அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜர் கோவிலில் அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு, 48 நாட்கள் தரிசனத்துக்கு வைக்கப்படுவது வழக்கம். இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருவார்கள்.
அதேபோல 40 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஜூலை 1ஆம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர், பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட்டார். அத்திரவரதை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் படையெடுத்து காஞ்சிபுரத்திற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் 48ஆவது நாளான ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 40 வருடங்களுக்குப் பிறகு எழுதருளிருக்கிற அத்திவரதரை லட்சக்கணக்கான மக்கள் இன்னும் தரிசிக்காத காரணத்தால் தரிசன உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையீடு செய்தார். இந்தக் கோரிக்கை முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.