அத்திவரதரை தரிசிக்கச் சென்ற பக்தர்களில் கூட்ட நெரிசல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்குப் பிறகு எழுதருளிருக்கிறார் அத்திவரதர். 48 நாட்களுக்கு அவர் காட்சியளிக்கவுள்ளார். இந்த 48 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. அத்திரவரதை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் படையெடுத்து காஞ்சிபுரத்திற்கு வருகை தருகின்றனர்.
இதுவரை சுமார் 10 லட்சத்துக்கும் மேலான மக்கள் அத்திவரதரை தரித்துச் சென்றிருக்கின்றனர். தினமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அத்திவரதரை தரிசிக்க வந்துகொண்டிருக்கின்றனர். இதனால் அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று காத்துக்கொண்டிருந்து அத்திவரதரை தரிசனம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை முதல் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தில் மூச்சு திணறல் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் மயங்கிவிழுந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி கங்காலெட்சுமி, நாராயணி என்ற இரு பெண்களும், நடராஜன் என்பவரும் இன்று மாலை உயிரிழந்துள்ளனர்.