ப்ளீஸ் ஆண்களே! அர்ஜுன் ரெட்டி மாதிரியான ஆதிக்கவுணர்வுள்ள, உடைமையாக்கத் தவிக்கிற ஆண்களைத்தான் பெண்களுக்குப் பிடிக்கிறது என்று நினைத்து விடாதீர்கள்!
கபிர் சிங் திரைப்படத்தின் முன்னோட்டங்களில் ஷாஹித் கபூரிடம் மறுபடி மறுபடி கேட்கப்பட்ட கேள்வி ‘ஏன் நீங்கள் வெளிப்படையாகவே ஆணாதிக்க, பெண் வெறுப்பு மனநிலையைப் பிரதிபலிக்கும் இந்த மாதிரியான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’ என்பதுதான். அதற்குப் பதிலாக அவர் இம்மாதிரியான தவறுகள் இழைக்கின்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை ஒரு சவாலாக ஏற்பதாகவும் தனக்கு அந்த தைரியம் உள்ளதாகவும் கூறியிருந்தார்.
கபிர் சிங் கதாபாத்திரம் குற்றமுள்ளதுதான், ரொம்ப சரி! மனம் உடைந்துபோனதுதான், ஆமாம்! ஆனால், அது குற்றம் இழைக்கின்றதாகவா திரையில் காண்பிக்கப்பட்டிருக்கிறது? சத்தியமாக இல்லை. திரைப்படத்தின் தொடக்கக் காட்சிகளிலேயே கபிர் சிங் கதாபாத்திரம் முகம் சுழிக்க வைக்கின்றது. உடலுறவு வைத்துக்கொள்ள துடிக்கும் கபிர் சிங் அதற்காக ஒரு பெண்ணை (பெண்ணுடலை) தவிப்புடன் தேடுகிறார். அவர் எந்தளவிற்கு அறிவைத் தொலைத்திருக்கிறார் எனில், அவரது விருப்பத்திற்கு எதிராக, தனது கீழுடையைக் கழற்ற மறுக்கும் பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டும் அளவிற்கு அவர் மனம் பிறழ்ந்திருக்கிறது. அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? இது போன்ற காட்சிகள்தான் படம் நெடுகிலும், ஆனால் எந்த ஒரு இடத்திலும் இது மனப் பிறழ்வாகக் காட்சிப்படுத்தப்படவில்லை, ஒரு ஹீரோவுக்கான (ஆணுக்கான) திறமாகவும், வலிமையாகவும், கபிர் சிங்கே கூறிக்கொள்வதுபோல ஒரு புரட்சியாளனுக்கான குணங்களாகவும் திரையில் பின்னணி இசையுடன் பெருமிதத்தின் அடையாளங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தொடக்கம் முதலே தனது தேவைகளைத் தாண்டி வேறெதையும் முன்னிலைப்படுத்தத் தெரியாத கபிர் சிங் கதாபாத்திரத்தின் இயலாமையை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவர் ஒரு திறமையான மருத்துவராக இருக்கிறார், மருத்துவமனையில் ஊழியர்கள் அவரை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள். அவர் தொடர்ந்து தனது காதலை எண்ணி உருகுகிறார், அதனாலேயே தான் காதலிக்கும் பெண்ணைத் தாண்டி மற்ற பெண்களை எல்லாம் தனது உடல் தேவையைத் தீர்த்துக்கொள்ள ஏற்பட்ட உடல்களாக மட்டுமே பார்க்கிறார். தன் காதலியைத் தாண்டி மற்ற பெண்களிடமிருந்து கிடைக்கும் அன்பைப் புறக்கணிக்கிறார், அவர்களிடம் கபிர் சிங்கிற்குத் தேவையாக இருப்பது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கிறது. மற்றவர்களிடம் காட்ட, கொடுக்க கபிர் சிங்கிடம் எந்த உணர்ச்சிகளும் மிச்சம் இல்லை என திரைக்கதை இந்த சுயநலத்திற்கு, வக்கிரத்திற்கு நியாயம் கற்பிக்கிறது. அவரைக் கவர்ந்த பெண்ணை அவர் பார்த்த உடனே, அடுத்த நொடியே அவள் இவரின் காதலியாகி விடுகிறார். தன் விருப்பத்தை அவளிடம் சொல்லவே இல்லை, குறைந்தபட்சம் சரியாகப் பேசக் கூட இல்லை, ஆனாலும் கபிர் சிங் சொல்வதை அவள் கேட்க வேண்டும், கேட்கிறாள், அவ்வளவுதான்! பரஸ்பர சம்மதமாவது, ஒன்றாவது.
கபிர் சிங்கின் விருப்பங்களுக்கு ப்ரீத்தி உடனுக்குடன் கேள்விகளே இல்லாமல் அடிபணிவது அதைவிட மோசமாக இருக்கிறது. கல்லூரியில் மேடையில் பேசும்போது கபிர் சிங் அவள் அருகில் பாதுகாப்பாக நிற்பது அவளுக்கு சந்தோஷமாக இருக்கிறது. உண்மைதான், ஏன் ஒரு பெண் மோசமான விமர்சனங்களை தன்னை நோக்கி எறிபவர்களை எதிர்கொள்ள முடிந்தவளாக இருக்க வேண்டும்? கபிர் சிங்கைப் பழிவாங்க ப்ரீத்தியின் மீது ஹோலி வண்ணங்கள் பூசப்படும்போதும் அதற்கு சின்னதாக ஒரு எதிர்ப்பைக் கூட காட்ட முடியாதவளாக அவள் இருக்கிறாள். காலம் காலமாக தாங்கள் விரும்பும் பெண்களின் மானம் காக்கும் ஆண்களை கதாநாயகர்களாகக் கொண்டாடுவதைவிடாமல் தொடரும் பாலிவுட் சினிமா ஒரு முறை, ஒரே ஒரு முறை தங்களது சுயமரியாதையை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத பெண்களைத் திரையில் காட்டுமா?
ப்ரீத்தி வகுப்பறையில் எங்கே அமர வேண்டும், யாருடன் நட்பாக இருக்க வேண்டும் என்பதையும் கபிர் சிங்தான் முடிவு செய்கிறார். உடல் பருமனாக இருக்கும் பெண்ணுடன் ப்ரீத்தியை நட்பாக இருக்க சொல்லும் கபிர் சிங் அதற்கு சொல்லும் காரணம், ‘பருமனான கோழிகள் டெடி பியர்போல, என்னை நம்பு! அழகான பெண்களும் பருமனான கோழிகளும் அருமையான காம்போ! (Fat chicks are like teddy bears. Trust me… Good looking girls and fat chicks make a deadly combination)’
ப்ரீத்தி கீழ்படியக்கூடிய, மிகச் சரியான இந்தியக் காதலியாகத்தான் வெளிப்பட வேண்டும் என்பதில் திரைக்கதை தெளிவாக இருக்கிறது. ப்ரீத்தியைக் கல்லூரியில் விடப்போகும் சமயம் ஒரு முறை கபிர் சிங் ப்ரீத்தியிடம் சொல்லும் வசனம் இது ‘துப்பட்டாவை சரியாய்ப் போடு’. ஒருவேளை ப்ரீத்தி உடலை ஒட்டி இருக்கும் உடைகளைத் தேர்ந்தெடுத்திருந்தால், அப்போது கபிர் சிங் என்ன சொல்வார்?
தொடர்ச்சியாக ப்ரீத்தியின் மீது வன்முறைதான் எறியப்படுகிறது. ஒருமுறை கூட அவளால் கபிர் சிங் முன் வாய் திறந்து பேச முடியவில்லை. கல்லூரியின் கடைசி நாட்களில், கபிர் சிங்குடன் இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்க வேண்டும் என்று அவள் கெஞ்சும்போதும் கபிர் சிங்கால் கோபமாக அடக்கப்படுகிறாள். அவளின் தந்தை திருமணத்திற்கு சம்மதிக்காதபோதும் கபிர் சிங்கால் கன்னத்தில் அறையப்படுகிறாள். ப்ரீத்திக்குத் திருமணம் நடக்கும்போது என்ன மாதிரியான மன அழுத்தங்களை அவள் எதிர்கொள்கிறாள் என்பதைக் காட்டுவது குறித்து திரைக்கதை அக்கறை படவில்லை. காதலிக்கும் பெண் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உடனே தன்னுடன் கிளம்பி வர வேண்டும் என்று தெருவில் நின்று சத்தம் போடுவதிலும் சண்டை போடுவதிலும் என்ன மகத்தான ‘வீரம்’ இருப்பதாக கபிர் சிங் நினைக்கிறார் என்பது தெரியவில்லை. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் தான் காரணங்கள் இல்லாத புரட்சியாளன் கிடையாது என்று சொல்லும் கபிர் சிங், காரணங்களே இல்லாமல் ப்ரீத்தியிடம் வன்முறையைப் பிரயோகிப்பவனாகவே இருக்கிறார்.
பத்து கண்ணாடிக் குவளைகளை உடைத்த காரணத்திற்காக கபிர் சிங் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணைத் துரத்தும் காட்சிகள் எல்லாம் எதன் அடிப்படையில் நகைச்சுவை காட்சிகளில் அடங்கும் என்பது புரியவில்லை. திரையரங்கில் பெண்களும் அந்தக் காட்சியைப் பார்த்து சிரிக்கிறார்கள், பெண் வெறுப்பு மனநிலை ஆழமாக வேரூன்றியிருக்கும் ஆணாதிக்க சமூகத்தில் இந்த மாதிரி காட்சிகள் நம்மை சிரிக்க வைக்கிறதென்றால், எந்தெந்த இடுக்குகளில் எல்லாம் பெண் வெறுப்பு மனநிலை உள்ளே மறைந்திருக்கிறது என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். கிளைமாக்ஸில் ப்ரீத்தி, வீடுகளில் பெண்களின் நிலை குறித்துப் பேசுகிறார், கபிர் சிங் தனது காதலி தன்னிடம் திரும்பி வருவதாய் இருந்தால் இன்னொருவரின் (இன்னொரு ஆணின்) குழந்தையைக் கூட ஏற்கத் தயாராக இருக்கிறார். ஆனால், ஆண்களே! நிச்சயம் அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் மாதிரியான ஆதிக்கவுணர்வுள்ள, உடைமையாக்கத் தவிக்கிற ஆண்களைத்தான் பெண்களுக்குப் பிடிக்கிறது என்ற அனுமானத்தை மட்டும் உண்மையென நினைத்து விடாதீர்கள்.
தமிழில்: ப்ரின்சி
நன்றி: News 18. https://www.news18.com/news/movies/dear-men-please-dont-let-kabir-singh-convince-you-that-women-like-dominating-possessive-lovers-2198151.html