ரிசர்வ் வங்கியின் அனுமதிக்குக் காத்திராமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த மோடி. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் ஆளும் பாஜக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை யாரும் அவ்வளவு சுலபமாக மறக்க இயலாது. நாட்டின் பொருளாதாரத்தை அசைத்த, மக்களுக்கு கடும் மன உளைச்சலையும், தொழில்துறையை நலிவடைய செய்த, தேசத்தின் பெரும்பான்மையான பொருளாதார நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கிட்டதட்ட 600க்கும் மேற்பட்ட உயிர்ப் பலிகளை வாங்கிய இந்த முடிவை மோடி ரிசர்வ் வங்கியின் அனுமதிக்குக் காத்திராமல் எடுத்திருப்பதாக தெரிகிறது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் தலைமையிலான குழுவிடம் அரசின் இந்த முடிவைப் பற்றிப் பரிசீலிக்குமாறு கேட்கப்பட்டது. அதுவும் எப்போது தெரியுமா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த நவம்பர் 8 அன்று மாலை 5.30 மணிக்கு. ஆனால் குழுவின் அனுமதிக்குக் காத்திராமல் அன்றிரவு 8 மணிக்கு மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதை இன்று டெக்கான் ஹெரால்ட் வெளியிட்டிருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் அனுமதி டிசம்பர் 16 அன்று அதாவது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 38 நாட்கள் கழிந்த பிறகே கிடைக்கிறது. அதிலும் ரிசர்வ் வங்கி அரசின் பல முடிவுகளை மறுத்துள்ளது. அதிலும் சில எதிர்ப்புகளை நவம்பர் 8 அன்று மாலை  நடந்த சந்திப்பிலேயே தெரிவித்ததாக அறிகிறது. இவை அனைத்தும் அன்று நடந்த சந்திப்பின் மினிட்ஸ் குறிப்பில் பதிவாகியிருக்கிறது. ரிசர்வ் வங்கி முதன்முதலாக இதை ஒப்புக்கொள்கிறது. அதுவும் இந்த தகவல் 28 மாதங்களுக்கு பிறகே தெரியவருகிறது.

நிதியமைச்சகம் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கான அறிக்கையைத் தயாரித்தது. அதில் 2011 இல் இருந்து 2016 வரை  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் முறையே 76.38% மற்றும் 108.98% அதிகரித்துள்ளதாகவும் ஆனால் நாட்டின் பொருளாதாரம் 30% மட்டுமே அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.

ஆனால் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் இதை மறுக்கிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியானதாகவும் அதிகப்படியான நோட்டுகளின் எண்ணிக்கை மிதமானது என்றும் அதுவும் பணவீக்கத்தின் அடிப்படையில் பார்க்கையில் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை என்றே தெரிவித்தனர்.

அதே போல ரிசர்வ் வங்கி வருவாய்த்துறையின் அறிக்கையையும் மறுத்துள்ளது. அந்த அறிக்கை நாட்டின் நிழல் பொருளாதாரத்தின் அளவு 1990 இல் 20.7% ஆகவும் பின்னர் 2007 இல் 23.2% ஆகவும் உயர்ந்ததாகவும் தெரிவிக்கிறது. இது உலக வங்கியின் மதிப்பீட்டின் படி தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

தகவல் அறியும் சட்ட ஆர்வலர் வெங்கடேஷ் நாயக் இது சம்பந்தமாக கோப்புகள், ஆவணங்கள், விளக்கங்கள் அனைத்தையும் ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு இயக்குனர்களிடன் கடுமையாக முயன்று பெற்றார். ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கி  தகவல் அறியும் சட்டத்திலுள்ள விலக்கப் பிரிவை காரணம் காட்டி இந்த தகவலைத் தர மறுத்துள்ளது.

முக்கியமாக NIPFP யும் மேலும் இரு ஆராய்ச்சி நிறுவனங்களும் தாக்கல் செய்த கருப்புப் பண அறிக்கையைப் பற்றி ஒரு குறிப்பும் அன்று நடந்த கூட்டத்தின் நிமிட அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றிக் கூறும்போது இது கருப்புப் பண ஒழிப்பில் மிக லேசான தாக்கத்தையே ஏற்படுத்தும் ஏனெனில் பெரும்பாலான கருப்புப் பண சொத்துகள் தங்கத்திலும் நிலங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பணமாக வைத்திருப்பவர்கள் மிகக் குறைவே என்றனர்.

மேலும் நிமிட அறிக்கையில் இயக்குநர்கள் குழு அரசின் இந்த நடவடிக்கையை ஆதரிப்பதாகத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால் இதன் மூலம் நிதி சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தனர்.

நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி பாராளுமன்றத்தில் கருப்புப் பண அறிக்கைகளை நிதித்துறை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மட்டும் பார்க்கலாம் என்றும் பொதுவெளியில் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

ஆனால் தகவல் அறியும் சட்டத்தின் பிரிவு 8(1) இல் பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றத்திற்கும் மறுக்கப்படாத எந்த ஒரு தகவலும் நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் மறுக்கப்படாது என்று சொல்கிறது.

இந்த பரபரப்பான சம்பவங்கள் மூலம் ஒரு பெரும் அநீதியும் அதை மூடி மறைக்க நடந்த பல செயல்களும் தெளிவாகத் தெரிகிறது. பல பொருளாதார நிபுணர்கள் கடுமையாக எதிர்த்தும், நாட்டின் தேசிய வங்கி ஆட்சேபித்தும், மக்கள் மிகவும் பாதிக்கபடுவர் என்று அறிந்தும் இந்த செயலை மோடி துளியும் தயக்கமில்லாமல் செய்தது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதன் மூலம் அவர் உறுதியளித்த கருப்புப் பண ஒழிப்பு என்கிற லட்சியம் நிறைவேறியதா என்றால் அதுவும் பூஜ்ஜியம். தேசம் பொருளாதாரத்தில் சில வருடங்கள் பின் நோக்கிச் சென்றதும், தொழில்துறை படுத்ததும் பல உயிரிழப்புகளுமே இதில் அவர் அடைந்த ஒரே வெற்றி.