம், ஆலந்தூரில் 6 செ.மீ. கேளம்பாக்கம், மாமல்லபுரம், கேகே நகர், கோலப்பாக்கம், நுங்கம்பாக்கம் – 4 செ.மீ.மழை பெய்துள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில், அடுத்து இரு தினங்களுக்குத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றவர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் வட தமிழகத்தைப் பொறுத்தவரைத் திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் என்றும் கூறினார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரக் கூடும் என்றும், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரிக் கடல் பகுதிக்கு 21 மற்றும் 22ம் தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மலைப் பகுதிகளான நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் நாளை மிக அதிகக் கன மழை பெய்யக் கூடும் என்றும் இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் ரெட்அலர்ட் விடுக்கப் பட்டு உள்ளதாகவும் , மற்ற மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இல்லை என்று கூறியவர், அலர்ட் செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் 21 சென்டி மீட்டர் அல்லது அதற்கும் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.ரெட் அலர்ட் என்பது நிர்வாக ரீதியிலாக அறிவிப்பதே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.