கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 தனிப்படைகள் அமைத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், துடியலூர் அருகே பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்த தம்பதியினர் சதீஷ்- வனிதா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் (மார்ச் 25) வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது வெகுநேரமாகியும் சிறுமியை வீடு திரும்பாததால் அனைவரும் தேடியுள்ளனர்.
ஆனால் சிறுமி கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் தடாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைதொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று காலையில் சிறுமியின் வீட்டிற்கு அருகே கத்தியால் அறுபட்ட காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சிறுமியின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் இன்று காலை வெளியான சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையில் கொலை பிரிவுடன், போக்சோ பிரிவையும் தடாகம் காவல் துறையினர் சேர்த்தனர். சந்தேகத்தின் அருகில் உள்ள வீட்டை சேர்ந்த விஜயகுமார் உட்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பாகக் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யக் கோரி, தூடியலூர் பேருந்து நிலையம் முன்பு சிறுமியின் உறவினர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சிறுமி கொலைக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று சிறுமியின் தாயார் மாதர் சங்க நிர்வாகிகளுடன் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.