“என்ன மாப்ள எங்க இருக்க..?”

“நான் ஆஸ்திரேலியாவுல இருக்கேன் “என்றேன்.

“ஒனக்கென்ன போன வாரம் சிங்கப்பூர் இப்போ ஆஸ்த்திரேலியா  கைநிறைய சம்பளம் நாடுநாடா சுத்துற கொடுத்துவச்சவன்டா நீ….”

சிரித்துக்கொண்டேன்.

கரையில் இருப்பவர்களுக்கு பரந்த கடலும் அதில் நிற்கும் கப்பலும் அதில் வேலைசெய்பவர்களையும் அப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது.

ரித்தீஷுக்கு தமிழ் தெரியாது. எனக்கு ஓரளவு இந்தி தெரியும்.  திருமணம் ஆகி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவனுக்கு ஆண் குழந்தை  பிறந்ததாக தகவல் வந்தது.  உத்தரபிரதேசத்தின் குக்கிராமம் ஒன்றில் பிறந்த அவன்  சந்தோசமாக இருக்கிறானா என்பதை நாம் கண்டறிய முடியாது?

”நீ ஊருக்கு போறியா?”

“எப்படி போறது நான் 12 மாசம் கான்டிராக்ட் இப்போதான் மூணு மாசம் முடிஞ்சிருக்கு”

அவனது ஆண்குழந்தையைக் காண அவன் இன்னும் ஓராண்டுகள் காத்திருக்க வேண்டும்.

மொபைல் வாட்சப் வீடியோவில் குழந்தையை பார்த்து கொஞ்சிக்கொண்டான்.400mb ல் 20 டாலர் (இந்திய மதிப்பில்,1500 ரூபாய்).கொஞ்சநேரம் கொஞ்சுவதற்குள் 400mb காலி ஆகி விட்டது. அவன் குழந்தைக்கு முதலாவது முத்தத்தைக் கொடுக்க ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலவிட்டான். டேட்டா காலியாகிப்போனது.முதல் குழந்தையாதலால் குழந்தையிடம் கொஞ்சி மனைவியிடம் பேசி முடிப்பதற்க்குள் சில ஆயிரம் ரூபாய் கரைந்து போய்விட்டது.

இதற்கு முன்பிருந்த கப்பலில் 100mb 1500 ரூபாய்.

அப்போது கப்பல் தாய்லாந்து  சென்று கொண்டிருந்த போது  என் அம்மா இறந்துவிட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது.

அம்மாவின் உடலை வாட்சப்பில் அனுப்பியிருந்தார்கள். கப்பலின் முன் தளத்தில் நின்ற படி என்பிரியமான அம்மாவின் உடலைப் பார்த்து  வாய்விட்டு அழுதேன். நான் அழுததை சிலர் கவனித்திருக்கக் கூடும்.

கேப்டன் டேரியல் ரொட்ரிக்கோ என்னை அணைத்து”என் மூத்த அண்ணன் இறந்தபோது நான் கடலில் இருந்ததால் போகமுடியவில்லை இதுதான் நம் வாழ்க்கை ” என்று தோள்தட்டிச் சென்றார்.

கப்பல்கள் பல விதம், பயணிகள் கப்பல் கன்டைனர் கப்பல்,  கப்பல்., ஆயில் கப்பல், கேஸ் கப்பல் வாகனங்கனை ஏற்றிசெல்லும் கப்பல் இப்படிப் பலப் பல…

இதில் எல்லாக் கப்பல்களும் எல்லா நாட்டு துறைமுகங்களுக்குள்ளும் சென்று விடுவதில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு.அதிலும் VLCC(Very large cruge carrier) போன்ற 3லட்சம் டன் எடைக்கும் அதிகமான கப்பல்கள் பெரும்பாலும் கரை தொடாமல் கடலில் நங்கூரமிட்டு  சரக்குகளை பரிமாறிக் கொள்வார்கள். அதே போன்ற கப்பலில் வேலை செய்கிறவர்கள் வெளியே போவது என்பது மிகவும் அரிதானதாகவே இருக்கும்..சில துறைமுகங்களில் கரையில் இருந்து சிறு படகை ஏற்பாடு செய்து அதில் போய் சில மணிநேரம் மட்டுமே துறைமுக நகரங்களையும் அழகிகளையும் வேடிக்கை பார்த்து வருவோம். பெரும்பாலும் அந்த நாட்டை கடலில் இருந்துதான் பார்க்க முடியும்..(கன்டைனர்,கார் கப்பல் விதிவிலக்கு)

நான் இந்த கப்பலுக்கு வந்து 4 மாசம் ஆகிறது.

இந்த 4 மாதத்தில் தென் கொரியா சைனா, தாய்லாந்த், மலேசியா, சிங்கப்பூர் இலங்கை, துபாய் என  கப்பல்  பயணித்துக் கொண்டே இருக்கிறது.  நான்கு மாதங்களில் 6 நாடுகளின் கடல் எல்லை வழியே பயணித்த போதும் இலங்கையில் மட்டுமே கால் வைக்க முடிந்தது..

இதை கேட்கவே ஆச்சரியாமாக இருக்கிறதா?

இதுதான் இங்கு யதார்த்தம்.

காலையில் காய்கறி கடை அக்காவிடம் வெண்டைக்காயை உடைத்துபார்த்தும், மீன் வாங்கும் போது அதன் செதில்களை நோண்டி அது சிகப்பாக இருக்கிறதா? கெட்டுப்போகாமல் இருக்கிறதா என பிரெஷ்ஷாக சாப்பிடும் மதிய உணவு இங்கு கிடையாது. கடலில்தான் இருக்கிறோம் ஆனால் நாங்கள் உண்ணும் மீன்கள் கூட இரண்டு, அல்லது மூன்று மாதங்கள் குளிர்பதன அறையில் வைத்தெடுக்கும்  மீன் தான்.

அவரவர்   தகுதிக்கு ஏற்ப வேலை.ஒரேதட்ப வெப்பநிலையில் வேலை இங்கு கிடையாது.ரஷ்யா போன்ற நாடுகளில் மைனஸ் டிகிரியில்  கால்பந்து மைதானம் போல பனியால் உரைந்து கிடக்கும் கடல்.

அரபு,ஆப்பிக்க நாடுகளில் வெயில் எம்மை கருவாடாய் காயவைக்கும். கடுமையான கடற்சீற்றத்திலும்,பயமறியாத கடல்கொள்ளையர்களாகட்டும் எல்லா சூழலிலும் வேலை செய்ய பழகிவிட்டவர்கள் நாங்கள்.

நாங்கள் சுத்தமான காற்றை சுவாசிப்பதாக சிலர் என்னிடம் சொல்வார்கள். இருக்கலாம்தான் ஆனால், அதிகமான TOXIC GAS சுவாசிப்பவர்கள் நாங்கள்தான்.

ஒரு கப்பலில்என் உடன் வேலைபார்த்தவனுக்கு வேலையின் போது கண்புருவத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இரத்தம் கட்டுபடுத்த முடியவில்லை. கரை சேர பத்துநாளாகும். உடன் இருந்த சீஃப்ஆபிசர்தான் அவருக்கு தெரிந்தவழியில்  தையல் போட்டு மருந்து வைத்து விட்டார். கரைக்குப் போன பின்னர் தாமதமான சிகிச்சையால் அவருக்கு கண் நீண்ட நாள் பிரச்சனையாக மாறியது.

பரந்த கடலுக்குள் ஒருகிலோ சாம்பலை கரைத்தால் என்ன ஆகிவிடப்போகிறது.?

எதுவும் ஆகப்போவதில்லை என்பது பொதுவான பதில்.

ஒரு விசயம் தெரியுமா?

கப்பலில் இருந்து எந்த பொருட்களும் கடலில் வீசி எறியப்படுவதில்லை. எறியக்கூடாது. அதற்கு கடல் சட்டம் அனுமதிப்பதில்லை.

கப்பலில் வீணாகும் காகிதங்கள்.ஆயில் துடைத்த துணிகள் INCINRETOR என்ற இயந்திரத்தில் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என்று தரம் பிரிக்கிறோம் அல்லவா கப்பலில் குப்பைகளை நீலம், கருப்பு, மஞ்சள், பச்சை.சிவப்பு, ஆரஞ்ச்,   வெள்ளை என தரம் பிரித்து அந்த சாம்பலை சாக்குபையில் அள்ளி  கரைசேரும் நாளில் அந்தந்த துறைமுகங்களில் கொடுத்து விடுவோம். அந்த குப்பைகளைக் கொடுக்கும் போது சில ஆயிரம் டாலர் கட்டணமும் கொடுக்க வேண்டும். காரணம் நாங்கள் கொடுப்பது வண்ண வண்ண குப்பைகள்.

கப்பலில் எல்லோருடைய பிறந்தநாட்களும் கேக் வெட்டி கொண்டாடப்படுவது வழக்கம்.பார்ட்டிகள் நடக்கும் அதில் விளையாட்டு போட்டிகள் அதிகம் இருக்கும்.தனிநபர் திறமைகள் அதிகம்  வெளிப்படும்.

ஞாயிறு எல்லா கப்பலிலும் பிரியாணிசெய்யப்படும்..ஊருக்கு போகும் நாட்களை பிரியாணி கொண்டு கணக்கிடுவது இங்கு வழக்கமான நடைமுறை.

“ஊருக்கு போக இன்னும் எத்தனை பிரியாணி” என்றுதான் கேட்போம்.

வேறு வேலைகளைபோல ஒரே மனிதர்களிடம் வேலைசெய்வது கிடையாது.கரையில் நாம் விரும்பாத மேலதிகாரியாக இருந்தாலும் சகித்து கொண்டு காலம்பூராவும் வேலைசெய்யும்  கதை எல்லாம் இங்கு கிடையாது.  நம்ம கான்ட்ராக்ட்  முடிந்தால் நாம போயிடுவோம். மேலதிகாரியின் ஒப்பந்தம் முடியும் போது அவர் போய் விடுவார்.

ஒரு ஒப்பந்தம் முடிந்த பின்னர்  அடுத்த கப்பல் புது மனிதர்கள்…..

சரி…கப்பல் ஏறிவிட்டோம்.சரியான நேரத்தில் இறங்கிவிட முடியுமா.?

நமது கான்ரெக்ட் முடியும் நாளில் நடுக்கடலில் இருப்போம்.

அடுத்து போகும் துறைமுகத்தில் சாத்தியமிருந்தால் இறங்கமுடியும்.அது இல்லையெனில் அடுத்த துறைமுகம்…

அது எப்போது எனதெரியாது… கடல் போலவே இந்த பயணங்களும் சில பல நேரங்களும் முடிவற்று நீளும்…

மார்ச் 27-ஆம் தேதி  சைனாவின் நான்ஷா துறைமுகத்தில் இருந்து கிளம்பினோம். கிளம்பும் போது ஊகான் மாகாணம் கொரோனாவால் முடக்கப்பட்டிருந்தது. நகரங்களின் பின்வாசல் வழியே  வந்து செல்கிறவர்கள் என்பதால் எந்த துறைமுகத்தில் இருந்தும் கிளம்புவதற்கு பிரச்சனை இருக்காது. நாங்கள் 2-ஆம் தேதி சிங்கப்பூரை அடைய வேண்டும். இதோ இந்த இரவு விடிந்தால் நாங்கள் சிங்கப்பூர் துறைமுகத்தில் இருக்க வேண்டும்.

ஆனால் நுழைய முடியவில்லை. அப்படியே இருக்கிறோம் மே ஐந்தாம் தேதி ஆகி விட்டது. வரவிருக்கும் 8-ஆம் தேதியாவது ஆஸ்திரேலியாவை நோக்கி எங்கள் கப்பல் கிளம்பியாக வேண்டும்.

இதை எழுதிமுடித்ததும் மொபைலை ஆன் செய்தேன்..

வாட்சப்பில் மகள் …..

அப்பா டியூட்டி முடிஞ்சாச்சா..?

ஆமா…

சாப்பிட்டாச்சா..?

ஆமா…

போன அம்மாட்ட கொடுக்கேன்…

சரி….

மனைவி வந்தாள்…

என்னங்க….

சொல்லு…..

“உங்க சம்பளக்காசு வந்துச்சு.வீட்டு வாடகை கொடுத்தேன். ஆட்டோக்காரருக்கு காசு கொடுத்தேன்.  அவரு போன மாசம் ஸ்கூல் சவாரி போகவில்லையே  வேண்டாம்ணு  சொன்னாரு…நான் ஒங்களுக்கு வருமானம் இல்லைல வைச்சிக்கோங்கணு கொடுத்தேன். .அறமனசோட வாங்கிட்டு போறாரு..”

சரி…நல்லது….அப்புறம்..?

“காலையில ஜவகர் அண்ணன் வந்தாங்க..கோட்டாறு ரயில்வே ஸ்டேசன் பக்கம் கொரானாவுல சாப்பாடு இல்லாம கஷ்டப்படுற மக்களுக்கு சாப்பாடு கொடுக்குறாங்களாம்…நீங்க சொன்னீங்கள்ள  அதான் நான் ஒரு ஐாயிரம் ரூபா கொடுத்தேன்….”என்றாள்.

“இதெல்லாம்தான் வாழ்க்கை.எனவே எனக்கிந்த  கப்பல் வேலை  எனக்கு பிடிச்சிருக்கு”

என்றேன்….

அவளுக்கு எதுவும்புரியவில்லை……..

நேற்று தான் ஜிப்சி படம் பார்த்தேன் அதில் ராஜுமுருகன் ஒரு கவிதை கோடிட்டிருப்பார்

இரு என்கிறது வீடு

வா என்கிறது  வானம்

இடையில் கிடந்து

வதைக்கிறது

இரைதேடும்

எழவெடுத்த வாழ்வு