தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்.
பாரதியின் வரிகளுக்கேற்ப 6000 வருடப் பழமைவாய்ந்த தமிழ் மொழி செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட நாள் இன்று. 2004-ஆம் ஆண்டு இதே நாளில் மத்திய அரசு தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்தது. தமிழ் மொழி செம்மொழி என்ற அங்கீகாரத்தைப் பெற பல தமிழ் அறிஞர்கள் குரல் கொடுத்துள்ளனர், எத்தனையோ முறை பல்கலைக்கழகங்களில், தமிழ்ச் சங்கங்களில் இதற்கான தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளது. கால்டுவெல் காலம் தொட்டு தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தைப் பெற முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.
ஒரு மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அதன் இலக்கிய மற்றும் கலைப்படைப்புகளின் அடிப்படையில்தான் வழங்கப்படும். இலக்கியப் படைப்புகளின் தொன்மை, சொல்லப்பட்டுள்ள விதம், கருத்து, அந்த இலக்கியப் படைப்புகள் உருவான காலத்தில் உருவான கலைப் படைப்புகள் இவையனைத்தையும் வைத்துதான் ஒரு மொழி செம்மொழி என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. தவிரவும், பிற மொழியைச் சாராத தன்மை, பிறமொழிக் கூறுகளை அகற்றிவிட்ட பின்பும் சொந்த கலைச் சொற்களைக் கொண்டு தனக்கான சொற்களை உருவாக்கிக்கொள்ளும் தனித்தன்மை போன்ற பண்புகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கிரேக்கம், சீனம், இலத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், பாரசீகம், அரபு மொழிகள் உலக அளவில் செம்மொழிக்கான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன.
செம்மொழிக்கான தகுதிகளைப் பெற்றிருந்த தமிழ் மொழி பல வருட முன்னெடுப்புகளின் பின் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்ற தினம் இன்று.