இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த கவிதாவுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவை மறு ஆய்வு செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 117 கிலோ எடையுள்ள சோமாஸ்கந்தர் சிலை சேதமடைந்ததைத் தொடர்ந்து, புதிதாகச் சிலை செய்யப்பட்டது. அந்த சிலையில் தங்கம் சேர்ப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடியில் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதியன்று சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் ஆணையர் கவிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைதொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் கவிதாவைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு.
தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் அமர்த்தும்படி கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சிலைக் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 8) விசாரணைக்கு வந்தது. அப்போது, கவிதாவின் சஸ்பெண்ட் உத்தரவை நான்கு வாரங்களில் மறு ஆய்வு செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார் நீதிபதி.