இந்தாண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்ற ‘Period.End of Sentence’ படத்தில் நடித்த உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சென்ற சுமன் மற்றும் சினேகா ஆகியோருக்கு சரியான சம்பளம் வழங்கப்படாததால் தாங்கள் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் (NGO) இருந்து விலகியுள்ளனர்.
Period. End of Sentence:
கிராமப்புறத்திலுள்ள ஏழை எளிய பெண்களும் நாப்கின் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மலிவு விலையில் நாப்கின் தயார் செய்யக்கூடிய இயந்திரத்தை உருவாக்கிய கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் கதை இது. நாப்கின் தயாரிக்கும் பணியில் பெண்களை ஈடுபடுத்துவதில் இருக்கும் சமூகத் தடைகள், அப்படியே பெண்கள் வந்தாலும் அதனை அவர்கள் வெளியில் சொல்ல காட்டும் தயக்கங்கள் போன்றவற்றை எல்லாம் மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் இந்த ஆவணப்படம். இது , 2019-ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றது. இந்த படத்தில் நடித்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் பரிசாக உத்திரப்பிரதேச அரசால் வழங்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் நடித்த சுமன் மற்றும் சினேகா ஆகிய இரண்டு பெண்கள் ஒரு என்.ஜி.ஓ-வில் வேலை செய்து வந்தனர். தற்போது அந்த என்.ஜி.ஓ-வில் சரியான சம்பளம் வழங்கப்படாததால் அந்த இரண்டு பெண்களும் தங்கள் வேலைவிட்டு நின்றனர்.
இதுகுறித்து தனியார் நிறுவனத்திற்கு அவர்கள் கொடுத்த பேட்டியில், “கடந்த இரண்டு மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. நாங்கள் நடித்திருந்த Period. End of Sentence படம் ஆஸ்கார் விருது பெற்றதால், முதல்வர் எங்கள் இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். அந்தப் பணத்தை என்.ஜி.ஓ-வில் தரச் சொல்லி கேட்டார்கள். அப்படி பணத்தை தவில்லையென்றால் எங்களை வேலைவிட்டு நிற்கச் சொன்னார்கள். இதுவரை என்.ஜி.ஓ-வில் எந்த சம்பள உயர்வையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் கொடுக்கிற சம்பளத்தைக்கூட கொடுக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்? நாங்கள் ஒரு லட்ச ரூபாய் பணத்தை என்.ஜி.ஓ-வுக்கு கொடுக்காததால் எங்களுக்கு சம்பளம் வழங்காமல் இருந்தார்கள். அதனால், தற்போது அந்த என்.ஜி.ஓ-வில் இருந்து விலகியிருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.