ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த 23-ம் தேதி தொடங்கினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று டாக்டர்கள் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். நேற்று 4-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை 7.30 மணி முதல் நாளை காலை 7.30 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபடுகின்றனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களிடம் கேட்டபோது, “தமிழக அரசு எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது. இந்த 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவர்கள் இருப்பார்கள். பிரசவங்கள் பார்க்கப்படும். மற்றபடி புறநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவுகளில் மருத்துவர்கள் பணியாற்ற மாட்டார்கள். திட்டமிட்ட அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் நிறுத்தப்படும்” என்றனர்.
இதற்கிடையே, 4-வது நாளான  நேற்று  உண்ணாவிரதம் இருந்துவரும் அரசு மருத்துவர்களை திமுக எம்.பி.க் கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.