தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடுமுழுவதும் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு என்னும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதி கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று முடிந்தது. ஒடிஷா மாநிலத்தில் மட்டும் ஃபானி புயல் பாதிப்பு காரணமாக நீட் தேர்வு 20ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 5) வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,97,042 பேர் அதாவது 56.50% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்தாண்டு நடந்த தேர்வில் தமிழகத்தில் 39.56% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டில் 48.57 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் 50 இடத்தில் தமிழக மாணவர்கள் யாரும் இடம்பெறவில்லை. அதேசமயம் தமிழக மாணவியான ஸ்ருதி அகில இந்திய அளவில் 57ஆவது இடம் பிடித்துள்ளார். தேசிய அளவில் தமிழக மாணவர் கார்வண்ணபிரபு 5ஆம் இடம் பிடித்துள்ளார். மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் இவர் தேர்வு எழுதியிருந்தார்.
இந்திய மருத்துவக் கவுன்சில் மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதியை பின்னர் அறிவிக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை கலந்தாய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.