கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- நாள் # 22
15/04/2020, புதன்.
நீட்டிக்கப்பட்ட இரண்டாம் ஊரடங்கின் முதல் நாள்
காலை மணி 10 : 00
இதுக்கொரு END டே இல்லையா சார் என அனைவரும் கதறுமளவு இந்த ஊரடங்கும், என் கட்டுரையும் தொடர்வது கலக்கமூட்டத்தான் செய்கிறது. ஆனால் இயற்கை வலியதாச்சே ? அது யாரார்க்கோ வாய்ப்பையும் வழங்குகிறது, பறித்தும் நிர்மூலமாக்குகிறது. மிக அதிகமான அழுத்தத்திற்கு அனைத்து மாநிலங்களும் ஆளாகின்றன என்பது சமீபத்தையச் சேதிகளிலிருந்து புரிந்துக் கொள்ள முடிகிறது !
நம் மாநில அரசே பதிமூன்று வகையானத் தொழில்களுக்கு அனுமதி தர விரும்பி, முன்பே ஆலோசித்து அதைக் கைவிட நேர்ந்தது. ஏனெனில் அனுமதிக்குமுன் பல விஷயங்களை அரசு யோசிக்க வேண்டும். குறிப்பிட்ட தொழிற்சாலைகளை மட்டும் அனுமதித்தால், அது உடனடியாகச் செயல்பட்டு விடுமெனக் கணித்துவிடக் கூடாது. அதற்கான மூலப்பொருட்கள், அது வந்துபோக போக்குவரத்து, அது பெறப்படும் மாநில மாவட்டங்களின் அனுமதி, வேலையாட்கள், அவர்கள் பயணிக்க வாகனங்கள், அதற்கான அனுமதி, அவர்களுக்கு உணவு, தேநீர் வசதி, அது சாந்தோர்க்கு அனுமதி என்று ஒன்றைத் திறக்க நூறு அதுசார்ந்த தொழில்கள் துவங்க வேண்டும் !
அப்படித் துவங்கினால் கூட்டம் கூடும். அங்கு அரசு கொரோனா சார்ந்து இட்ட கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும். அது மீறப்பட்டால் இவ்வளவு நாள் அனைத்தையுமிழந்து நாம் அடைந்துக் கிடந்தது யாவும் வீணாகிப் போய்விடும் !
பிற்பகல் மணி 02 : 30
கர்நாடகஅரசும், பல தொழில்கள் முடங்கிக் கிடப்பதால் நிதிநிலை அடியாழத்துக்கு போய்விட்டதாக கதறுகிறது. எம்எல்ஏக்களை கோடிக் கணக்கில் வாங்கி ஆட்சிய பிடிக்கத் தெரியும், ஆனா இதுபோன்றச் சூழலில் எப்படி ஆட்சி நடத்துவதென்று எங்களுக்கு தெரியாதுஜி என எடியூரப்பா, மோடிஜியிடமும், அமித்ஜியிடமும் ஓவென அழுது அரற்றினாராம். தன்னிச்சையாக மாநில சுயாட்சி அதிகாரம் மூலம், பல இடங்களில் தொழில்கள் செயல்பட ஊரங்கைத் தளர்த்த அவர் முடிவெடுத்திருக்கிறாராம் !
கொரோனா உச்சகட்டமாக இருந்தச் சூழலிலும், அழிச்சாட்டியம் செய்து, செயற்கையாக கவிழ்த்து வாங்கிய மத்தியப்பிரதேச அரசின் நிர்வாக கதியோ, மூச்ச். அங்கு சுகாதார அமைச்சர் முதல், செயலாளர் வரை அனைவருக்கும் தொற்றாம். குஜராத் முதல்வர் பாவம், தம்மைத் தாமே தனிமை படுத்திக் கொண்டிருக்கிறாராம் !
ஒட்டுமொத்தக் காவி கூட்டமே தள்ளாடிக் கிடக்கிறது. ஆனா கொரோனாவின் தாண்டவம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்பதுதான் அவர்களுக்கு இன்னமும் கிலியூட்டும் சேதி !
மாலை 04 : 00 மணி
மத்திய உள்துறை அமைச்சகமும் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின், பல தொழில்களுக்கு அனுமதி கொடுத்துவிடலாம் என்கிற முடிவிலிருப்பதாகவே சேதிகள் வந்துக் கொண்டிருந்தன. மகிழ்ச்சிதான். ஆனால் இவர்கள் முறையாக அதைச் செய்வார்களா என்பதில்தான் சிக்கல். ஏற்கனவே எந்த ஏற்பாடுகளுமின்றி திடுதிப்பென்று மூடி, பல்லாயிரம் மக்களை நடக்கவிட்டும், பல லட்சம் மக்களைப் பட்டினி போட்டும் வதைத்த அரசு. இப்ப திறந்துவிட்டு, திரும்ப திடுக்கென்று மூட வேண்டிய நிலை வந்தால் கடுங்குழப்பம் நேரிடலாம் !
எதுனாலும் நிதானமா யோசிச்சு செய்ங்கஜி.
என்னாது நிதானம் உங்களுக்கு பிடிக்காத வார்த்தையா ? அதுசரி !
தொடரும்