ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்கியது தமிழக அரசு.
வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் கடந்த 3ஆம் தேதியன்று ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையைக் கடந்தபோது, 175 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 14,000 கிராமங்களிள் மிக கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஃபானி புயலால் 43 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பூரியில் மட்டும் 39 பேர் இறந்துள்ளனர். அத்துடன் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள், தோட்டப் பயிர்கள் என ஏராளமானவை சேதமடைந்தன. 14 லட்சம் மரங்களும், லட்சக்கணக்கான மின்கம்பங்களும் சாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து, உணவு, குடிநீர், மின்சாரம், தொலைதொடர்பு இல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். புயல் பாதித்த பகுதிகளில் போர்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடைபெறுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நிவராணப் பணிகள் முழுவீச்சில் செய்யக்கோரி ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஃபானி புயல் பாதிப்புகளுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நிவாணத்தொகையாக ரூ.1,600 அறிவித்துள்ளார். இதற்கிடையில் மத்திய உள்துறை செயலாளர் விவேக் பரத்வாஜ் தலைமையில் 9 பேர் அடங்கிய மத்திய குழுவினர் பாதிப்புகளைக் கணக்கிட ஒடிசா சென்றுள்ளனர். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 கோடியை வழங்கியுள்ளது தமிழக அரசு.