தமிழக அரசு பள்ளிகளில் வாரம் ஒரு நாள் மாணவர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.
இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, இந்தியப் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்றது முதல் ஆண்டுதோறும் யோகா தினம் சர்வதேச அளவில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா தினத்தை முன்னிட்டு இன்று காலை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் யோகா பயிற்சிகள் நடைபெற்றன.
சர்வதேச யோகா தினத்தையொட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்ற யோகா தின விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசியவர், “உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. யோகாவை இன்று உலகமே கொண்டாடுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு யோகா சிறந்த மருந்தாக உள்ளது. அமைதியான உலகை உருவாக்குவதில் யோகா முக்கிய பங்கு வகுக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக யோகா விளங்குகிறது” என்று கூறினார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று யோக பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு சர்வதேச யோக தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மக்களுடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை தன்சிகா உள்ளிட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசுப் பள்ளிகளில் வாரம் ஒரு நாள் மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க 13 ஆயிரம் பயிற்சியாளர்கள் தயாராக இருப்பதாகவும், இந்தத் திட்டம் விரைவில் நிதி ஒதுக்கிச் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.