ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நீளமாக அடுக்கிவைக்கப்பட்ட கலர் கலர் குடங்கள். குடங்களின் இறுதியில் ஒரு பெரிய குடிநீர் லாரி, அதை சூழ்ந்துள்ள பெண்கள். இக்காட்சிகள் கோடைகாலத்தில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காணக்கூடியது.

பருவமழை பொய்த்தது, சரியான மழையை சேகரிக்கத் தெரியவில்லை, ஏரி, குளங்களை தூர்வார வில்லை, குழாய்களை துறந்தால் காற்று வருகிறது, பல ஏரி குளங்கள் விளையாட்டு மைதானங்களும் வறண்டு கிடைக்கின்றன என பல புலம்பல்கள் வருடாவருடம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தால் கூட சென்னையில் மட்டும் மழையே பெய்வதில்லை. கடந்த சில வருடங்களாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் 1500 அடிக்கு போர்க்குழாய் அமைத்தாலும் நீர் கிடைப்பதில்லை. மழைநீரை சேகரிப்போம் மழைநீரை சேகரிப்போம் என்று ஆங்காங்கே கூக்குரல்கள் கேட்டாலும் மழை பெய்தால்தானே சேகரிக்கமுடியும் என்பது மக்களின் குரலாக உள்ளது.

குறிப்பாக சென்னையில் வியாசர்பாடி, கொடுங்கையூர், பெரம்பூர் போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் குடிநீருக்காக கடுமையாக பாதிக்கப்படுள்ளனர். 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை வரும் தண்ணீர்கூட மஞ்சள் நிறத்தில் வருகிறது என கவலைப்படுகிறார்கள்.

இந்நிலையில் சென்னைவாசிகளின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய முடியாமல் குடிநீர் வாரியமும் திணறிக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தை மட்டுமே நம்பியுள்ள மக்கள் தற்போது மழையை நம்பியுள்ளனர்.