இளையராஜாவின் அனுமதியில்லாமல் அவரது பாடல்களை பாடத் தடை!
இளையராஜா இசையில் வெளியான பாடல்களை அவரது அனுமதி பெறாமல் பயன்படுத்த கூடாது என்று ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
சில ஆண்டுகளாகத் தனது பாடல்களுக்கான காப்புரிமையில் இசைஞானி இளையராஜா தீவிரமாக இயங்கி வருகிறார். இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் என்று பல இடங்களிலும் தனது பாடல்கள் மூலம் ஒருசிலர் வருவாய் ஈட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில், கடந்தாண்டு தனது பாடல்களை தன்னுடைய முறையான அனுமதியில்லாமல் பயன்படுத்துக்கூடாது என்றும் அனுமதி பெறாமல் பாடல்களை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இளையராஜா அறிக்கை வெளியிட்டார்.
”காப்புரிமை விவகாரத்தில் மற்ற இசையமைப்பாளர்கள் செய்வதையே நான் செய்கிறேன்; இது காலம் தாழ்ந்த செயல்” என்றும் இதற்கு விளக்கம் கூறியிருந்தார் இசையமைப்பாளர் இளையராஜா.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகி மியூசிக் இசை நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் இளையாராஜா பாடல்களை அவருடைய அனுமதியில்லாமல் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜாவின் கோரிக்கையை ஏற்று அவரது பாடல்களை மேடைகளில் பாடத் தடை விதித்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் அனுமதி பெற்ற பின்னரே அவரது பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், இளையாராஜா ராயல்டி தொகை கேட்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்த அகி மியூசிக் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் .