காணாமல் போன சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என இந்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது ஐநா மனித உரிமை கவுன்சில்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன். இவர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். கூடங்குளம் அணு உலை போராட்டம், நொய்யல் ஆறு மாசுபடுவதற்கு எதிரான நடவடிக்கை, காவிரி நதிநீர் பாதுகாப்பு, ஆற்று மணல் கொள்ளைத் தடுப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் முகிலன்.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்குச் சென்ற முகிலன் காணாமல் போனார். முகிலன் மாயமானது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கைக் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கு மேல் ஆகிறது. அவரைப்பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு புகார் அனுப்பி இருந்தது. இந்த புகாரின் மீது விசாரணை நடத்திய ஐநா சிறப்புப் பிரதிநிதிகள் விளக்கம் கேட்டு இந்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில் முகிலன் மாயமானது குறித்து இந்திய அரசு என்ன விசாரணையை மேற்கொண்டது என்ற விவரங்களை ஐநா மனித உரிமை கவுன்சில் கேட்டுள்ளது. முகிலன் சமாதியாகி விட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட ராஜபாளையம் காவல் ஆய்வாளர் மீது விசாரணை நடத்தப்பட்டதா? அப்படி நடந்திருந்தால் விசாரணை விவரங்களை வழங்க வேண்டும் இல்லையெனில் ஏன் விசாரணை நடக்கவில்லை என்ற விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது ஐநா மனித உரிமை கவுன்சில்.