நாடுமுழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக 90 நகரங்களின் காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கொரோனாவால் 130 கோடி மக்களும் தங்கள் வீட்டினுள் அடைந்திருக்கும் சூழலில் எந்தவித வாகனப் பயணங்களும் இன்றி நெடுஞ்சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசு கடந்த சில நாட்களாக குறைந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மத்திய வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி கழகமானது இந்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. அதன்படி, “ பி.எம்.2.5 அளவு காற்றில் மாசு அளவு குறைந்து தூய்மையான  வானிலையில் நிலவுவதாக அறிவித்துள்ளது.  டெல்லி உட்பட சில நகரங்களின் ஏற்கனவே நிலவிய காற்றின் தன்மை மாறி தற்போது 30% அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளது.

வாகனப் புகையின் மூலம் உற்பத்தியாகும் நைட்ரஜன் ஆக்ஸைடின் அளவு குறைந்து காற்றின் தன்மை சில நகரங்களில் குறிப்பாக, புனேவில் 43% மாகவும் மும்பையில் 38% மாகவும் அகமதாபாத்தில் 50% மாவகவும் அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.

மத்திய வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த குஃப்ரான் பெய்ங் இதைப்பற்றி கூறும்போது, “ வழக்கமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகமாகும் இந்த அளவானது தற்போது முற்றிலும் மாறியிருக்கிறது. இதற்குக் காரணம் கொரோனாவல் ஏற்பட்ட இந்த ஊரடங்குதான். ஒவ்வொரு நகரங்களிலும் மூடப்பட்டுள்ள நிறுவனங்களில் கட்டுமான பணிகள் காரணமாகத்தான் காற்றின் தரம் உயர்ந்துள்ளது. வழக்கமாக இந்த மாதிரியான காற்றின் உடனடி தர உயர்வு மழையின் மூலமாகவே நாம் பெற்றிருக்கிறோம். இந்தமுறை கொரோனாவால் கிடைத்துள்ளது என்று கூறினார்.

மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம், நாட்டின் தலைநகர் டெல்லியில் திருப்திகரமான காற்று சூழல் நிலவுவதாகக் கூறியுள்ளது. காற்றின் தரம் (0-50) இருந்தால் நல்ல சூழல், காற்றின் தரம் (50-100) இருந்தால் திருப்திகரமான சூழல், காற்றின் தரம் (100-200) இருந்தால் மிதமான சூழல், காற்றின் தரம் (200-300) இருந்தால் மோசமான சூழல் என்று வரையறுத்துள்ளது. இதன்படி சமீப நாட்களாக ஏற்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 90 நகரங்களில் திருப்திகரமான காற்று சூழல் நிலவுவதாக கூறியுள்ளது.

சூழலியளாலர்கள் இதைப்பற்றி கூறும்போது எந்தவித சக்தியாலும் இந்த அளவை குறைக்க முடியாது என்று நாங்கள் நம்பியிருந்தபோது கொரோனா இதை முறியடித்திருக்கிறது. அரசாங்கம் இதைக் கணக்கில்கொண்டு காற்று மாசுபடும் அளவை உயர்த்தாமல் பாதுகாப்பதே நல்லது. இதை ஒரு விழிப்புணர்வு சமிஞ்கையாக நாம் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

காற்று மாசுபாடு குறித்த தன்னார்வு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜோதி பாண்டே லாவக்கர்,  ”காற்றின் தரம் மனிதர்களால் மட்டுமே குறைக்க முடியும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. குறைந்துவரும் பொருளாதாரச் சூழலைக் காரணம் காட்டி, இதுதான் காற்றின் மாசு குறைப்பதற்கான வழி என்று சொல்வது நியாமில்லாமல் இருந்தாலும் அதுதான் தற்போது தீர்வாகியிருக்கிறது. வாகனப் புகை மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டுமானப்பணிகள்  இவற்றின் மாசுகளைக் கட்டுக்குள் வைப்பதன் மூலமே நாம் திருப்திகரமான காற்றை சுவாசிக்கலாம் என்று கூறியுள்ளார்.