இந்திய நாட்டின் பெருவாரியான சமானிய மக்களை தொலைதொடர்பு தொழில்நுட்பத்துடன் இணைத்து தொலைபேசி வசதியை ஏற்படுத்தியது பிஎஸ்என்எல் நிறுவனம் என்றால் அதில் சந்தேகம் இல்லை. கடந்த ஐந்தாண்டுகளாக மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் காலத்திற்கேற்றாற்போல் 3G, 4G, 5G வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் போனதால் பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது பயனீட்டாளர்களை கணிசமாக இழந்தது. இந்நிலையில்தான் தற்போது தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்துவருகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியத்தை வழங்க இயலாத அளவுக்குக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009-க்குப் பின் தொடர் நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல், இயக்க செலவில் 66 விழுக்காட்டை ஊதியம், ஓய்வூதியமாக கொடுக்கிறது.

இந்நிலையில், நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் ஜூன் மாத ஊதியத்திற்கும், தொடர்ந்து இயங்கவும் உடனடியாக 850 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

அத்துடன், தொடர்ந்து நிலையாக இயங்க 13 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது பிஎஸ்என்எல். எனவே ஜூன் மாதம் முதல் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் தாமதம் ஏற்படலம் என்று கூறப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் மக்களின் தேவைக்கேற்ப தங்களை புதுபித்துக்கொண்டு நாளுக்குநாள் புது புது ஆஃபர்கள், புது புது வசதிகள், பல தொழில்நுட்பங்களுடன் தங்களை மேருகேற்றிகொள்கின்றன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த தொடர் ஓட்டத்தில் தேக்க நிலை கண்டதால்தான் இந்த நிலையோ என்று எண்ணத்தோன்றுகிறது.