பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு வீரர்கள் இரண்டு பேருக்கு, இந்தியா விசா வழங்க மறுத்ததால், இந்தியாவுடனான அனைத்து விதமான தொடர்புகளையும் ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு (ஐஓசி) உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை
கடந்த 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து, பாகிஸ்தான் உடன் விளையாட்டுப் போட்டிகள், வர்த்தக ரீதியிலான உறவுமுறை உள்ளிட்ட அனைத்து விதமான தொடர்புகளையும் தற்காலிகமாக இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் ஜிஎம் பஷிர் மற்றும் கலில் அகமெட் ஆகிய இருவரும் விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் ( ஐஓசி) இந்தியா மீது பாகிஸ்தான் புகாரளித்தது.
இந்தியாவை கண்டித்த ஐஓசி
இதையடுத்து, இந்தியா உடனான அனைத்து விதமான தொடர்புகளையும் ரத்து செய்வதாகச் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு (ஐஓசி) உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐஓசி வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் நடவடிக்கை ஒலிம்பிக் அமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானது. விளையாட்டில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்று பல முறை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். விளையாட்டு வீரர்களைப் பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது. அரசியல் பாகுபாடுகளின்றி அனைத்து நாடுகளின் வீரர்களுக்கும் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும்.
ஒலிம்பிக் நடத்த தடை
பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் கடைசி வரை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இதனால் இந்திய ஒலிம்பிக் கமிட்டியுடன் எதிர்காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, ஒலிம்பிக் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவது என அனைத்து விதமான ஆலோசனைகளையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கோரியிருந்த மனுக்களையும் ரத்து செய்கிறோம்.
மேலும், பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுப்பு செய்தது போன்ற செயல்களை எதிர்காலத்தில் செய்யமாட்டோம் என்னும் உத்திரவாதத்தை இந்தியா எழுத்துப்பூர்வமாக அளித்தால் மட்டுமே ஒலிம்பிக் தொடர்பான போட்டிகளை இனி இந்தியாவுடன் இணைந்து நடத்துவோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.