தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் உள்ளிட்ட பொது இடங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டுத்தலங்கள் கட்டப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.
அரசாணையை பின்பற்ற வேண்டும்
”தமிழகத்தில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் வழிப்பாட்டு தலங்கள் இருக்கக் கூடாது என்று 1968ஆம் ஆண்டு, ஏப்ரல் 29ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை வலியுறுத்தி 2004ஆம் ஆண்டு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இந்த அரசாணையை மீறி கோவையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பிள்ளையார் கோவில் கட்டுப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுவருகிறது.
இந்த கோவிலை அகற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். அரசு நிலங்கள், பொது சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களைக் கட்டக்கூடாது என்ற அரசாணையை தமிழக அரசு பின்பற்ற உத்தரவிடவேண்டும்.” என்று 2005ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன்.
அறிக்கை தாக்கல்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்கள் குறித்த புள்ளிவிவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பு நேற்று (பிப்ரவரி 22) விசாரணைக்கு வந்தபோது, நகராட்சி நிர்வாகத் துறையின் துணை செயலாளர் ராமநாதன் அறிக்கைத் தாக்கல் செய்தார்.
3,168 வழிபாட்டுத்தலங்கள்
சென்னை உட்பட 12 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், நீர்நிலைகள், அரசு நிலங்கள், சாலைகள், நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டுத்தலங்கள் கட்டப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிகளின் எல்லைகளுக்கு உட்பட பகுதிகளில் மட்டும், 1,786 வழிபாட்டுத்தலங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், அதில் 1,634 கோவில்கள் என்றும் 163 சர்ச்சுகள், 22 மசூதிகள் மற்றும் பிற மதத்தினரின் 7 வழிபாட்டுத் தலங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நகராட்சி எல்லைக்குள் 1,192 கோயில்களும், 7 சர்ச்சுகளும், 4 மசூதிகளும் ஆக்கிரமித்து, கட்டப்பட்டுள்ளதாகவும், பேருராட்சி அளவில் 177 கோவில்களும், தலா 7 சர்ச் மற்றும் மசூதிகளும் பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழகம் முழுவதும், 3,003 கோவில்களும், 131 சர்ச்சுகளும், 27 மசூதிகளும் பிற மதத்தைச் சேர்ந்த ஏழு வழிபாட்டுத்தலங்களும் என மொத்தம் 3,168 வழிபாட்டுத்தலங்கள் பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”கோவில் வழிபாட்டுத்தலங்கள் என்றாலும் பொது இடத்தில் கட்டப்பட்டிருந்தால், அதுவும் ஆக்கிரமிப்புதான்.” என்று தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.