பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு சிறிய பகுதியைச் சேர்ந்த சோனி கத்துனுக்கு ஐந்து வயது. அன்று மதியம் உச்சிவெயிலில் விளையாடிக்கொண்டிருந்த கத்துன் திடீரென்று மயங்கி விழுகிறான். கூலி தொழிலாளியான அவனது பெற்றோர் அவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். சேர்க்கப்பட்ட ஐந்து மணிநேரத்தில் அவன் உயிர் பிரிகிறது.
இப்படியாக 142 குழந்தைகள் கடுமையான என்செபாலிடிஸ் நோய்க்குறியால் (AES) அதாவது மூளைக்காய்ச்சல் காரணமாக இறந்திருக்கின்றனர் என இந்தியா டுடே நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த நோய்க்கூறு இருப்பதாக கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.
இதனிடையே நோய்க்கூறு காரணமாக பீகார் அரசு அங்கு 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22 ஆம் தேதி வரை மூடப்படும் என்றும், மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த காய்ச்சலால் பீகாரில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் ஏராளமான குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், நோயை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். மேலும் மருத்துவர்களுடனும் ஆலோசனை நடத்தினார். மத்திய சுகாதரத்துறை கூடுதல் செயலாளர் மனோஜ் ஜலானி தலைமையிலான குழுவினரும் முசாபர்பூர் மருத்துவமனைக்கு நேற்று சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவதை தொடர்ந்து முசாபர்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அச்சமடைந்திருக்கின்றனர்.