உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சிபிஐ இயக்குநர், டெல்லி காவல் ஆணையர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு உளவுத்துறை இயக்குநரும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் பெண் ஒருவர் பாலியல் குற்றசாட்டு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். வழக்குகளை விசாரிக்கும் தலைமை நீதிபதிமீது ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ளதாக வரும் செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, கடந்த சனிக்கிழமை அன்று விடுமுறை கால அமர்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது, இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி ரஞ்சன் கோகாய், தன்மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் “சில முக்கிய வழக்குகளை நான் விசாரிக்கவுள்ளதால் இந்தப் புகார் கூறப்படுகிறது. நீதித்துறையின் சுதந்திரத்திற்க்கு அச்சுறுத்தல் ஏற்படுள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதற்கிடையில் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான இந்த வழக்கில் ஆஜராகுவதற்காகத் தனக்கு ரூ.1.5 கோடி பணம் தருவதாக அஜய் என்பவர் தன்னிடம் பேரம் பேசியதாக வழக்கறிஞர் உத்சவ் சிங் தெரிவித்தார். இதுதொடர்பாகப் பிராமணப் பத்திரமும் உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார். வழக்கறிஞர் உத்சவ் சிங்கை நேரில் ஆஜராகக்கோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு வழக்கை விசாரிக்க மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வை அமைத்து உத்தரவிட்டார் ரஞ்சன் கோகாய். இந்த அமர்வில் என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரையும் இணைத்துள்ளார் தலைமை நீதிபதி.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், புகார் தெரிவித்த பெண்ணை வரும் 26ஆம் தேதி நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், இதுதொடர்பாக சிபிஐ இயக்குநர் மற்றும் டெல்லி காவல் ஆணையரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர் நீதிபதிகள். வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த வழக்கின் விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.