ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கின் இறுதி விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த ஆண்டு மே 22ஆம் தேதியன்று, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு தமிழக அரசு 2018, மே 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யவும், மீண்டும் ஆலைக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடவும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்காலமாக ஆலையை திறக்க அனுமதிக்கவும் கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆலையை பராமரிப்புக்குத் திறப்பது தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று தமிழக அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், ”தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் விஷ வாயுவை வெளியேற்றும் ஆலை ஸ்டெர்லைட் மட்டுமே. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து தமிழக அரசின் பதில் மனு குறித்து ஸ்டெர்லைட் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பிரதான வழக்கில் இறுதி விசாரணை ஜூன் 27ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவித்தனர்.