தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.72 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கான வருமான வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசின் நிதியுதவி பெறுவதற்கான வருமான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (ஜூன் 1) வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்களில் மகளிர் நலம் முக்கியமான ஒன்றாகும். பெண்குழந்தைகள், மகளிர் மற்றும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையிலுள்ள, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டும் வகையிலும், தமிழ்நாடு அரசின் மகளிர் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆதரவற்ற பெண்கள், விதவைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினம் ஆகியோரை மேம்படுத்தவும், சமநிலை அடையவும் பல சிறப்புத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பயன்பெற இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.24,000/-லிருந்து ரூ.72,000/- ஆக உயர்த்தி தமிழக அரசால் ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களுக்கான வருமான வரம்பினை மேலும் உயர்த்தினால், அதிக அளவு ஏழைகள் பயன்பெறுவர் என்பதனால், திருமண நிதி உதவித் திட்டங்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.72,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளதை போலவே, சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு இலவசமாக பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் திட்டம், தொழில் கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, தையல் பயிற்சிகளில் சேர்க்கை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் சேவை இல்லங்கள், தொழிற்பயிற்சி நிலையங்களில் அனுமதி மற்றும் மூன்றாம் பாலினர் நலத்திட்ட உதவிகள் ஆகிய திட்டங்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.24,000/-லிருந்து ரூ.72,000/-ஆக உயர்த்தி நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டங்களுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பினை உயர்த்துவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலான பயனாளிகள் பயனடைவர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.