2019-20 கல்வியாண்டிற்கான ஆரம்ப மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்குக் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான வேலை ஆரம்பித்த நிலையில், எந்த ஒரு பள்ளியும் மாற்றுத்திறன் குழந்தைகளை அனுமதிக்காமல் இருக்கக் கூடாது என்றும் இதை கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என ஒடிசா மாநில அரசு கேட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள சில பள்ளிகளில்அத்தகைய குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பது பற்றிய புகார்கள் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு (MHRD) வந்த பின்னர், இது சம்பந்தமாகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கும் அரசு ஆணையிட்டுள்ளது.
“ஆறு வயது முதல் 14 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் தங்கள் அருகிலுள்ள பள்ளிகளில் சேர வேண்டும். இதேபோல், வீட்டுக் கணக்கெடுப்பின்போது அடையாளம் காணப்பட்ட குழந்தைகளும் தங்கள் இடங்களில் உள்ள அடிப்படைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட வேண்டும், “என்று உத்தரவு கூறுகிறது.
ஒடிசா பள்ளி கல்வி இயக்குநர் பூபந்த்ரா சிங் பூனியா, மாவட்ட கல்வி அதிகாரிகள் (DEOs), பிளாக் கல்வி அதிகாரிகள் (BEOs) மற்றும் சமக்ரா சிக்க்ஷாவைச் சேர்ந்த மாவட்ட திட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் (DPCs) ஆகியோருக்கு இந்த உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு உத்தரவிட்டார். பள்ளிகள் அனைத்து குழந்தைகளும் உள்ளடக்கிய கற்றல் சூழலை உருவாக்க வேண்டும் என்றார். கல்விக்கான உரிமை (RTE) சட்டம் 2009, இலவச மற்றும் கட்டாய அடிப்படை கல்வி எல்லா குழந்தைகளுக்கும் தரப்படவேண்டும் என்று கூறுகிறது. அதில் மாற்றுத்திறன் குழந்தைகளும் அடங்கும்.
அதன்படி, கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சங்களை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த நடவடிக்கைகளை இதற்குமுன் மோசமாக செயல்படுத்தியதன் மூலம், இலவச கல்வியின் பயன்களைப் பல குழந்தைகள் பெற முடியாமல் போய்விட்டது.
மாற்றுத்திறன் குழந்தைகளுக்குத் தேவைப்படும் சாதனங்கள், மருத்துவ சேவைகள், அறுவை சிகிச்சை உதவிகள், பிரெய்ல் புத்தகங்கள், பெரிய எழுத்துக்கள் கொண்ட புத்தகங்கள் மற்றும் அவர்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றைப் பள்ளிகள் ஏற்படுத்தித் தருமாறு அரசு கேட்டுள்ளது.
2019-20 ஆண்டில் எல்லா பள்ளிகளிலும் சேர்க்கப்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் பற்றிய விவரங்களை DEO மற்றும் BEO களிடமிருந்து அரசு பெற்று இந்த உத்தரவு பின்பற்றப் பட்டதா எனப் பரிசோதிக்கும் என ஒடிசா பள்ளிக்கல்வி திட்ட ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வி அனைவருக்குமான பிறப்புரிமை. அது மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மறுக்கப்படுவது என்பது பெரும் அநீதி. ஆனால் அரசின் இந்த உத்தரவு அவர்களுக்கு நியாயமாளிப்பது போல உள்ளது.