பீகார் சித்தமரி மாவட்டத்தில் காவல்துறையினரால் சித்திரவதை அனுபவித்த இரண்டு கைதிகள் உயிரிழந்ததால் தலைமறைவாக இருந்து வரும் ஐந்து காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 6 அன்று ரம்டியா கிராமத்தில் மோட்டார் சைக்கிளை திருடியது மட்டுமல்லாமல் அதன் உரிமையாளரான ராகேஷ் குமார் என்பவரை கொலை செய்ததாக கூறி குஃப்ரன் அலம் மற்றும் தஸ்லிம் அன்சாரி இருவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து குஃப்ரன் அலம் தந்தை கூறுகையில்,”உள்ளூர் சாக்கியா காவல் நிலையத்திலிருந்து ஐந்து போலீஸ் ஜீப்கள் வந்தன, என் மகனுடன் அன்சாரியையும் விசாரணைக்காக கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் ஊர் மக்களுடன் காவல் நிலையம் சென்றபோது அங்கு அவர்கள் இருவருமே இல்லாததால் வீடு திரும்பினோம். ஒரு சில மணி நேரம் கழித்து மீண்டும் காவல் நிலையத்திற்குச் சென்றோம். உள்ளூர் காவல் அதிகாரி ஒருவர், அவர்கள் இருவரும் தும்ரா காவல் நிலையத்தில் உள்ளனர் என்றார். நாங்கள் தும்ரா காவல் நிலையம் சென்றபோது எங்களை சதார் மருத்துவமனைக்கு சென்று பார்க்கச் சொன்னார்கள். அங்கு சென்றப்போது அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாகவும், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். நாங்கள் உள்ளே அனுமதிக்கப்படவே இல்லை. மறுநாள் தான் அவர்கள், எங்கள் பிள்ளைகளின் சடலங்களை எங்களிடம் ஒப்படைத்தனர்,” என்றார்.
மேலும் அவர்கள் இருவருக்கும் இறுதி சடங்கு செய்யும்பொழுது, காவல் துறையினரால் அவர்கள் இருவரின் உடல் முழுவதும் இரும்பு கம்பியால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் இருப்பதை கண்டுள்ளனர். பின்னர் அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து இதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் தலைமறைவாயினர். இந்நிலையில் இவர்கள் ஐவரையும் இடைநீக்கம் செய்யக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது.