மனைவியைச் சூதாட்டத்தில் பந்தயம் வைத்து ஆடி நண்பர்களிடம் தோற்றுப்போன கணவர், தனது மனைவியை நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்துள்ளார்.
மது பழக்கமும், சூதாட்டமும் உடலுக்கும் வீட்டிற்கும் மற்றும் நாட்டிற்கும் கேடு என்பதை அறிந்தும் அந்த பழக்கத்தைச் சிலர் கடைப்பிடித்துத்தான் வருகிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதங்களும் ஏராளம். அப்படியொரு விபரீதமான சம்பவம்தான் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் மது பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிமையானவர். சூதாட்டத்திற்கு அடிமையாகி பணம் முழுவதையும் இழந்த பிறகுத் தனது மனைவியை பணயமாக வைத்து சூதாட்டம் ஆடியுள்ளார்.
பந்தயத்தில் தோற்றுவிட்டதால், மனைவியைத் தனது நண்பர்களிடம் அழைத்துச் சென்று அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய அந்த நபர் உடந்தையாக இருந்துள்ளார். தனது கணவர் ஒரு குடிகாரன் என்றும், சூதாட்டத்தின் போது தன்னை பணயம் வைத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.
அந்த புகாரில், “எனது கணவரின் நண்பர் அருண் மற்றும் உறவினர் அனில் ஆகியோர் அடிக்கடி எங்கள் வீட்டிற்குக் குடி மற்றும் சூதாட்டத்திற்காக வருவார்கள். ஒருநாள், அனில் மற்றும் அருணுடன் என்னுடைய கணவர் சூதாட்டம் ஆடிக்கொண்டிருக்கும்போது பணத்தை முழுவதுமாக இழந்தார். பந்தயத்தில் என்னைப் பணயம் வைத்து ஆடினார். அதில், என் கணவர் தோற்றுப்போனதால், அருணும் அனிலும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்.” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் தனது மாமாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவளைப் பின்தொடர்ந்து சென்று தான் செய்தது தவறு என மன்னிப்பு கோரியுள்ளார் அவரது கணவன்.
கணவன் தன்னிடம் மன்னிப்பு கேட்ட பிறகு, அப்பெண்ணும் அவருடன் காரில் திரும்பிச் சென்றார். அவர்கள் செல்லும் வழியிலேயே அவரது கணவர் காரை நிறுத்தி, தனது மனைவியை நண்பர்கள் மீண்டும் ஒரு முறை பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரைப் பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாஃபராபாத் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கருதி, கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்காகப் பதிவு செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், முதல் தகவலறிக்கை தாக்கல் செய்து அதன் நகலை நீதிமன்றத்தில் ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.