உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று திருமணமாகாத கர்ப்பிணி பெண் ஒருவர் வீடியோவை பார்த்து சுயபிரசவம் செய்ய முயன்றதால் தாயும் சேயும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோரக்பூரில் உள்ள பிலாந்த்புர் என்னும் நகரில் 25 வயது நிரம்பிய திருமணம் ஆகாத கர்ப்பிணி பெண் ஒருவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். இவர் போட்டித் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். நான்கு ஆண்டுகளாகவே கோரக்பூரில் வாழ்ந்து வரும் இவர் உத்திர பிரதேசத்தில் பஹ்ராய்ச் மாவட்டதைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த ஞாயிறு அன்று தன் மொபைல் போனில் வீடியோவைப் பார்த்து தனக்குத் தானே பிரசவம் பார்க்க முயற்சித்ததால் தாயும் சேயும் இறந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் வீட்டிலிருந்து கதவு வழியாக ரத்தம் வருவதை கண்ட அண்டை வீட்டார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, அப்பெண் ரத்த வெள்ளத்தில் அருகில் மொபைல் போனுடன் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், “மரணமடைந்த பெண்ணின் பெயரை குறிப்பிட இயலாது, அவரிடமிருந்து கிடைத்த மொபைல் போனில் இருந்து தகவல்களைப் பெற முயற்சித்து வருகிறோம். அப்பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். அவர் சடலத்தின் அருகிலிருந்து கைப்பற்றப்பட்ட மொபைலில் பிரசவம் செய்வது குறித்து வீடியோவை பார்த்து சுயபிரசவம் செய்துகொள்ள முயற்சித்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு தெரிய வரும் அவரின் உயிர் பிரிந்த நேரத்தையும், அப்பெண்ணின் மொபைல் டேடா பயன்பாட்டையும் வைத்து தான் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும். இதுகுறித்து அவர் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளோம். இதுவரை அவரின் பெற்றோர் எந்த புகாரும் அளிக்காததால், இன்னும் முதல் தகவல் அறிக்கையை(FIR) தாக்கல் செய்யாமல் உள்ளோம்” என்று தெரிவித்தனர்.
இதற்கு முன்னர், கடந்த 2018ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த கிருத்திகா – கார்த்திகேயன் தம்பதியினர் இயற்கை மருத்துவ முறையில் யூடியூப் வீடியோவைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில், கிருத்திகா உயிரிழந்தார். அப்போது தமிழகத்தில் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்கும் வழக்கம் சர்ச்சைக்குள்ளானது.