இப்போது தற்கொலைகள் என்பது தொடர் நிகழ்வாக மாறிவிட்ட தருணத்தில் எவ்வளவு துயரப்படுகிறோமோ? அந்த அளவுக்கு அச்சப்படவும் வேண்டியிருக்கு. நமக்கு நெருக்கமான ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும்போது நம்மிடையே ஒரு குற்றயுணர்ச்சி எழுவதை தடுக்கமுடியாது. தற்கொலைக்கான காரணங்கள் எதுவாக இருப்பினும் நம்மால் ஏதும் செய்ய முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் கூட அந்த குற்றயுணர்ச்சியின் காரணியாக இருக்கக்கூடும்.
கடந்த காலங்களில் தற்கொலைகள் என்பது பெரும்பாலும் காதல் சார்ந்தே இருந்ததை மறுப்பதற்கில்லை. அதற்கு வர்ணம் மற்றும் வர்க்கமே காரணம். சாதிய மனோபாவத்தால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளே அதிகம் அதில் சில கொலைகள் தற்கொலைகளாய் ஆக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.
எங்களூரில் 70 – 80 களில் பால்டாயில்தான் தற்கொலைக்கான ஆயுதமாய் நம்பப்பட்டது அதற்கடுத்து அரளிச்செடிக்கும் அதில் இடமுண்டு.
“ஆசை வச்சேன் உன்மேல் மச்சான் அரளி வச்சேன் கொல்லையில” என்று பிரபலமான பாடலும் உண்டு.
அதற்கடுத்த காலங்களில் தற்கொலைகள் விவசாயிகள் பக்கம் திரும்பியது. உலகப் பொருளாதரத்தின் வரவால் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகளே. தன் பொருளுக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் பெரிதும் துயருற்றார்கள். ஒரு பக்கம் தண்ணீர்ப் பிரச்சனை இன்னொரு பக்கம் உரங்களால் நிலங்கள் பாழ்பட்டு விவாசயம் பொய்த்துப்போனது. அதையும் மீறி கடன்பட்டு விதைத்து பதரானவர்கள் ஏராளம். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்கள் கொத்து கொத்தாக தற்கொலை செய்து கொண்டதும் இங்கு நிகழ்ந்தது.
அடுத்த கட்டமாய் தற்கொலைகளுக்கான பெரும் காரணி கடன் சுமை. மீட்டர் வட்டி, கரண்ட், ராக்கெட் வட்டியென கந்து வட்டி கும்பலின் அராஜகப் போக்கால் தற்கொலைக்கு குடும்பம் குடும்பமாக பலியான சம்பவங்களும் இங்கு நடந்தேறியது.
இப்படித் தொடர்ச்சியாய் தற்கொலைகள் இங்கு நடந்தகொண்டேயிருக்கிறது. இப்போது மன உலைச்சலால் தற்கொலை என்பது பெருகிக்கொண்டிருக்கிறது. வேலை பளு காரணமாய் சில தற்கொலைகள் நடந்தாலும் அதையும்தாண்டி உறவுசிக்கலால் நடைபெறும் தற்கொலைகளே இப்போது அதிகம், காரணம் தங்களை யாரோ ஒருவரிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு அதிலிலிருந்து மீள முடியாமல் மரணிக்கும் போக்குதான் இன்றைய சூழலில் அதிகம் நடைபெறுகிறது.
எல்லோருக்கும் இப்போதைய தேவை காதுகள். தன் மகிழ்வை, துயரை யாரிடமாவது சொல்லிவிட வேண்டுமென்பதே.
நம்மிடம் மரபு சார்ந்து அந்த நடைமுறை இருந்துள்ளது. கோயில் என்பதே அத்தகைய நடைமுறையில் ஒன்று. கடவுள் காதுல போட்டுட்டேன், கடவுள் மேல் பாரத்தை இறக்கிவைத்துவிட்டேன் என சொல்ல கேள்விபட்டிருக்கிறோம். ஏன் நந்தியின் காதுகளில் சொல்வதை நாம் பார்த்திருக்கலாம். சொல்லமுடியாத துயர்களை இதுபோல் இறக்கிவைத்துவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள செய்துவிடுவார்கள். அவர்களுக்கு அதுவே பெரிய விடுதலை உணர்ச்சிகளைக் கொடுத்துவிடும். காதுகள் என்பது எப்போதும் தேவையாய் இருந்திருக்கிறது… இருக்கிறது. காதுகள் நம்பகத்தன்மையுடையதாய் இருக்கிறதா? என்பதை இங்கே நாம் கவனித்தாகவேண்டும். ஒருவரிடம் எதன் பொருட்டோ ஒரு நம்பிக்கையில் பேச ஆரம்பித்து ஒரு கட்டத்தில் நெருக்கமாகி எல்லாவற்றையும் சொல்லிவிடுவது, சொல்வதற்கு ஏதும் இல்லை என்ற நிலை வரும்போது அந்த நேரம் வரும் யாரோ ஒருவர் தன் காதை கொடுக்க மறுபடியும் ஒன்றிலிருந்து தொடங்குவது என ஒரு தொடர்கதையாகிறது. இதற்கு முன் காதை கொடுத்தவர் புறக்கணிக்கப்படும் போது அவர் முன்னவர் சொன்னதை பொதுவெளியில் அம்பலப்படுத்துவதை வாடிக்கையாக்குகின்றார். இப்படத்தான் இங்கு பல உறவுகளில் விரிசல் உண்டாகுகின்றன.
இங்கு காதுகள் பல நேரங்கள் வாய்களாக மாறிவிடுவதே இத்தற்கொலைகள் நடக்க வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. தன் பலவீனங்களை மற்றவரிடம் பகிரும்போது அதை அவர்கள் அவர்களின் பலமாக எடுத்துக்கொண்டு அத்துமீறல்களைத் தொடர அதன் வழியாகவும் தற்கொலைகள் நடக்கின்றன.
அதீத அன்பு என்பதே இங்கு பெரும் மனஉளச்சலை தருகின்றது. தான் யாரிடம் வேண்டுமானாலும் அன்பாய் இருக்கலாம் பேசலாம், பழகலாம் ஆனால் தன்னை சார்ந்த ஒருத்தர் தன்னைத்தவிர யாரிடமும் அன்பு செலுத்தவோ பழகவோ பேசக்கூடதென்பது இங்கு எழுத்தப்படாத விதியாய் இருக்கிறது. அதுதான் இங்கு பிரச்சனைக்கு வித்திடுகிறது. இதில் ஆண், பெண் வித்தியாசமில்லை. தனக்கென்று வருகையில் அது அதீத அன்பாகவும் தன்னைச் சார்ந்தவருக்கு வருகையில் அது சந்தேகமாகவும் உருமாறுகையில்தான் அது பல விவாதங்களை உண்டாக்கி மனஉளச்சலுக்கு ஆட்படுத்துகிறது.
எதிர்ப்பார்ப்பு என்ற ஒன்றே இங்கு அன்பு வைத்து சூதாட்டத்தை நடத்துகிறது. இதில் ஏற்படும் வெற்றி தோல்விகளே இம்மாதிரியான தவறான முடிவுகளை நோக்கி தள்ளுகிறது. அதன் பொருட்டே இத்தகைய தற்கொலைகள் நிகழ்ந்தவண்ணமிருக்கிறது.
அன்பு என்ற ஒன்று எல்லோராலும் கைவிடப்பட்ட இவ்வுலகில் இத்தகைய தற்கொலைகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஆகவே எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவோம்.