டிக்டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்ய விதித்த தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், டிக்டாக் செயலிமூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகவும், அதனால் அந்தச் செயலிக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிக்டாக் செயலியைத் தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, டிக்டாக் செயலிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்தது.
இதைதொடர்ந்து, பிளே ஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோர் தளங்களிலிருந்து டிக்டாக் செயலியை நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசுக் கடிதம் அனுப்பியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கூகுள் தனது பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை நீக்கிவிட்டன.
இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டிக்டாக் செயலிக்கான தடையை இடைக்காலமாக ரத்து செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மேலும், டிக்டாக் செயலிமீதான தடைகுறித்து வரும் 24ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை முடிவெடுக்க வேண்டும் எனவும் தவறினால் தடை உத்தரவு நீக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதைதொடர்ந்து, இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்ற குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் டிக்டாக் செயலியின் தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், டிக்டாக் செயலியில் ஆபாச மற்றும் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்ற தடைக்குப் பின் சுமார் 6 மில்லியன் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.