சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போனது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர் சிபிசிஐடி போலீசார். தொடர்ந்து முகிலனை தேடிவருவதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான ஆதாரங்களை கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார் முகிலன். இந்த சந்திப்பை முடித்துவிட்டு அன்றைய தினம், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்குச் சென்ற முகிலனைக் காணவில்லை. இதுதொடர்பாக, எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
காணாமல்போன முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி மனித உரிமை ஆர்வலர் ஹென்ரி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சத்ய நாராயணன், நிர்மல்குமார் அமர்வில் இன்று (மார்ச் 19)விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 17 தனிப்படையினர், 251 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைகேட்ட நீதிபதிகள், முகிலனின் செல்போன் சிக்னல் மூலம் அவர் சென்ற இடங்களை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், வரும் 8ஆம் தேதி அடுத்த அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.